SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விவாகரத்துதான் தீர்வா?

2017-08-11@ 12:25:19

நன்றி குங்குமம் தோழி

-கி.ச.திலீபன்


ஆண் - பெண் உறவுச்சிக்கல்கள் முன்பைக்காட்டிலும் தற்போது அதிகரித்திருப்பதான தோற்றம் உருவாகியிருக்கிறது. ஆண்டுக்காண்டு அதிகரித்து வரும் விவாகரத்துகளின் எண்ணிக்கையே இதற்கு சாட்சி. விவாகரத்து என்பது பேரவலம் கிடையாது. விருப்பப்படாத வாழ்க்கையிலிருந்து கிடைக்கும் விடுபடல். அதே போல் அது மலிவானதும் கிடையாது.

கூட்டுக்குடும்ப முறையில் உறவுச்சிக்கல்களைக் களைவதற்கென மூத்தோர் இருந்தனர். ஆனால் தனிக்குடும்ப அமைப்பு முறையில் யார் மேல் தவறு என்பதை எடுத்துச் சொல்லக்கூட ஆள் இல்லை. கூட்டுக்குடும்ப அமைப்பு முறை சிதைந்தது இதற்கான முக்கியக் காரணம் என்கிற கருத்தும் பரவலாக இருக்கிறது. முதலில் விவாகரத்தை நாம் எப்படியாக அணுக வேண்டும்? அதற்கான தேவையை எவ்வகையில் தீர்மானிக்க வேண்டும்? சட்ட ரீதியிலாக விவாகரத்து எப்படியாக வரையறை செய்யப்பட்டிருக்கிறது என்பதை அலசினேன்...

உளவியல் மருத்துவரான ஸ்வாதிக் சங்கரலிங்கத்திடம் இது குறித்து கேட்டபோது, “சகித்துக் கொள்வதற்கும் சூழலுக்கேற்ப நம்மை தகவமைத்துக் கொள்வதற்கும் வேறுபாடு இருக்கிறது. மழை பெய்கிறது என்றால் மழையில் நனைந்து கொண்டே செல்வது என்பது சகித்துக் கொள்ளுதல். குடை அல்லது ரெயின் கோட்டுடன் செல்வதுதான் நமக்கான சூழலை உருவாக்குதல்.

மழையில் நனைந்து கொண்டே செல்பவர்கள் சிரமப்படுவார்கள், குடையுடன் செல்பவர்கள் மழையை ரசிப்பார்கள். மூன்றாவதாக மழைக்கு பயந்து வெளியே வராதவர்களும் உண்டு. ஆக, மழை ஒன்றுதான் அதை அணுகும் விதங்களில்தான் வேறுபாடு இருக்கிறது. இதை நாம் திருமண உறவுக்குள்ளும் பொருத்திக் கொள்ள முடியும்.

இந்தத் தலைமுறையில் மட்டுமல்ல ஆண்டாண்டு காலமாக இதே ஆண் - பெண் உறவுச்சிக்கல் இருந்துதான் வந்திருக்கிறது. முன்பு வேறு வழியில்லாமல் சகித்துக் கொள்வார்கள். தற்போது விவாகரத்துக்கு முன் வருகிறார்கள். ஆனால் இரண்டுக்கும் இடையே நமக்கேற்ற சூழலை உருவாக்கிக் கொள்வதற்கான ஏற்பாடுகளுக்குள் இருவரும் இறங்குவதில்லை என்பதுதான் பிரச்னையே.

விவாகரத்து என்பது உரிமைதான். மிகவும் வன்மமான நபர், துணையைத் தாண்டி வேறொருவருடனான ஈர்ப்பு என பேசி தீர்க்க முடியாத பிரச்னைகளுக்கு விவாகரத்துதான் தீர்வு. ஆனால் புரிதலின்மை காரணமாக மேற்கொள்ளப்படும் விவாகரத்துகளை ஏற்க முடியாது. ஏனென்றால் புரிதலை ஏற்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளை எடுப்பதுதான் தீர்வோ தவிர விவாகரத்து தீர்வாக இருக்காது.

பொதுவாக விவாகரத்துக்கான காரணங்கள் நான்காக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

1) ஒவ்வொரு செயலிலும் குற்றம் கண்டுபிடிப்பது. எப்போதும் எதிர்மறையானவற்றையே பேசிக்கொண்டிருப்பது.
2) தங்கள் மேல் உள்ள குற்றங்களை ஒருபோதும் ஒத்துக் கொள்ளாதது. ‘நான் இப்படித்தான் எதற்காகவும் மாற மாட்டேன்’ எனச்சொல்வது.
3) காரணமே சொல்லாமல் மறுப்பு தெரிவிப்பது. முடியாது, கூடாது என்றே எல்லா வற்றையும் சொல்லிக்கொண்டிருப்பது.
4) அவமதிப்பு. மற்றவர்கள் முன்னிலையில் அவமதித்துக் கொண்டே இருப்பது. மனைவி கணவன் மீதோ கணவன் மனைவி மீதோ மற்றவரிடம் புகார் கூறுவது. இதை அவமானமாகக் கருதுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இது போன்ற காரணங்கதான் பெரும்பாலும் திருமண உறவுக்குள் சிக்கலை ஏற்படுத்துவதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. வன்முறை, குரூர மனப்பான்மை, குணாதிசயத்தை இழிவுபடுத்துதல் (கேரக்டர் அசேஸினேஷன்), மது அருந்துதல், கூட்டுக்குடும்ப அமைப்பு முறைக்கு ஒத்திசைவாக இல்லாதது, திருமணத்துக்குப் பிறகு இன்னொருவர் மீது கொள்ளும் ஈர்ப்பு, புற உலகத்தின் தாக்கத்தால் இல்லறத்தைத் துறப்பது போன்ற இன்னும் சில காரணங்களும் விவாகரத்தைத் தீர்மானிக்கின்றன.

கணவன் - மனைவிக்குள் எப்போதும் சண்டை எழுந்து கொண்டே இருக்கும் Marital conflict எல்லோருக்கும் தெரியும். ஆனால் பலரும் அறியாதது Marital silence. கணவன்- மனைவி பேசிக்கொள்ளாமல் ஒரே வீட்டில் யாரோ போல வாழ்வார்கள். அவர்களுக்குள்ளான பிரச்னையைப் பற்றி பேசுவதால் பயனில்லை என்றே நினைப்பார்கள்.

ஆனால் பேசுவதன் மூலம் மட்டும்தான் பிரச்னைக்கான தீர்வை எட்ட முடியும். பேச்சு என்பது ஒரு கலை. அது சமநிலைக்கு மேலே செல்லும்போது conflict ஆகவும், கீழே வரும்போது silence ஆகவும் மாறுகிறது. இளம் தம்பதியினர்தான் சண்டை போடுவார்கள். குறிப்பிட்ட வயதைக் கடந்தவர்கள்தான் Marital silence நிலையில் இருப்பார்கள்.

தலைமுறை மாற்றத்தில் ஆண் - பெண் சமநிலை ஏற்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. நம் பிரச்னை என்னவென்றால் நாம் ஒரு விழுதிலிருந்து இன்னொரு விழுதுக்கு செல்ல வேண்டும். மாறாக இன்னொரு விழுதுக்குச் சென்றாலும் முன்பிருந்த விழுதையும் விடாமல் இரண்டுக்கும் நடுவே தொங்கிக் கொண்டிருக்கிறோம்.

பெண் கல்வி கற்க வேண்டும், வேலைக்குச் செல்ல வேண்டும் என்று புதுமையான மாற்றங்களை சந்தித்தாலும் பெண்ணுக்கு முடிவெடுப்பதற்கான உரிமையை வழங்காமல், காலங்காலமாக இருந்தது போல் கணவனின் ஆளுகைக்குக் கீழ்படிந்தே இருக்க வேண்டும் என எண்ணுவதும் பிரச்னைதான்.

கூட்டுக்குடும்ப அமைப்பு சிதைந்து உருவான தனிக்குடும்ப அமைப்பின் சிக்கல் என்னவென்றால் பகிர்ந்து கொள்வதற்கு யாருமே இல்லை என்பதுதான். கணவன்- மனைவிக்கு நடுவே நடக்கும் பிரச்னை இயல்பானதா? இல்லை தீவிரமானதா? என்கிற புரிதல் கூட பலருக்கு இல்லை.

வயதில் மூத்தவர்கள் இருந்தால் தங்கள் அனுபவங்களின் வாயிலாக அப்பிரச்னையை எப்படியாக அணுக வேண்டும் என்று அறிவுரை சொல்வார்கள். சொல்லப்போனால் டென்னிஸ் விளையாட்டைப் போன்றதுதான் திருமண உறவு. இருவருமே அடித்து ஆட வேண்டும். தத்தம் ஒவ்வொருவரும் தனது இணையிடமிருந்து மட்டும் மாற்றத்தை எதிர்பார்க்காமல் தாமும் மாற வேண்டும்.

திருமண உறவுக்குள் வந்த பிறகு கணவன் - மனைவியால் உருவாக்கப்படுகிற வாழ்க்கைக்குள் மற்றவர்கள் தலையீடு இருக்கக் கூடாது. அது அவர்களின் பெற்றோராக இருந்தாலும் சரி. Persistant ambalical gaurd அதாவது தொப்புள்கொடி அறுத்த பிறகு நமக்கென ஒரு வாழ்க்கை இருக்கிறது என அர்த்தம்.

திருமணத்துக்குப் பிறகும் அந்த தொப்புள்கொடி இருக்கிற மாதிரி பெற்றவர்களை சார்ந்து வாழும் நிலையைத்தான் அப்படிக் குறிப்பிடுவார்கள். திருமணமான பிறகு இருவரது பெற்றோரும் தங்களுக்கான சுதந்திரத்தின் எல்லையை வகுத்துக் கொள்ள வேண்டும். அதைத்தாண்டிச் செல்லக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஒரு பிரச்னை வருகிறது என்றால் அது அவர்கள் புரிதல் வழியாகவே சரியாகி விடும்.

பெற்றோர் என்றைக்குமே விவாகரத்துக்குத் தூண்டுதலாக இருந்து விடக்கூடாது. ஆண் - பெண் உறவுச் சிக்கலுக்குள் உளவியல் காரணங்கள் பெருமளவில் இருப்பதால் விவாகரத்து வழங்குவதற்கு முன் உளவியல் ஆலோசனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும். இதன் மூலம் எளிதில் தீர்த்து விடக்கூடிய பிரச்னைக்காக விவாகரத்துவரை செல்வதைத் தடுக்கலாம்.

குண்டூசி கணக்காக இருக்கும் பிரச்னை கூட புரிதலின்மை காரணமாக பெரிதாகி விடும். கணவன் குடும்பத்தார் கணவனுக்கும், மனைவி குடும்பத்தார் மனைவிக்கும் ஆதரவாக பேசுவார்களே தவிர நடுநிலையில் இருக்க மாட்டார்கள். தெளிவுற பிரச்னையை இருவரும் பேசிக்கொண்டாலே அது தீர்ந்து விடும். தீராத பிரச்னை எனும்போது விவாகரத்துக்குச் சென்று விடலாம்.

விவாகரத்து அவசியமானது. ஆனால் விவாகரத்துக்கு முன்பு எதற்காக விவாகரத்து செய்கிறோம் என்பதை ஆழமான ஆய்வுக்குட்படுத்தி தெளிவு செய்து கொள்வது நல்லது. முன்பே சொன்னது போல் சகித்து வாழ வேண்டாம். தங்களுக்கு ஏற்றாற்போலான சூழலை உருவாக்கிக் கொண்டு வாழலாம்’’ என்கிறார் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.

பல்வேறு விவாகரத்து வழக்குகளில் ஆஜராகிய அனுபவம் மிகுந்த வழக்கறிஞர் அஜிதாவின் கருத்தறிய அவரை தொடர்பு கொண்டபோது, ‘‘இஸ்லாமியர்களுக்கு ஷரியத் சட்டம், இந்துக்களுக்கு இந்து திருமணச்சட்டம், கிறித்தவர்களுக்கு இந்திய விவாகரத்து சட்டம் ஆகியவற்றின் மூலம் விவாகரத்து பெற முடியும்.

திருமணம் என்பது தனிமனித விருப்பம் சார்ந்தது என்பதால் மத அடிப்படையிலான சட்டங்களைப் பின்பற்ற முடியும். மதமாற்று திருமணம் புரிந்தவர்கள் சிறப்பு திருமணச் சட்டத்தின் வாயிலாக விவாகரத்து பெற முடியும். விவாகரத்து என்பது சமூகத்துக்கு எதிரானது என்கிற தவறான பார்வை மாற வேண்டும். திருமணம் என்கிற உரிமைக்கு இணையான உரிமையும், ஜனநாயகப் பூர்வமானதும்தான் விவாகரத்து.

அனைத்து சட்டங்களும் விவாகரத்து என்பதை உரிமையாகவே கருதுகிறது. மாறி வரும் சமூக சூழலில் விவாகரத்து மிக எளிமையானதாக மாறி விட்டது என்கிற தோற்றம் இருக்கிறது. விவாகரத்து என்னும் உரிமையை சரி வர பயன்படுத்த வேண்டும். விவாகரத்துக்கு போதுமான காரணங்கள் இல்லாமல் விவாகரத்து செய்வதும் தவறானது.

முன்பெல்லாம் ஒரு பொருளின் பயன்பாடு முடிகிற வரையிலும் அதனைப் பயன்படுத்துவோம். ஆனால் இன்றைய கால மாற்றத்தில் பயன்பாட்டில் உள்ள பொருளைக் கூட வீசி விட்டு புதிதாய் வாங்குகிறோம். உறவுகளும் இது போன்ற நுகர்வுக் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டதோ? என்கிற கேள்வி பிறக்கிறது.

நிறைய வழக்குகளில் விவாகரத்துக்கென தெரிவிக்கப்பட்ட காரணங்கள் வலுவற்ற காரணங்களாக இருந்திருக்கின்றன. எது சின்ன பிரச்னை? எது பெரிய பிரச்னை? என்று பொதுவாக அளவீடு செய்து விட முடியாது. அது அவரவர்களின் வளர்ந்து வந்த சூழலைப் பொறுத்து மாறுபடும். இருவரும் தங்களுக்குள்ளான புரிந்துணர்வுக்குச் செல்லும்போது இது பிரச்னையாகாது.

அப்படி இல்லையெனில் தொட்டதெல்லாம் பிரச்னையாக வாய்ப்பு இருக்கிறது. குடும்பப் பிரச்னைகளுக்காகத்தான் குடும்ப நீதிமன்றங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. 10 லட்சம் பேருக்கு மேல் வசிக்கும் நகரங்களில் குடும்ப நீதிமன்றங்கள் இருக்க வேண்டும் என்பது விதி. தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் குடும்ப நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.

குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும்போது எடுத்த உடனேயே விவாகரத்து வழங்கி விட மாட்டார்கள். கவுன்சிலிங் மூலம் பிரச்னையைத் தீர்க்க முடியுமா என்பதை ஆராய்வார்கள். சட்டத்தைப் பொறுத்தவரை குடும்பங்களை இணைத்து வைக்கவே அது விரும்புகிறது. குடும்ப நீதிமன்றங்கள் இல்லாத பகுதிகளில் சார்பு நீதிமன்றங்களில் விண்ணப்பிக்க முடியும்.

அங்கு கவுன்சிலிங் முறை இல்லையென்றாலும் பேசித் தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள். கணவன் - மனைவி இருவரில் ஒருவர் விவாகரத்து செய்வதில் விருப்பமில்லை என்பதில் உறுதியாக இருந்தாலும் இந்த வழக்கு 10 ஆண்டு காலம் வரையிலும் தொடர வாய்ப்பிருக்கிறது.

சட்டத்தால் வகுக்கப்பட்டிருப்பன வற்றை அடிப்படையாக வைத்துதான் விவாகரத்து வழங்கப்படும். இஸ்லாமிய சமூக மக்களின் விவாகரத்து முறையான தலாக் முறையை எடுத்துக் கொள்வோம். தலாக் சொல்வதற்கு முன் தங்களது இணையரிடம் பிரச்னையை கூறியிருக்க வேண்டும். அதைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்க வேண்டும் அது ஒத்து வராத இறுதி நிலையில்தான் தலாக் சொல்ல வேண்டும் என்று ஷரியத் சட்டம் கூறுகிறது.

நடைமுறையில் அது இல்லை. இப்போது ஷரியத் சட்டத்தின்படி முத்தலாக் சொல்லப்படவில்லை என்கிற வழக்குகளும் வருகின்றன. வலுவான காரணங்களற்ற விவாகரத்துகளை எந்த சட்டமும் அனுமதிக்காது. விவாகரத்து என்பது உரிமை என்றாலும் அதற்கான நியாயங்களோடுதான் அதனை மேற்கொள்ள வேண்டும்’’ என்கிறார் அஜிதா.

கவிஞர் குட்டி ரேவதியிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘‘விவாகரத்து என்பது குடும்ப அமைப்பின் சீர்குலைவு என்பதான பார்வைதான் பலருக்கும் இருக்கிறது. ஆனால் ஆணாகட்டும், பெண்ணாகட்டும் ஒவ்வாத ஒரு வாழ்வை வாழ்வதைக்காட்டிலும் விவாகரத்து செய்வதை பெரும் விடுதலையாகத்தான் நாம் பார்க்க வேண்டும்.

இன்றைக்கு விவாகரத்துகள் பெருகியிருக்கின்றன என்றால் தற்போது நிகழ்ந்துள்ள வாழ்வியல் மாற்றத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இன்றைக்கு பெண்கள் பலரும் கல்வி பெற்று, ஆணுக்கு இணையாக சம்பாதிக்கும் நிலைக்கு வந்து விட்டார்கள். ஆனால் இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் அப்படியான நிலை இல்லை.

கூட்டுக் குடும்ப முறைக்குள் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வாழ வேண்டியிருந்தது. ஆனால் இன்றைக்கு நிகழ்ந்திருக்கும் வாழ்வியல் மாற்றம் கூட்டுக்குடும்ப முறையை உடைத்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் நாம் விவாகரத்தையும் பார்க்க முடியும். முதலில் விவாகரத்து என்கிற சொல்லை அபத்தமானதாகக் கருதும் மனநிலையிலிருந்து நாம் வெளிவர வேண்டும்.

விவாகரத்தின் மூலம் குடும்பம் சிதைந்து விடும் என்று பதற்றம் கொள்வது தவறு. இந்த பூமி உள்ளவரையிலும் ஆண்-பெண் இணைந்து வாழத்தான் செய்வார்கள். தனக்கு ஒவ்வாத வாழ்க்கைச் சூழலிலிருந்து விடுபட்டு இன்னொரு வாழ்க்கைச் சூழலுக்குள் செல்வதன் மூலம் நாம் நல்ல வாய்ப்பை நம் குழந்தைகளுக்கு அளிக்க முடியும்.

தற்காலத்தில் நாம் மறுமணத்தை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறோம். திருமணத்தின் நோக்கம் அன்பாகவும், ஒற்றுமையாகவும் ஒருவருக்கொருவர் வாழ்க்கையைப் பங்கெடுத்துக் கொள்வதுதான். அப்படியான சூழல் இல்லாவிட்டாலும் திருமணம் புரிந்துவிட்ட ஒரே காரணத்துக்காக சேர்ந்துதான் வாழவேண்டும் என்று சொல்வதுதான் அபத்தம்.

பெண் தனியாக வாழ்வது, காதல், விவாகரத்து, மறுமணம் என நாம் பேச வேண்டிய எல்லாவற்றையும் பேசி விட்டோம். ஆனால் எந்த மாற்றமும் நிகழவில்லை. காலத்தின் மாறுதல்களுக்கேற்ப ஆண்களும் பெண்களும் நகர்ந்து போயிருக்கிறார்களே தவிர மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.

விவாகரத்து என்கிற சொல்லை பூதாகரப்படுத்தி பதற்றத்துக்குட்படுத்தாமல் அதை அணுகுவோம். குழந்தைகள் நலனுக்காக பிடிக்காத ஒரு வாழ்க்கையை கசப்போடு வாழ்வதைவிட பிரிந்து செல்வதுதான் எல்லோருக்கும் ஆரோக்கியமானது. அதன் பிறகேனும் அவர்கள் தங்களது பொறுப்புகளை உணர்ந்து கொள்வார்கள் என நினைக்கிறேன்’’ என்கிறார் குட்டி ரேவதி


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Christiansmanila

  மணிலாவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித நீர்தெளிப்பு திருவிழா : ஏராளமானோர் பங்கேற்பு

 • 22-01-2018

  22-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-01-2018

  21-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • Hungarystudentsstruggle

  ஹங்கேரியில் கல்வி தரத்தை உயர்த்த கோரி ஆயிரக்கணக்கணக்கான மாணவர்கள் போராட்டம்

 • colambiaparaglidingworldcup

  கொலம்பியாவில் உலகக் கோப்பை பாராகிளைடிங் போட்டி: பல்வேறு பகுதியிலிருந்து வீரர்கள் உற்சாகமாக பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்