SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெளிச்சத்துக்கு வராத பெண்களின் கண்ணீர்

2017-03-20@ 15:12:43

நன்றி குங்குமம் தோழி

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் எழுந்த பேரலையில் தமிழக விவசாயிகளின் தொடர் மரணம் குறித்தான செய்தி அதிக கவனம் பெறவில்லை. வட கிழக்குப் பருவமழை பொய்த்ததாலும், காவிரி நதி நீர் பங்கீட்டுச் சிக்கலாலும் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 13 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தற்கொலை, மாரடைப்புக்கு ஆளாகியிருக்கின்றனர். விவசாயிகள் மரணம் என்பது இந்த நூற்றாண்டின் துயரம் என்றே சொல்லலாம். இறந்து போன விவசாயிகளின் குடும்பம் எத்தகைய நிலைக்கு ஆளாகியிருக்கும்? குறிப்பாக கணவனை/ தந்தையை இழந்த பெண்களின் நிலை எத்தனை வருத்தத்துக்குரியது!

அப்பெண்களின் துயரும், கண்ணீரும் வெளிச்சத்துக்கு வருவதே இல்லை. பெண் விவசாயிகளின் முன்னேற்றத்துக்காக இந்தியா முழுவதும் இயங்கி வரும் மகிளா கிசான் அதிகார் மஞ்ச் என்கிற அமைப்பின் தமிழக நிறுவனமான விவசாய உரிமைகளுக்கான பெண்கள் கூட்டமைப்பு விவசாயிகள் மரணம் குறித்து களத்தில் இறங்கி ஆய்வு மேற்கொண்டுள்ளது. இது குறித்த கலந்துரையாடல் சென்னையில் நடைபெற்றது.

அதில் பேசிய அவ்வமைப்பின் மாநிலத்தலைவர் ஃபாத்திமா பெர்னாட், “விவசாயிகள் மரணத்தின் பின்னணி பற்றியோ, விவசாயப் பெண்களின் நிலை குறித்தோ இங்கே பெரிய அளவில் பேசப்படவில்லை. விவசாயிகள் மரணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது ஒரு அரசின் கடமை. ஆனால் இங்கோ சூழல் அப்படியானதாக இல்லை. எங்கள் அமைப்பு சார்பில் 7 பேர் கொண்ட குழு ஜனவரி 7ம் தேதியிலிருந்து 17ம் தேதி வரை பத்து நாட்கள் திருவண்ணாமலை, விழுப்புரம், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுகை ஆகிய மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டோம்.

விவசாய சங்கங்களுடன் கலந்து பேசி விவசாயப் பிரச்னைகளைப் புரிந்து கொண்டோம். இறந்த விவசாயிகளின் குடும்பத்தைச் சந்தித்து அவர்களின் துயரத்தைக் கேட்டறிந்தோம். பெண்கள் யாரையாவது சார்ந்திருக்க வேண்டிய நிலைதான் இங்கு உருவாக்கப்பட்டிருக்கிறது. விவசாயத்தைப் பொறுத்த வரை ஆண்களைக் காட்டிலும் பெண்களின் பங்களிப்பே பெரிதளவில் இருக்கிறது. இந்திய அளவில் 45 சதவிகித பெண் விவசாயிகள் இருப்பதாக அரசின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் 90 சதவிகித உழைப்பை பெண்களே செலுத்துகின்றனர். அப்படியிருந்தும் பெண் விவசாயிகளுக்கு முறையான அங்கீகாரம் வழங்கப்படவில்லை. விவசாயிகள் என்றால் ஆண்கள்தான் என்கிற சூழல்தான் இங்கு நிலவுகிறது. பெண்களும் விவசாயிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை நாங்கள் பிரதானப்படுத்துகிறோம். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நாங்கள் மேற்கொண்ட கள ஆய்வில் பல வேதனைக்குரிய உண்மைகள் தெரிய வந்தது. சொந்தமாக நிலம் இல்லாத விவசாயிகள் நிலத்தை குத்தகைக்கு எடுத்துதான் விவசாயம் புரிகின்றனர்.

நிலத்தை குத்தகைக்கு எடுப்பதுமே கூட வாய் வார்த்தைகளில்தானே தவிர அதற்கு முறையான எழுத்து ரீதியான ஆவணங்கள் எதுவும் இல்லை. இதனால் குத்தகைதார விவசாயிகளால் வங்கிகளிலும், கூட்டுறவு சொசைட்டிகளிலும் விவசாயத்துக்கென கடன் பெற முடிவதில்லை. எனவே தனிநபர்களிடம் கடன் பெறும் சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். மழை பெய்து விடும், அணையிலிருந்து நீர் திறக்கப்படும் என்கிற நம்பிக்கையில் லட்சங்களில்  கடன் வாங்கி நடவு செய்த நிலையில் வானம் பொய்த்துப் போகும்போது அது பேரிடியாய் வந்து விழுகிறது.

கடன் சுமையை எதிர்கொள்ள முடியாமல் குடும்பமே தத்தளிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறது. பெண்களுக்கு ஆண்கள் தைரியம் சொல்கிறார்கள். ஆனால் அவர்களின் வேதனையை யாரிடமும் வெளிக்காட்டுவதில்லை. இதனால் ஏற்படும் மன அழுத்தத்தின் விளைவாக ஒன்று தற்கொலை முடிவை எடுக்கின்றனர்... இல்லையெனில் மாரடைப்பின் காரணமாக மரிக்கின்றனர். தமிழகத்தில் நடந்த விவசாயிகள் மரணம் இப்படியாகத்தான் நிகழ்ந்திருக்கிறது. இறந்த விவசாயிகளின் குடும்பங்களை சந்தித்துப் பேசினோம்.

கணவனை இழந்து, மனநலம் பாதிக்கப்பட்ட மகனை வைத்துக் கொண்டு சிரமப்படும் தாய், கணவன் வாங்கிய கடனை அடைக்கவியலாமல் தன் மகளுடன் தினம் தினம் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் மற்றொரு தாய் என பல சோகங்களைப் பார்த்து விட்டு வந்தோம். இவர்கள் மீண்டெழ வேண்டும். அரசுதான் அதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்’’ என்கிறார் ஃபாத்திமா பெர்னாட்.

‘‘விவசாயிகள் மரணத்துக்குப் பருவநிலைமாற்றம் முக்கியப் பிரச்னையாக இருக்கிறது. மழை பெய்து கெடுக்கிறது இல்லையென்றால் பெய்யாமல் காய்ந்து கெடுக்கிறது. சூழலியல் சீர்கேடுகளால்தான் இத்தகைய பிரச்னையை நாம் சந்திக்க நேரிட்டது. விவசாயிகளின் மரணத்துக்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். ஏனென்றால் நீர் மேலாண்மை ஒழுங்காக மேற்கொள்ளப்பட்டிருந்தால் இந்த மரணங்கள் நிகழ்ந்திருக்காது. நீர் மேலாண்மை குறித்து அரசுக்கு அக்கறை துளியளவும் கூட இல்லை.

எத்தனையோ ஏரி, குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டும், தூர்வாரப்படாமலும் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. குளிர்பானம் மற்றும் பீர் நிறுவனங்களுக்குத் தண்ணீரை தாரை வார்த்து விட்ட அரசு விவசாயிகள் நலனைக் கருத்தில் கொள்ளவே இல்லை. மணல் கொள்ளையைத் தடுக்கவும் போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. சமூகக்காடுகள் என யூகலிப்டஸ் மற்றும் கருவேல மரங்களை வளர்க்கிறார்கள். அவை நிலத்தடி நீரை பெருமளவில் உறிஞ்சுகின்றன.

இதன் காரணமாகவும் நிலத்தடி நீர் மட்டம் குறைகின்றது. பொதுப்பணித்துறை, குடிநீர் வடிகால் வாரியம் ஆகியவை என்னதான் செய்கின்றன? அரசுத் துறைகளும் நீர் மேலாண்மையில் அக்கறை செலுத்துவதில்லை. தன்னார்வத்தோடு இளைஞர்கள் மேற்கொள்ளும் ஏரி, குளங்கள் தூர்வாருவதை ஊக்குவிப்பதுமில்லை. நீர் மேலாண்மை ஒரு புறம் என்றால் காவிரி நதிநீர் பங்கீட்டுச் சிக்கல் டெல்டா மாவட்ட விவசாயிகளை பலியெடுக்கிறது. 180 நாட்களுக்கு கர்நாடக அரசு மேட்டூருக்கு காவிரி நீரைத் திறக்க வேண்டும் என்பது ஆணை.

இருந்தும் 20 நாட்கள்தான் திறக்கப்படுகின்றன. ‘சோழநாடு சோறுடைத்து’ என்று சொல்லப்பட்ட பகுதிகள் இன்றைக்கு பரிதாபகர நிலையில்தான் இருக்கின்றன. வெறும் அரசியல்தான் செய்கிறார்களோ தவிர ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்யவில்லை. பருவமழை பொய்த்துப் போனதற்கு அரசு தரும் இழப்பீடு ஏக்கருக்கு 5 ஆயிரம் ரூபாய். நட்டத்தை இந்தத் தொகை எந்த அளவிலும் சரிக்கட்டாது.

ஏக்கருக்கு 25-30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை நாங்கள் முன் வைக்கிறோம். குத்தகைதாரர்களுக்கு இழப்பீடு கிடைப்பதில்லை. அரசியல் ரீதியிலாக செல்வாக்குள்ளவர்களைத் தவிர எளிய விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைப்பதே பெரும்பாடாக இருக்கிறது. இச்சூழல் மாற வேண்டும். பெண் விவசாயிகளையும் விவசாயிகளாக அங்கீகரிக்க வேண்டும். அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி, விவசாயிகளுக்கான வங்கிக் கடன் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் வழங்கப்பட வேண்டும்.

இறந்து போன விவசாயிகளின் குடும்பத்துக்கு நல்ல தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும். ஆந்திராவில் 6 லட்சம் ரூபாய் தெலுங்கானாவில் 7 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 90 சதவிகிதம் சிறு-குறு விவசாயிகள்தான் உள்ளனர். ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிக்கே இவர்கள் ஏராளம் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. எனவே அரசு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும். ஒருமைக் கலாச்சாரத்தைத்தான் அரசு ஊக்குவிக்கிறது. விவசாயத்தில் பன்மைக் கலாச்சாரம்தான் ஆரோக்கியமானது.

எனவே அரசு பன்மைக் கலாச்சாரத்தை ஊக்குவிக்க வேண்டும். இது போன்ற பல கோரிக்கைகளை முன் வைத்து தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பெண் விவசாயிகளின் நலனுக்கான பணிகளை மேற்கொள்ளவிருக்கிறோம்’’ என்கிறார் இந்த அமைப்பைச் சேர்ந்தவரும் ஆய்வாளருமான கீதா நாராயணன். இறந்த விவசாயிகளில் ஒருவரான தங்கவேலுவின் மகள் கவிதாவிடம் பேசினேன்.

‘‘திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பக்கத்துல தோக்கவாடிதான் என் சொந்த ஊர். எனக்கு 3 பெண் குழந்தைகள். என் கணவர் இறந்துட்டதால என் அம்மா, அப்பா கூடத்தான் இருந்தேன். அப்பா 2 ஏக்கரை குத்தகைக்கு எடுத்து ஓட்டினாரு. 2015ல என் நகையையெல்லாம் அடமானம் வெச்சு ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கி சோளம் போட்டார். செய்யாறுல தண்ணி வராததால விதைச்ச சோளம் காஞ்சு போச்சு. காஞ்சு போன சோளத்தை மாட்டுக்குத் தீனியாப் போட்டோம்.

அடுத்த வருசமும் அதே மாதிரிதான் தண்ணி வரும்னு நினைச்சு கடன் வாங்கி நெல்லு போட்டாரு. தண்ணி இல்லாம நெல்லும் காஞ்சு போகவே அவர் மனசு விட்டுட்டார்.  சோளத்துக்கு வாங்கின கடனே அடைக்கலை. இந்த நிலைமைல கடன் வாங்கி நெல் போட்டும் தண்ணி இல்லாம காஞ்சு போனதப் பார்த்து நெஞ்சப் பிடிச்சுக்கிட்டு உட்கார்ந்தவர்தான்... அப்பாவோட காரியத்தன்னைக்கே கடங்காரங்க வந்து நின்னுட்டாங்க. என் குழந்தைகளோட நானும், என் அம்மாவும்தான் இருக்கோம். கடங்காரங்களுக்கு பதில் சொல்ல முடியாம தவிச்சுக்கிட்டிருக்கோம். அரசாங்கந்தான் எங்களுக்கு ஏதாச்சும் பண்ணணும்’’ என்றார் அழுதுகொண்டே.

- கி.ச.திலீபன்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்

lowdosenaltrexone org is naltrexone addictive naltrexone nausea

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • children_protestt11

  ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் - பிரசாரத்துக்கு சிறுவர்களை ஈடுபடுத்தும் அரசியல் கட்சிகள்

 • 2500_type_idlyy

  உலக இட்லி தினம் - சென்னையில் 2500 வகையான இட்லிகளின் கண்காட்சி நடந்தது

 • 30-03-2017

  30-03-2017 இன்றைய சிறப்பு படங்கள்

 • FLIHJTarestre

  செம்மரக்கட்டை கடத்தலில் 6 மாதம் தலைமறைவான விமான பணிப்பெண் கைது: கொல்கத்தாவில் சிக்கினார்

 • farmersSUPPORtstuMAR

  விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் மாணவர்கள் கடலில் இறங்கி போராட்டம்