SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எண்டம்மே ஜிமிக்கி கம்மல்...

2018-02-09@ 11:54:51

நன்றி குங்குமம் தோழி

‘எண்டம்மே ஜிமிக்கி கம்மல்…’ பாட்டின் மீது மட்டுமல்ல, பொதுவாகவே இந்திய பெண்களுக்கு ஜிமிக்கி கம்மல் மீது எப்போதும் ஒரு தீராத காதல் உண்டு. என்ன தான் வெஸ்டர்ன் ஸ்டைலில் உடை அணிபவராக இருந்தாலும் ஜிமிக்கி கம்மலை விரும்புவதுண்டு. ஜிமிக்கி கம்மல்களுக்கென இருக்கும் புகழ்வாய்ந்த கடைதான் தாமினி ஜுவல்லர்ஸ். அதை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வரும் ஓர் இளம்பெண். அவரின் வெற்றிப்பாதை குறித்து நம்மோடு பகிர்ந்து
கொள்கிறார் பர்வீன் சிக்கந்தர்…

“எனக்கு 18 வயதிருக்கும்போது திருமணம் ஆச்சு. அவருக்கு மலேசியாவில் பிசினஸ். என் மகனுக்கு ஆறு வயதாக இருக்கும் போது திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு எங்களை விட்டு பிரிந்துவிட்டார். அருமையான மனிதர் அவர். சட்டென அவர் மறைந்ததும் அதுவரை வெளி விஷயங்கள் தெரியாதிருந்த எனக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது. மறுமணம் செய்ய அம்மா, அப்பா முடிவெடுத்தாங்க. சில வரன்களும் வந்து பார்த்தாங்க. ஆனால் என்னோடு சேர்த்து என் மகனையும் முழு மனசோட ஏத்துக்க வந்தவங்களுக்கு மனமில்லை. அதனால் அந்த எண்ணத்தைக் கைவிட்டோம். அதன் பிறகு என் மகனுக்காக வாழ ஆரம்பித்தேன்.

வீட்டில் வசதி இருந்தாலும் யார் தயவிலும் நிற்க பிடிக்காத மனநிலைமையில் நான் இருந்தபோது வந்த அப்பாவின் நண்பர் ‘இவளை வேலைக்கு அனுப்பு. அப்பதான் வெளியுலகம் தெரியும். இவளும் இந்த துக்கத்தில் இருந்து வெளியே வருவாள்’ என்று சொன்னார். அதன் பிறகு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன். அப்படியே மேல் படிப்பும் படித்தேன். எம்.ஏ ஆங்கில இலக்கியம், எம்.ஏ.ஜர்னலிசமும் படித்தேன். மீடியாவில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வேலை பார்த்தேன். கொஞ்ச நாள் டீச்சராக இருந்தேன். பல வேலைகளுக்குச் சென்றேன். எதிலும் திருப்தி இல்லை. சில மாதங்களுக்கு மேல் அந்த வேலைகளில் என்னால் நீடிக்க முடியவில்லை.

எனக்கு சின்ன வயதிலே ஜுவல்லரி மேக்கிங்கில் ஈடுபாடு இருந்தது. தென்னை ஓலைகளில் கூட அழகாக நகைகள் செய்வேன். விளையாட்டுத்தனமாய் செய்து கொண்டிருப்பேன். வேலை செய்து கொண்டிருக்கும்போதே இதையும் செய்து கொண்டிருந்தேன். நான் போடும் கம்மல்களை பார்த்துவிட்டு என்னை நிறைய பேர் கேட்க ஆரம்பித்தாங்க. இதையே ஏன் பிசினஸாக செய்யக்கூடாது என்று தோன்ற
ஆரம்பித்தது.

அப்பதான் வள்ளுவர் கோட்டத்தில் கைவினைப்பொருட்களுக்கான கண்காட்சி நடைபெறப் போவது தெரிந்தது. அங்கு ஸ்டால் வைக்க எந்த கட்டணமும் இல்லை. அதனால் என் நகைகளுக்காக ஸ்டால் போட்டேன். நல்ல வியாபாரம் நடந்தது. மும்பையில் காலா கோடா என்ற இடம் கலைகளுக்கு என்று மிகவும் புகழ்பெற்றது. அங்கு நடைபெற்ற கண்காட்சியிலும் கடைபோட்டேன். அங்கேயும் ரீடெய்லர் ஒருவர் மொத்தமாக என் பொருட்களை வாங்கிக் கொண்டார். இப்படியாக சில காலம் வியாபாரம் செய்து கொண்டிருந்தேன்.

இதற்கு பிறகு ஏன் நாம் ஒரு கடை ஆரம்பிக்கக்கூடாது என்று தோன்றியது. அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் தாமினி ஜுவல்லர்ஸ். கோல்டு பிளேடட் நகைகளுக்கான கடை. பெரும்பாலும் பாரம்பரிய நகைகள். குறிப்பாக ஜிமிக்கி வகைகள். சில வெஸ்டர்ன் நகைகளும் உண்டு. எல்லாருக்கும் அவங்க வெற்றிக்குப் பின்னாடி ஒரு சிலர் இருப்பாங்க. ஆனால் என்னைப் பொறுத்தவரை என் வீட்டில் யாரும் என்னை ‘இப்படிச் செய்யாதே, அப்படிச் செய்யாதே’ என தடுக்கவில்லை. அதுவே எனக்குப் பேருதவியாக இருந்தது.

எல்லா விஷயங்களையும் நானே பார்த்து பார்த்து செய்தேன். பார் கோடிங் என்றால் என்ன? கிரெடிட் கார்டு என்றால் என்ன? ப்ரைவேட் லிமிடெட் என்றால் என்ன என எல்லாவற்றையும் தேடித் தேடி ேகட்டு கேட்டு நானே கற்றுக்கொண்டேன். என் குணத்துக்கு பார்ட்னர்ஷிப் எல்லாம் சரிவராது என்று தோன்றியதால் தனியாகவே செய்தேன். எல்லா முடிவுகளையும் நானே எடுத்தேன். எல்லா ரிஸ்க்கும் எனக்குத்தான். அதனால் பார்த்து பார்த்து காய் நகர்த்த வேண்டி இருந்தது.

நான் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் வலிமையாக இருக்க வேண்டி இருந்தது. என்னிடம் வேலை பார்ப்பவர்கள் என் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம். நேர்மையான வேலையாட்கள் பல பேர் பல வருடங்களாக என்னிடம் வேலைப் பார்க்கிறார்கள். என் கடைகளை பார்த்துக்கொள்ள என் மேனேஜர் எஸ். கோபிநாத் பேருதவியாக இருக்கிறார். ரொம்ப சின்சியர் அவர்.

இப்ப ஜிமிக்கி கம்மல் பாடல் ஃபேமஸா இருக்கு. ஆனால் எங்கள் கடையில் ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை ஜிமிக்கிகளுக்கு முக்கியத்துவம் உண்டு. மே மாதமானால் ஜிமிக்கி கம்மல்களுக்கு என சிறப்புக் கண்காட்சி வைப்போம். தென்னிந்திய கலாச்சாரமான ஜிமிக்கியை சிறிய அளவில் இருந்து பெரிய அளவில் வரை எல்லா டிசைன்களிலும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து வாங்கி வைப்போம். அதற்கான முயற்சிகளை ஆறு மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்துவிடுவோம்.

எங்கள் கடைக்கு வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் அதிகம் உண்டு. பெரிய திரை மற்றும் சின்னத்திரை நடிகைகளும் வாங்க வருவார்கள். அதற்கு காரணம் எங்களோட ஜிமிக்கி கம்மல் வகைகளும். லைஃப் டைம் வாரன்டியும்தான். ஆர்வம் இருந்ததாலோ என்னவோ தெரியவில்லை எந்த வேலையிலும் சில காலங்கள் கூட நீடிக்காத நான் இந்த பிசினஸ் ஆரம்பித்து 15 வருடங்களாக வெற்றிகரமாக நடத்தி வருகிறேன். ஒரு கடை இப்போது எட்டு கடைகளாக விரிவடைந்திருக்கிறது.

கொச்சின், பெங்களூர், தமிழ்நாட்டை தாண்டியும் எங்கள் கடைகள் வெற்றிகரமாக நடக்கின்றன. இத்தனைக்கும் அவ்வளவு விளம்பரங்கள் கூட கொடுத்தது இல்லை. இங்கு வாங்கினால் நல்லா இருக்கும் என்று ஒருவர் சொல்லக் கேட்டு மற்றவர் வருகிறார்கள். காரணம் எங்களோட தரம் மற்றும் டிசைன்ஸ்தான். என்னிடம் இப்போது 30 பேர் வேலை பார்க்கிறார்கள்.

தாமினிக்கென்று ஒரு பாரம்பரியம் உண்டு. அது ஒவ்வொரு டிசம்பர் மாதம் முழுவதும் எங்களது எல்லாக்கடைகளிலும் எல்லா நகைகளுக்கும் 50 சதவிகிதம் தள்ளுபடி கொடுப்போம். மார்கழி சீசனில் வெளிநாட்டினர் பலர் இசைக் கச்சேரிகளுக்காக சென்னைக்கு வருவார்கள். அப்படியே எங்கள் கடைக்கும் வருவார்கள். இங்கு வாங்கிக் கொண்டு வெளிநாட்டில் இந்த நகைகளை நல்ல விலைக்கு விற்று சம்பாதிப்பவர்களும் உண்டு.

எந்த ஒரு பிசினஸையும் ஆரம்பிப்பது என்பது பெரிதல்ல. ஆரம்பத்தில் அதை நடத்துவது கூட பெரிதில்லை. ஆனால் பிசினஸை தக்க வைத்துக்கொள்வதுதான் பெரிது. அந்த ஃபீல்டில் நிலைத்திருப்பது என்பது பெரிய விஷயம். சென்னை வெள்ளத்தின்போது பாதிக்கப்பட்டதில் எங்கள் கடையும் விதிவிலக்கல்ல. பல லட்ச ரூபாய் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டு வந்தேன். டிமாண்டிடேஷன், ஜிஎஸ்டி என நாளும் பல பிரச்னைகள்.

எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டி இருக்கும். ஒரு ஃபேஷன் என்பது பெண்களுக்கு 45 நாட்களில் சலித்துப்போய்விடும். அதனால் புதிது புதிதாக சிந்திக்க வேண்டும். இந்த தொழிலில் புதுப்புது கண்டுபிடிப்புகள் இருக்கவேண்டும். சிறந்த முறையில் நடத்தினால் உலகத்தில் பெண்கள் இருக்கும் வரை இந்த நகை பிசினஸ்க்கு என்றைக்குமே வெற்றிதான்.

பெண்கள் பலரும் பிசினஸ் செய்வது குறித்து என்னிடம் கேட்பார்கள். தயவுசெய்து பொழுது போக்குக்காக பிசினஸில் ஈடுபடாதீர்கள். ஏனெனில் பலர் நிறைய பணத்தை போட்டுவிட்டு மேம்போக்காக பிசினஸ் செய்து நஷ்டமடைகிறார்கள். அதனால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் கஷ்டம்தானே? உண்மையிலே தீவிரமான ஆர்வம் கொண்டவர்கள் மட்டும் பிசினஸில் இறங்க வேண்டும். நேர்மையாக செய்யப்படும் எந்த ஒரு பிசினஸும் உடனடியாக மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுவிடாது.

முறையான வரி கட்டி, தொழிலாளர்களுக்கு நல்ல முறையில் சம்பளம் கொடுத்து செய்யும் நேர்மையான தொழில் எப்போதும் மெல்ல மெல்லதான் வளரும். பெண்கள் பெரும்பாலும் பிசினஸ் என்று இறங்கினாலே ஊறுகாய், அப்பளம் இல்லை என்றால் ஆடை பிசினஸ் என்று தான் இறங்குகிறார்கள். அப்படி அடுத்தவரை பார்த்து பிசினஸில் இறங்காமல் புதிதாக ஏதாவது யோசித்து பிசினஸில் முனைப்போடு இறங்கி செயல்படுங்கள். கட்டாயம் வெற்றி கிடைக்கும்” என்கிறார்.
 
ஸ்ரீதேவி மோகன் படங்கள்: ஆர்.கோபால்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-02-2019

  16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • BrightBrussels

  ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

 • francelemon

  பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

 • TitanicReplicaChina

  முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

 • train18modi

  டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்