பரபர பார்ட்டி டெஸர்ட்!

Date: 2015-01-30@ 16:04:09

நீங்கதான் முதலாளியம்மா! சுரேகா

நட்சத்திர ஓட்டல்களில் விருந்து சாப்பிடுகிறவர்களுக்கும், பார்ட்டியில் விருந்து சாப்பிடுகிறவர்களுக்கும் அங்கே வரிசையாக, விதம் விதமாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற டெஸர்ட் எனப்படுகிற இனிப்பு வகைகள் கண்களைக் கவரும். எதை எடுப்பது, எதை விடுப்பது எனக் குழம்ப வைக்கும். புட்டிங்கும் அல்வாவும் வாயில் போட்டதும் கரைந்து நேரடியாக வயிறைத் தொடும். ‘எப்படித்தான் பண்றாங்களோ... எதை வச்சுத்தான் செய்யறாங்களோ...’ என்கிற கேள்வி பலருக்கும் இருக்கும். பெரிய பெரிய விருந்துகளிலும் பார்ட்டிகளிலும் பரிமாறப்படுகிற பிரமாண்ட டெஸர்ட் வகையறாக்களை எளிமையாகச் செய்து அசத்துகிறார் சென்னையைச் சேர்ந்த சுரேகா. பார்ட்டி, விசேஷங்களுக்கு டெஸர்ட் மற்றும் பீநட் பட்டர், மேயனைஸ் செய்து கொடுப்பதில் எக்ஸ்பர்ட் இவர்!

‘‘பிளஸ் டூ வரைதான் படிச்சிருக்கேன். பசங்களுக்கு வெளியில விற்கிற ஸ்வீட்ஸையும் ஸ்நாக்ஸையும் வாங்கிக் கொடுக்கறதுக்குப் பதில் நானே வீட்ல சுவையா, ஆரோக்கியமா செய்து கொடுக்க விரும்புவேன். என்னோட ஃப்ரெண்ட் ஒருத்தங்க ஸ்டார் ஹோட்டல்ல வேலை பார்த்திட்டிருந்தாங்க. அந்த வகையில அவங்களுக்கு ஸ்டார் ஹோட்டல் அயிட்டம் பலதும் அத்துப்படி. அவங்கக்கிட்டருந்து என் குழந்தைங்களுக்கு செய்து கொடுக்க டெஸர்ட் அயிட்டங்களை கத்துக்கிட்டேன். அது அப்படியே எங்க வீட்ல நடக்கிற பர்த்டே பார்ட்டி, சின்னச் சின்ன விசேஷங்களுக்கும் பண்ற அளவுக்கு வளர்ந்தது. சாப்பிட்டவங்க எல்லாரும் பாராட்டத் தவறினதில்லை. பாராட்டினதோட இல்லாம அவங்கவங்க வீட்டு விசேஷங்களுக்கு சின்னச் சின்னதா ஆர்டர் கொடுக்க ஆரம்பிச்சாங்க.

பொதுவா பார்ட்டிக்கு பண்ற டெஸர்ட் வகையறா எல்லாமே ரொம்ப கிராண்டா இருக்கும். நான் பண்றதுல அதே ருசி இருக்கும். ஆனா, சிம்பிளா இருக்கும். பெரும்பாலான ரெசிபிகளை பிரெட்டை வச்சே பண்ணிட முடியும்...’’ என்கிற சுரேகா, பிரெட் குலாப் ஜாமூன், ஷாஹி துக்ரா, பிரெட் புட்டிங், ஸ்பானிஷ் பிரெட் புட்டிங், எகிப்தியன் பேலஸ் பிரெட் உள்ளிட்ட டெஸர்ட் மட்டுமின்றி, பிரெட் பாட்டிஸ், பீநட் பட்டர், மேயனைஸ் போன்றவை தயாரிப்பதிலும் நிபுணி.

‘‘புட்டிங் பண்றதுக்கு ஒரு அவன் இருந்தா நல்லது. பிரெட், சுகர் சிரப், பால், வெண்ணெய், சீஸ் உள்ளிட்ட பொருட்களுக்கு சேர்த்து 600 ரூபாய் ஆரம்ப முதலீடு போதும். குலாப் ஜாமூன் ஒரு பீஸ் 3 ரூபாய்க்குக் கொடுக்கறேன். மத்ததெல்லாம் கிராம் கணக்கு. இந்த அயிட்டங்கள் எல்லாத்தையுமே ஃப்ரெஷ்ஷா செய்து உடனடியா கொடுத்தாகணும். 50 சதவிகித லாபம் நிச்சயம். வழக்கமான இனிப்புகளை சாப்பிட்டு அலுத்துப் போனவங்களுக்கு இந்த வித்தியாசமான பிரெட் டெஸர்ட்ஸ் நிச்சயம் பிடிக்கும்...’’ என்கிறவரிடம் ஒரே நாள் பயிற்சியில் 8 அயிட்டங்களைக் கற்றுக் கொள்ளக் கட்டணம் 500 ரூபாய். (94442 50585)

Like Us on Facebook Dinkaran Daily News