SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடலும் காதலும்

2017-03-20@ 15:08:00

நன்றி குங்குமம் தோழி

கி.பி.207ல் ரோம் நாட்டை ஆண்ட இரண்டாம் கிளாடியஸ், ரோமானிய வீரர்கள் பிரம்மச்சாரிகளாக இருந்தால் சலனங்கள் எதுவும் இல்லாமல் முழு ஆவேசத்துடன் போர் புரிவார்கள் என கருதினார். ஆகவே படையில் சேரும் இளைஞர்களுக்கு ‘திருமணம் ஆகியிருக்கக் கூடாது; காதலிக்கக்கூடாது!’ என சட்டம் இயற்றினார் மன்னர். காதலை எப்படி ஒதுக்கி வைக்க முடியும்? வீரர்கள் ரகசியமாகக் காதலித்தார்கள். அவர்களை ஆதரித்த வாலன்டைன் என்னும் பாதிரியார் இளைஞர்களுக்கு ரகசியமாக திருமணம் செய்து வைத்தார். விஷயம் தெரிந்து, பாதிரியார் சிறையில் தள்ளப்பட்டார். ஆனால், பாதிரியாராலேயே காதலிலிருந்து தப்ப முடியவில்லை.

சிறை அதிகாரியின் பார்வை இழந்த மகள் அவருக்கு பணிவிடை செய்ய, காதல் மலர்ந்துவிட்டது. ‘இறைவா! இந்தப் பெண்ணுக்கு பார்வை கொடு!’ என்று வேண்டி சிறையில் தவம் இருந்தார் வாலன்டைன். பெண்ணுக்குப் பார்வை கிடைத்தது. இதையெல்லாம் கேள்விப்பட்ட மன்னர் கிளாடியஸ் கோபம் கொண்டு பாதிரியாரின் தலையைச் சீவும்படி ஆணையிட்டார். அதே ஆண்டு பிப்ரவரியில் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர் நினைவாகக் கொண்டாடப்படுவதுதான் ‘வாலன்டைன்ஸ் டே! என்று கூறப்படுகிறது. இதுபோல காதலர் தினம் குறித்து பல்வேறு கதைகள் உண்டு.

சங்க இலக்கியங்களிலும் கூட காதல் மணம் பற்றி கூறப்பட்டுள்ளது. பழந்தமிழர் காதலைப் போற்றியுள்ளனர். ‘உடன் போதல்’ திருமணத்திற்கான ஒரு கவுரவமான வழி என போற்றப்பட்டுள்ளது. வள்ளுவர் காமத்துப்பாலில் அன்பின் ஆழத்தைப் புலப்படுத்தியுள்ளார். ‘குறிப்பு அறிதல்’ என்ற அதிகாரத்தில் ‘கண்ணொடு கண்இணை நோக்கு ஒக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும்இல’ என்கிறார்.

(காதலர் இருவரின் கண்களும் பார்வையால் ஒன்றாகி விட்டால் அங்கே வாய்ப்பேச்சு தேவையில்லை). ‘காதல் சிறப்பு உரைத்தல்’ என்ற அதிகாரத்தில் ‘உடம்பொடு உயிரிடை என்னமற்று அன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு’ என்கிறார். (எனக்கும் என் மனைவிக்கும் உள்ள தொடர்பு உடம்புக்கும், உயிருக்கும் உள்ள தொடர்பு போன்றது). இப்படி காதலை பெருமைப்படுத்தியுள்ளனர் முன்னோர்கள். நாகரிக வளர்ச்சியில் அழிந்து போன பழமைகளில் வளர்ந்துகொண்டே வருகிறது காதல் மட்டும்.

காதலர்களின் தாய் யாரென  இன்றைய காதலர்களிடம் கேட்டால் கடல் என்றுதான் பதில் கிடைக்கிறது. அப்படி என்னதான் தொடர்பு இருக்கும் இந்த கடலுக்கும் காதலுக்கும்? விவரிக்கிறார் கடலோடும் காதலரோடும் புழங்கும் வேர்க்கடலை வியாபாரி சங்கர். ‘‘சென்னையின் ஒரு முக்கிய அடையாளம் மெரினா கடற்கரை. ஆனால் மெரினாவின் அடையாளம் காதலர்கள்தான்” என்கிறார் சங்கர்.

‘‘கடும் வெயில் என்றாலும், மழை என்றாலும் காதலரின் வருகை இங்கு குறைந்ததே இல்லை. எந்த காலகட்டத்திலும் காதலர்கள் இல்லாத ஒரு சூழலை இந்தக் கடல் சந்தித்ததும் இல்லை. சுடும் மண்ணிலும் சூடாக சுண்டல் சாப்பிடும் காதலர்கள் இல்லை என்றால் எங்களுக்கு வருமானம் இல்லை. இங்கு வரும் காதலர்கள் சிலர் சண்டையிட்டுக்கொண்டே கண்கள் கலங்க வருவதைப் பார்த்து இருக்கிறேன்.

ஆனால் போகும்போது என்ன மாயம் நிகழுமோ? கவலை மறந்து சிரித்தபடி செல்வார்கள். அவர்களை சேர்ப்பதற்கு என்னதான் பஞ்சாயத்து நடத்துவாளோ இந்த கடல் தாய்! கடற்கரையில் கரையைத் தொட்டு கரைந்து போகும் அலைகளுக்கும் ஒரு காதல் கதை உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா’’ என்று கேட்டுவிட்டுத் தொடர்கிறார். ‘‘நான் சிறு பிள்ளையாக இருந்தபோது என்னுடைய பாட்டி கதை ஒன்றை சொன்னார். முதலில் வருவது பெண் அலை என்றும், பின்னே துரத்தி வருவது ஆண் அலை என்றும் சொல்வார்.

எதற்காக ஆண் அலை பெண் அலையை துரத்தி வருகிறது என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்னார்... இரண்டு அலைகளும் நல்ல நண்பர்களாக ததும்பிக்கொண்டிருந்தனராம். ஒரு நாள் ஆண் அலை பெண் அலையிடம் காதலிப்பதாக சொன்னதாம். கோபம் கொண்ட பெண் அலை நான் கரைக்கு செல்வதற்கு முன்பு நீ என்னை பிடித்து விட்டால் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்றதாம். ஆனால் இன்று வரை துரத்திக்கொண்டுதான் இருக்கிறது.

ஆனால் பிடித்தபாடில்லை என்றும், அலைகள் இப்படித்தான் தோன்றின என்றும் ஒரு கதையை சொன்னார். இதனால்தான் என்னவோ கடலும் காதலும் ஒரு பந்தமாகவே இருக்கிறதுபோலும். காலம் காலமாக நாங்கள் கடலில்தான் தொழில் செய்து வருகிறோம். மீன் பிடிப்பது,  கடலை விற்பது என்று கடலோடு ஒன்றிணைந்து இருக்கிறோம். கடல் எங்கள் தாய். உலகில் முதன் முதலில் உயிரினம் தோன்றியது கடலில்தான் என்று எங்களது முன்னோர்கள் சொல்வார்கள்.

இந்தக் கடல் தாயின் மடியில்தான் எனக்கு  திருமணம் நடைபெற்றது.  என்னுடைய காதல் உதித்ததும் இந்தக் கடற்கரையில்தான். என்னைப்போல எத்தனையோ காதலர்கள் தங்கள் காதல் பயணத்தை இங்கிருந்துதான் தொடங்குகிறார்கள். காதல் தோல்வியுற்றவர்களுக்கும் ஆறுதலாக இந்தக் கடல்தாய் இருக்கிறாள். ஆடி காரில் வந்து இறங்கும் காதலர்களுக்கும் தாய் மடி கடற்கரைதான். சைக்கிளில் வரும் காதலர்களுக்கும் இதுதான் தாய் மடி.

என்னதான் பீட்சா, பர்கர்னு ேஹாட்டலில் சாப்பிட்டாலும் கடலில் உட்கார்ந்து ’அண்ணனோட சுண்டல் சாப்பிடுகின்ற சுகமே தனிதான்’ என்று சொன்னபடியே சுண்டல் வாங்கி சாப்பிடும் வாடிக்கையான காதலர்களும் இருக்கிறார்கள். ஏழை, பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வு இல்லாமல் தன் மடியில் சுமந்து நிற்பவள் இந்த கடல்தாய். கடலோரக் காதலை சொல்லும் திரைப்படங்களும் பாடல்களும் இன்றளவும் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

எத்தனை ஆண்டுகாலம் ஆனாலும் காதலை கடலிலிருந்து பிரிக்க முடியாது’’ என்றவர் தன்னுடைய நினைவிற்கு வந்த ஒரு சில நிகழ்வுகளை  பகிர்ந்துகொண்டார். ‘‘கடந்த வருடம் காதலர் தினத்தன்று என்று நினைக்கிறேன். ஒரு காதல் ஜோடி சோர்ந்து போய் அமர்ந்துகொண்டிருந்தனர். வழக்கம்போலவே சுண்டல் விற்பதற்காகச் சென்றேன். அவர்களின் முகபாவனையே என்னை விரட்டுவதுபோல இருந்தது. அதனால் அவர்களைதாண்டிச் சென்றேன். என்ன நினைத்தார்களோ தெரியவில்லை.

என்னை அழைத்து சுண்டல் கேட்டார்கள். கொடுத்துவிட்டுக் கிளம்பிய என்னிடம் பேச்சு கொடுக்கத் தொடங்கினார்கள். ‘எங்கள் வீட்டில் எங்களுடைய காதலுக்கு சாதி வடிவில் பெரிய எதிர்ப்பு இருக்கிறது. என்ன செய்வது என்றே புரியாமல் திகைத்துப்போய் இருக்கிறோம். ஆறுதலுக்கும் எங்களுக்கு யாரும் இல்லை. ஏதோ உங்களிடம் பேச வேண்டும் என்று தோன்றியது” என்று தங்கள் கவலையை பகிர்ந்துகொண்டனர். அவர்களின் கண்களில் ஏக்கங்களை என்னால் காண முடிந்தது.

நான் என்னால் முடிந்த அறிவுரைகளை அவர்களுக்கு எடுத்துச் சொன்னேன். கடைசியாக உங்கள் வீட்டார் மேல் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்று சொல்லி விட்டு என் பெயரையும் தொலைபேசி எண்ணையும் கொடுத்து விட்டுச் சென்று விட்டேன். அன்று இரவு முழுவதும் அவர்களது நினைவாகவே இருந்தது. இருவரும் தவறான முடிவுகளை எடுத்து விடுவார்களோ என்றெல்லாம் மனம் யோசிக்கத் தொடங்கியது.

மறுநாள் வழக்கம் போல் வீட்டிற்கு வந்தவுடன் என் மனைவி உங்களுக்கு யாரோ போன் பண்ணிக்கிட்டே இருந்தாங்க  என்றார். அந்த நம்பருக்கு தொடர்புகொண்டு பேசினேன். அப்போது ‘அண்ணா நேத்து பீச்சில பார்த்து பேசினோமே’ என்று அந்த குரல் கேட்டது. ‘நினைவிருக்கு சொல்லுங்கள்’ என்றேன். ‘எங்கள்  வீட்டில் பிரச்னை எல்லை தாண்டி போய் விட்டது. எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை’ என்றனர்.

உடனே அவர்களை வரவழைத்து எங்கள் ஊர் மக்கள் மத்தியிலே சிறப்பான முறையில் அவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்தேன். இன்று அவர்கள் பல பிரச்னைகளையும் தாண்டி நன்றாக இருக்கிறார்கள். என் வாழ்வில் மறக்கவே முடியாத ஒரு சம்பவம் அது என்றார்.  இன்றும் எங்களது பந்தம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. பணபலமும் படை பலமும் ஏராளமாக இருந்தாலும் பாசத்தையும் அமைதியையும் பெறுவதற்கு வருகின்ற கூட்டம்  இங்கு அதிகமாகவே இருக்கிறது.

காதலர்கள் தங்களுக்கான புரிதலை கடற்கரையில்தான் பரிமாறிக்கொள்கிறார்கள். அதற்கான தளம் கடற்கரைதான் என்று காலம் காலமாக காதலர்கள் நம்புகிறார்கள். அதனால்தான் காதலர்கள் அனைவரும் கடற்கரைக்கு படையெடுக்கிறார்கள். நான் காதலித்தபோது என் காதலி என்னை அழைத்துப்போகச் சொன்ன முதல் இடம் கடற்கரைதான். மற்றவர்களுக்கு கடற்கரை ஒரு பொழுதுபோக்கு இடமாக இருக்கலாம். ஆனால் காதலர்களுக்கு அது ஒரு புரியாத உணர்வுப்பூர்வமான ஸ்தலமாக இருக்கிறது.

இதே கடலில் விழுந்து தன்னை மாய்த்துக்கொண்ட காதலர்களின் சடலங்களையும் நாங்கள் எடுத்து இருக்கிறோம். அப்போதெல்லாம் பெற்றவர்களைவிட என் மனம் கலங்கியதுதான் அதிகம். எத்தனையோ காதல் ஜோடிகளின் திருமணங்கள் மனப்பூர்வமாக நிச்சயம் ஆவது இங்குதான். ஒரு சில காதல் நிச்சயம் இல்லாமல் போவதும் இங்குதான். வருடத்திற்கு ஒரு முறைதான் காதலர் தினம். ஆனால் கடற்கரையில் தினந்தோறும் காதலர் தினம்தான். என்னுடைய அனுபவத்தில் கடற்கரை என்றுமே அழியாத காதல் சுவடு’’ என்கிறார் சங்கர்.

- ஜெ.சதீஷ்

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • children_protestt11

  ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் - பிரசாரத்துக்கு சிறுவர்களை ஈடுபடுத்தும் அரசியல் கட்சிகள்

 • 2500_type_idlyy

  உலக இட்லி தினம் - சென்னையில் 2500 வகையான இட்லிகளின் கண்காட்சி நடந்தது

 • 30-03-2017

  30-03-2017 இன்றைய சிறப்பு படங்கள்

 • FLIHJTarestre

  செம்மரக்கட்டை கடத்தலில் 6 மாதம் தலைமறைவான விமான பணிப்பெண் கைது: கொல்கத்தாவில் சிக்கினார்

 • farmersSUPPORtstuMAR

  விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் மாணவர்கள் கடலில் இறங்கி போராட்டம்