SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மெனோபாஸ் பயம் வேண்டாம்

2017-09-13@ 12:57:45

நன்றி குங்குமம் தோழி

உடலும் மனதும் வேறு வேறல்ல. இரண்டுக்குமான உறவு மிகவும் நெருக்கமானது. மனம் சார்ந்த பிரச்னைகளுக்கு புறச்சூழல் மட்டுமே காரணமாக இருந்து விடாது. உடலியல் ரீதியிலான பிரச்னைகளின் எதிரொலியாக மனம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படும். பெண்கள், மெனோபாஸுக்குப் பின் உடல் அளவில் மட்டுமல்லாமல் மனதளவிலான பிரச்னைகளுக்கும் ஆட்படுகின்றனர். இது பெண்கள் அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்னைதான் எனும்போது அதனை புரிந்து கொண்டு அதிலிருந்து எப்படி மீள்வது என்பதைப் பற்றி மனநல மருத்துவர் கார்த்திக்கிடம் கேட்டேன்...  

‘‘மெனோபாஸுக்குப் பின் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜென் எனும் ஹார்மோனின் அளவு குறையும்.  மூளைக்கும் ஈஸ்ட்ரோஜென்னுக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. டோப்பமைன், Norepinephrine மற்றும்  செரட்டோனின் ஆகிய ஹார்மோன்கள் நரம்பில் சென்று செயல்பட ஈஸ்ட்ரோஜென் தேவைப்படுகிறது. ஈஸ்ட்ரோஜென் இருந்தால்தான் அந்த ஹார்மோன்களை நரம்பு ஏற்றுக்கொள்ளும். டோப்பமைன் நம்மை மகிழ்ச்சி கொள்ளச் செய்யும்  ஹார்மோன். Norepinephrine நமக்கு உத்வேகத்தை அளிக்கிறது.

செரட்டோனின் அமைதியைக் கொடுக்கிறது. ஈஸ்ட்ரோஜென் குறைபாட்டால் இந்த மூன்று ஹார்மோன்களின் இயக்கமும் தடைபடுவதன் காரணமாக அதன் பயன்களை பெற முடியாமல் போகிறது. இதனால் மகிழ்ச்சி இழத்தல், நிம்மதி இழத்தல், சோர்வடைதல் ஆகிய பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதில்  மனச்சோர்வுதான் மிக முக்கியப் பிரச்னை. இதன் விளைவாக எந்த வேலை செய்தாலும் அதிக சிரத்தை எடுத்து செய்வதைப் போலத் தோன்றும். கணவருடன் பேசும்போது மகிழ்ச்சி ஏற்படாது, விபத்துக்கு ஆளாகி விடுவோமோ? கணவர் நம்மை விட்டுப் பிரிந்து சென்று விடுவாரோ? என்பது போன்ற எதிர்மறையான எண்ணங்கள் அதிகரிக்கும். சம்பந்தமே இல்லாமல் தேவையில்லாதவற்றைப் பற்றியான எண்ணங்களெல்லாம் வரும்.

மெனோபாஸ் ஆன பிறகு தாய்மை அடைவதற்கான தகுதியை இழக்கின்றனர். இது மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. தன்னைப்பற்றி மற்றவர்கள் தாழ்வாக நினைப்பார்களோ என்கிற எண்ணம் மேலோங்கும். சுய மதிப்பீடு குறைவாகும். இந்த தாழ்வு மனப்பான்மையின் காரணமாக மற்றவர்களை குறை சொல்வார்கள். ஏனென்றால் அவர்கள் நம்மை தாழ்வாக எண்ணுவார்களோ என்கிற பதற்றத்தின் வெளிப்பாடு அது. மெனோபாஸ் குறித்த சரியான புரிதல் இங்கு பலருக்கும் இல்லை.

அது அடுத்த பருவம் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அத்தோடு பாலியல் உறவு முடிந்து விட்டதாக நினைக்கின்றனர். ஆனால் பாலியல் உறவுக்கு முடிவே கிடையாது. 80 வயது வரையிலும் கூட அதற்கான தேவை இருந்து கொண்டே இருக்கும். ஆனால் வயதைக் காரணம் காட்டி இந்த வயதில் இது கூடாது என்றெண்ணி அதில் ஈடுபாடு கொள்ளாமல் இருக்கின்றனர்.

அந்த எண்ணத்திலிருந்து விடுபட வேண்டும். ஒரு பருவத்திலிருந்து இன்னொரு பருவத்துக்கு செல்லும்போது கடந்து வந்த பருவத்தின் மீதான ஏக்கமும், ஏமாற்றமும் இருக்கவே செய்யும். அது போல்தான் மெனோபாஸும். அதை நேர்மறையான எண்ணங்கள் மூலமே வென்றெடுக்க முடியும். மெனோபாஸ் அடைந்த பிறகு தாய்மையை இழந்து விட்டதாக வருந்தக் கூடாது. நமக்கான தனிப்பட்ட ஆசைகளை நோக்கிய பயணமாய் அதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

emptiness syndrome எனும் வாழ்க்கையே வெறுமையாகி விட்டதாக உணர்வார்கள். அவர்களின் உலகம் ஒட்டு மொத்தமாக மாறி விடும். கணவரின் அன்யோன்யம் குறைந்து விடும். குழந்தைகள் வளர்ந்து வேலைக்கு போய் விடுவார்கள். அப்போது இந்த வெறுமை ஏற்படும். இந்தியக் கலாச்சாரத்தில் குழந்தைகள் விலகி இருப்பதை எதிர்மறையாகப் பார்க்கும் மனநிலை இருக்கிறது.

மனிதனைத் தவிர மற்ற உயிரினங்கள் எல்லாமே தனது குழந்தை தனித்து வாழ்வதற்கான திறன் பெற்றதும் பிரிந்து செல்கின்றன. அது ஒரு சுதந்திரம் என்பதை புரிந்து கொண்டால் இதற்காக கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது. மெனோபாஸுக்கு பின் சந்திக்கும் மன நலப் பிரச்னைகளுக்கு பெரிய அளவில் சிகிச்சை தேவையில்லை. சரியான புரிதலோடு அதை எடுத்துக் கொண்டாலே போதுமானது. உடலியல் ரீதியாக வேண்டுமானால் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். அது பெரிய சிகிச்சையாகவெல்லாம் இருக்காது. அடுத்த பருவத்துக்கு உங்களை தயார் படுத்துவதாக இருக்கும்’’ என்கிறார்.

- கி.ச.திலீபன்

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • HarrY_MeghanMarkel

  கோலாகலமாக நடைபெற்ற இங்கிலாந்து இளவரசர் ஹாரி-நடிகை மேகன் திருமணப் புகைப்படங்கள்..

 • Yelagirisummerceremony

  ஏலகிரி கோடை விழா இன்றுடன் நிறைவு: ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை

 • kodai_flower

  கொடைக்கானலில் 57வது மலர் கண்காட்சி: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

 • subwaymodi

  சோஜிலா சுரங்கப்பாதை திட்டப்பணி தொடக்கம் : பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

 • 20-05-2018

  20-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்