வாழ்க்கையை இனிமையாக்கும் நிதி ஸ்வரங்கள்!

Date: 2015-01-30@ 16:11:06

Money... Money... Money...கவுரி ராமச்சந்திரன்
 
‘‘சங்கீத ஸ்வரங்களைப் போலவே நிதி ஸ்வரங்களும் ஏழு. இசையை இனிமையாக்க சங்கீத ஸ்வரங்கள் எவ்வளவு அவசியமோ, அதே போல வாழ்க்கையை இனிமையாக்க இந்த நிதி ஸ்வரங்களும் அவசியம்’’ என்கிறார் பொருளாதார நிபுணரும், நிதி ஆலோசகருமான கவுரி ராமச்சந்திரன். சங்கீத ஸ்வரங்களைப் பழக எப்படி வயது வரம்பு தேவையில்லையோ, நிதி ஸ்வரங்களை அறிந்து கொள்ளவும் அப்படி வயது வரையறை இல்லை என்கிற கவுரி, அவற்றைப் பட்டியலிடுகிறார்.

குழந்தைகளுக்கு பணத்தைக் கையாளக் கற்றுக் கொடுங்கள்!

பல வீடுகளில், குழந்தைகள் பணத்தைக் கையில் எடுத்துவிட்டாலே அலறுவார்கள் பெரியவர்கள். செய்யக்கூடாததை செய்துவிட்டதாக குழந்தையைக் கடிந்து கொள்வார்கள். அது மிகப்பெரிய தவறு. குழந்தையிலிருந்தே பணம் என்றால் என்ன, அதன் மதிப்பு என்ன என்பதைப் புரிய வைக்க வேண்டும். கடைக்குப் போகும் போது, பொருட்களை வாங்கியதும் குழந்தைகளிடம் பில்லையும், அதற்கான பணத்தையும் கொடுத்து கவுண்டரில் கொடுக்கச் சொல்லலாம். பில் தொகையை சரிபார்க்கவும், பொருட்களுக்கான பணம் போக மீதி சில்லறைத் தொகையை கணக்கு செய்து வாங்கவும் பழக்கலாம்.
 
இது பணத்தின் மதிப்பை உணர்த்துவது மட்டுமின்றி, மறைமுகமாக அவர்களுக்குள் ஒரு பொறுப்புணர்வையும் உருவாக்கும். வளர்ந்த பிறகு அவர்களுக்கு பாக்கெட் மணி கொடுக்கும் போதும், அதைப் பார்த்துப் பார்த்து செலவழிக்கக் கற்றுக் கொடுக்கும்.‘பணத்தை நாம் கையாள வேண்டுமே தவிர, அது நம்மை ஆளக் கூடாது’ என்பதையும் புரிய வைக்க வேண்டும். அதற்காக கஞ்சத்தனமாக இருக்கவும் பழக்க வேண்டியதில்லை. பணத்தின் அவசியத்தை உணர்த்த உங்கள் அனுபவத்திலிருந்து கதைகளைச் சொல்லிப் புரிய வைக்கலாம். அறிவுரைகளாகச் சொல்வதைத் தவிர்க்கவும்.

வரவு, செலவுகளை எழுதுங்கள்!


இப்போதெல்லாம் எத்தனை குடும்பங்களில் வரவு, செலவு கணக்கு எழுதுகிற பழக்கம் இருக்கிறதெனத் தெரியவில்லை. நிதி நிர்வாகத்தில் இது மிக மிக முக்கியம். முதல் செலவை சேமிப்பாக எடுத்து வைக்கிற பழக்கமும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவசியம். 6 மாதங்களுக்காவது இப்படி தொடர்ந்து வரவு, செலவு கணக்கு எழுத வேண்டும். 5 ரூபாய், 10 ரூபாய் கணக்குகளை எழுதத் தவறினால் பரவாயில்லை. 100 ரூபாய்க்கு மேலானவற்றை நிச்சயம் தவறவிடக் கூடாது. 6 மாத கால முடிவில் இந்தக் கணக்குகளை திரும்பிப் பார்த்தால் எதெல்லாம் முக்கிய செலவுகள், எதையெல்லாம் தவிர்த்திருக்கலாம் எனத் தெரியும். அவற்றை அடுத்த 6 மாதங்களில் தவிர்க்கப் பார்க்கலாம்.

திட்டமிடல் என்கிற மந்திர வார்த்தை!

பிளானிங்... அதாவது, திட்டமிடல் என்கிற வார்த்தை நிர்வாகத் துறையில் புழங்குகிற மிகப் பெரிய மந்திரச்சொல். இது எல்லா விஷயங்களுக்கும் அவசியம். செலவுகளைப் பொறுத்த வரை எவை எல்லாம் திரும்பத் திரும்ப வருகிற செலவுகள் (உதாரணத்துக்கு வாடகை, மின் கட்டணம், மளிகை போன்றவை), எவையெல்லாம் எப்போதாவது வருகிற செலவுகள்(பண்டிகைக் கால ஷாப்பிங், வருடாந்திரக் கட்டணங்கள் போன்றவை) எனப் பகுத்துக் கொள்ள வேண்டும். கொடுக்க வேண்டியவர்களுக்குத் தவறாமல் பணத்தைக் கொடுப்பதும், நமக்கு வர வேண்டிய பணத்தைத் தவறாமல் பெறுவதும் மிக முக்கியம்.

கடன் நல்லதா, கெட்டதா என்கிற கேள்வியும் பலருக்கும் உண்டு. வீட்டுச் செலவுகளை சமாளிக்க கடன் வாங்குவதென்றால் அது தவறு. கையில் உள்ள பணத்தை வைத்து சமாளிக்கப் பழகுவதுதான் சரியானது. அதுவே வீடு கட்டுவது போன்ற ஒரு பெரிய செலவை சமாளிக்க வேண்டும் என்றால் கடன் வாங்கலாம் தவறில்லை. ஒரு வருடத்தில் தொடர்ச்சியான செலவுகள் எவை, அரிதாக ஏற்படுகிற செலவுகள் எவை... திடீரென ஏற்படுகிற செலவுகளை சமாளிக்க போனஸ், சீட்டுப் பணம் போன்ற உபரி வருமானம் ஏதும் வருமா என்றெல்லாம் திட்டமிட வேண்டும். சீட்டுப்பணம் என்றதும் அக்கம்பக்கத்து வீட்டுப் பெண்களிடம் சீட்டு கட்டி ஏமாறுகிறவர்கள் எக்கச்சக்கம். 10 ரூபாயாக இருந்தாலும் வங்கியில் சேமிப்பதே பாதுகாப்பானது.

லட்சியம் வேண்டும்!

இந்தக் காலத்தில் குழந்தையை எல்.கே.ஜியில் சேர்க்கவே ஒரு பெரிய தொகை தேவை. அடுத்து அவர்களது படிப்பு, கல்யாணம் என அந்தச் செலவு தொடர்ச்சியானது. 5 வயது முதல் 25 வயது வரையிலான பிள்ளைகளது செலவுகளை சமாளிக்க சரியான முதலீடும் சேமிப்பும் அவசியப்படுகிறது. இதற்கு எஸ்.ஐ.பி. (சிஸ்டமேட்டிக் இன்வெஸ்மென்ட் பிளான்) மாதிரியான சேமிப்புகள் சரியான சாய்ஸாக இருக்கும். சரியான, திறமையான நிதி ஆலோசகரின் ஆலோசனையின் பேரில் சேமிப்புத் திட்டங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 6 மாதங்களுக்கு ஒரு முறை அவரிடம் உங்கள் சேமிப்பானது சரியான திசையில்தான் போய்க் கொண்டிருக்கிறதா என்பதையும் சரி பார்க்கச் சொல்ல வேண்டும்.

உதாரணத்துக்கு எஸ்.ஐ.பி. போன்ற திட்டங்களில், 3 வருடங்களுக்கு லாக் இன் பீரியட் இருக்கும் என்பதால் நடுவில் பணம் எடுக்க முடியாது. எனவே அவசரத் தேவையை சமாளிக்க வங்கியில் ஒரு ஆர்.டி. கணக்கும் ஆரம்பிக்கலாம். சிலர் சேமிப்பு என்கிற பெயரில் தங்கக் காசாக வாங்குவார்கள். அப்படி வாங்கும் போது வங்கியில் தங்க நாணயம் வாங்கவே கூடாது. அதைத் திரும்ப காசாக்குவதில் சிக்கல் வரும். நம்பகமான நகைக் கடையில் வாங்கலாம் அல்லது நகைச்சீட்டு கட்டலாம் அல்லது அந்தப் பணத்துக்கு ஆர்.டி. கணக்கில் சேமித்து, அது முதிர்ந்ததும் அதில் தங்கமாக வாங்கியும் சேமிக்கலாம்.

திறமையைக் கண்டுபிடியுங்கள்!

எல்லா பெண்களிடமும் ஏதோ ஒரு திறமை நிச்சயம் ஒளிந்திருக்கும். ஆனால், அதை அவர்கள் கண்டுபிடித்து, பட்டை தீட்டிக் கொள்வதில்தான் பிரச்னை. தனக்குள் இருக்கும் அந்த ஆர்வத்தை ஒரு திறமையாகவே உணராதவர்கள் பலர். அதைத் தாண்டி அந்த ஆர்வத்தை வைத்துப் பணம் பண்ண முடியும் என்பதையும் அறியாதவர்களாக இருப்பார்கள். உதாரணத்துக்கு சாதாரண சமையல் திறமை கூட ஒருவருக்கு உபரி வருமானத்துக்கு வழி காட்டும். தெரிந்த சமையலை நான்கு பேருக்குக் கற்றுக் கொடுத்துக்கூட காசு பார்க்க முடியும். இப்படி சின்னச் சின்ன விஷயங்களின் மூலம் ஈட்டுகிற பணமானது அவர்களது குடும்பத்தின் நிதித் தேவைக்கு பக்கபலமாக உதவும்.

சுத்தம் சேமிப்புக்கு வழி வகுக்கும்!


வீட்டை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். நிதி நிர்வாகத்துக்கும் வீட்டை சுத்தப்படுத்துவதற்கும் என்ன சம்பந்தம் என நினைக்கலாம். அப்படி அடிக்கடி சுத்தப்படுத்துகிற போதுதான் நாம் தேவையில்லாமல் வாங்கிக் குவித்த உபயோகமற்ற பொருட்கள் எவ்வளவு என்பது தெரிய வரும். ஒரு பொருளை வாங்கி, அதை முழுமையாக உபயோகித்த திருப்தியுடன் தூக்கிப் போடுவதுதான் சிறந்தது. அதைத் தவிர்த்து ஆசைக்காக வாங்கி, உபயோகமே செய்யாமல் மூலையில் போட்டு வைத்து பிறகு ஒரு நாள் சுத்தப்படுத்தும் போது தேவையில்லை எனத் தூக்கிப் போடுவது பண விரயம். வீட்டை 6 மாதங்களுக்கு ஒரு முறை சுத்தப்படுத்தினால்தான் இது தெரிய வரும். தள்ளுபடி விற்பனை, சிறப்பு விற்பனை என்கிற பெயர்களில் அடிக்கடி நடக்கும் ஷாப்பிங் திருவிழாக்களுக்குச் செல்வதைக் கூடிய வரையில் தவிர்க்கவும். அத்தகைய விற்பனைகளில் சிலது மட்டுமே நம்பகமானவை. பெரும்பாலானவை தேவையற்ற பொருட் களை வாங்கத் தூண்டி நமக்கு செலவு வைக்கிற ஏமாற்று வித்தைகள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தவிர்க்க முடியாமல் ஷாப்பிங் செல்ல வேண்டும் என்றாலும் கைகளில் பணம் எடுக்காமல் விண்டோ ஷாப்பிங் செய்கிற எண்ணத்தில் போகலாம்.

ரிஸ்க் எடுக்கலாமா? கூடாதா?

வயதுக்கேற்ற முதலீடு தேவை. எவ்வளவு சேமிக்கப் போகிறோம், எதில் முதலீடு செய்யப் போகிறோம் என்பதில் வயதுக்கேற்ற தெளிவு அவசியம். நிலமாக வாங்கிப் போடுவது, தங்கமாக வாங்கிச் சேர்ப்பது என ஒரே விஷயத்தில் முதலீடு செய்வது சரியானதல்ல. இளவயதினர் என்றால் ஈக்விட்டி மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். அது அவர்களது நீண்ட காலத் தேவைகளுக்குக் கை கொடுக்கும். தங்கத்தில் 10 முதல் 15 சதவிகிதம் சேமிக்கலாம். வயதாக ஆக, ரிஸ்க் உள்ள முதலீடுகளைத் தவிர்த்து எக்காலத்துக்கும் ஏற்ற, பாதுகாப்பான விஷயங்களில் முதலீடு செய்வதே புத்திசாலித்தனம். உதாரணத்துக்கு வங்கிச் சேமிப்பு.

Like Us on Facebook Dinkaran Daily News