SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அலட்சியம் வேண்டாம் பெண்ணே...

2017-07-17@ 12:57:23

நன்றி குங்குமம் தோழி

குடும்பத்தில் பெற்றோருக்கோ, கணவருக்கோ, மகனுக்கோ, மகளுக்கோ ஒரு சிறு பிரச்னை என்றால் துடித்துப்போகும் பெண்கள் தங்களுக்கு எந்தப் பிரச்னை வந்தாலும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் அலட்சியப்படுத்தி விடுவார்கள். மற்றவர்களுக்கு உள்ள பிரச்னைகளை நினைத்து நினைத்து சரியாக உண்ணாமல், உறங்காமல் உடலையும் கெடுத்துக் கொள்வார்கள்.

பெண்கள் தங்களது உடல்நிலையில் அலட்சியப்படுத்தக்கூடாத 5 அறிகுறிகளைப் பற்றி சொல்கிறார் மகப்பேறு மற்றும் பெண்நோயியல் மருத்துவர் அபிநயா.

‘‘இன்றைய காலகட்டத்தில் வெள்ளைப்படுதல் என்பது 15 வயது பெண் குழந்தை முதல் 45 வயது பெண்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் வருகிறது. ஆனால், அதை ஒரு பெரிய விஷயமாக யாரும் எடுத்துக் கொள்வதில்லை. ரத்தம் குறைவு, ஊட்டமான சாப்பாடு சாப்பிடவில்லை என்று அதை ஒரு பொருட்டாகவே கருதாமல் அலட்சியப்படுத்திவிடுகிறார்கள்.

இது மிக மிகத் தவறு. அடிக்கடி வெள்ளைப்படுகிறது என்றால் உடனடியாக மருத்துவரைச் சந்தித்து ஆலோசனைப் பெற வேண்டும். ஏனென்றால், சாதாரண தொற்றுநோயில் இருந்து புற்றுநோய் வரை வருவதற்கான அறிகுறியாக இந்த வெள்ளைப்படுதல் இருக்கலாம்.

* கர்ப்பப்பை பரிசோதனை
இளம்பிராயத்தினருக்கும் திருமணமானவர்களுக்கும் இதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஏனெனில், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்பது இந்தியாவில் பெண்களுக்கு அதிகமாக வரும் புற்றுநோய்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பெண்களை அதிகமாக தாக்கும் புற்றுநோய்களில் முதலாவது இடத்தில் இருப்பது மார்பகப் புற்றுநோய்.

இந்த கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை முன்னதாகவே கண்டுபிடித்துவிட்டால் கண்டிப்பாக குணப்படுத்திவிடலாம். அதற்கான அறிகுறிகளில் இந்த வெள்ளைப்படுதல் என்பது மிக முக்கியமானது. இதனை அலட்சியப்படுத்திவிட்டு நோய் முற்றிய பிறகு மருத்துவரிடம் செல்வதால்தான் அதிக அளவில் கஷ்டப்பட வேண்டியிருக்கும். அதனால், வெள்ளைப்படுதல் இருந்தால் அலட்சியப்படுத்தாமல் பெண்கள் அனைவரும் கர்ப்பப்பை பரிசோதனையை கண்டிப்பாக செய்துகொள்ள வேண்டும்.

* மார்பில் கட்டி
பெண்களுக்கு மார்பில் கட்டி வந்தால் சாதாரண கட்டிதான், இதனால் ஒன்றும் ஆகிவிடாது என நமக்கு நாமே ஆறுதல் சொல்லிக்கொண்டு கவனிக்காமல் விட்டுவிடுகிறார்கள். இந்த மார்பகக் கட்டியும், வெள்ளைப்படுதல் பிரச்னையும் சாதாரணமானது அல்ல. கட்டியை கவனிக்காமல் விட்டுவிட்டால் அது புற்றுநோயாக இருந்தால் பின்னர் பெரிய அளவில் பிரச்னையை ஏற்படுத்திவிடும்.

* உடல் பருமன்
தற்போது சிறு குழந்தைகள்கூட அதிக உடல் பருமனாக இருக்கிறார்கள். இந்த உடல் எடை பருமனால் உடல் உள்ளுறுப்புகள் பாதிப்பு, மாதவிடாய்க் கோளாறு, கருத்தரிப்பதில் பிரச்னை என ஏராளமான பாதிப்புகள் வர வாய்ப்புகள் உள்ளன. அதனால் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் உடல் பருமன் அதிகமாக இருக்கக்கூடாது.

இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மாதவிடாய் சரியாக வரவில்லை என்றாலும் நிறையபேர் அதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. 45 நாள், 60 நாள் என தாண்டி வருவதையெல்லாம் கண்டுகொள்வதில்லை. குறிப்பிட்ட கால இடைவெளியில் சரியாக மாதவிடாய் வரவேண்டும். 30ல் இருந்து 35 நாட்களுக்குள் வந்துவிட வேண்டும். இதையும் தாண்டி தாமதமாக வருகிறது என்றால் உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். மாதவிடாய் பிரச்னையை முதலிலேயே சரிசெய்துவிட வேண்டும்.

* கர்ப்பம் தரித்தல்
கர்ப்பம் தரிக்கும் விஷயத்திலேயும் தள்ளிப்போடுவதைத் தவிர்க்க வேண்டும். அதாவது, 30 வயதிற்குள் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இரண்டாவது குழந்தையை அடுத்து எப்போது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம். சிலர் நல்ல வேலை வேண்டும், நல்ல வீடு, கார் வாங்க வேண்டும் அப்புறம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என அலட்சியமாக இருப்பார்கள். இப்படி அலட்சியப்படுத்தினால், பிறகு கர்ப்பம் தரிப்பதில் அதிகமான கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி வரும்.

இப்போதெல்லாம் திருமணமே 25 வயதில்தான் நடக்கிறது. அதனால் 30 வயதிற்குள்ளேயாவது குழந்தையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை புதிய தொழில்நுட்பமுறையில் கர்ப்பப்பை மாற்று அறுவைசிகிச்சை தற்போது குழந்தை இல்லாத தம்பதியருக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

இந்தியாவில் தற்போது முதன்முறையாக புனேயில் உள்ள மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு கர்ப்பப்பை அறுவைசிகிச்சை செய்துள்ளார்கள். அது எந்த அளவுக்கு வெற்றிகரமாக அமையும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த கர்ப்பப்பை மாற்று சிகிச்சை குழந்தை இல்லாதவர்களுக்கு செய்யப்படுகிறது.

இரண்டு மூன்று தடவை கருச்சிதைவு ஏற்பட்டிருந்தால் கர்ப்பப்பை மாற்று சிகிச்சை செய்யலாம். குழந்தை பெற்ற ஒருவருக்கு 40 அல்லது 45 வயதில் கர்ப்பப்பையில் கட்டி இருக்கிறது, அதனால் கர்ப்பப்பையை எடுத்துவிட்டு மாற்று கர்ப்பப்பை வைக்க வேண்டும் என்றால் வைக்க மாட்டார்கள்.

முக்கியமாக 30 முதல் 35 வயதுள்ள இளம்பெண்ணுக்கு கர்ப்பப்பையில் பிரச்னை உள்ளது. அதனால் கர்ப்பம் தரிக்க முடியவில்லை என்றால் மட்டுமே மாற்று கர்ப்பப்பை வைக்கப்படும். இதில் என்ன விசேஷம் என்றால், 55 வயதுள்ள பெண்ணின் ஆரோக்கியமான கர்ப்பப்பையை எடுத்து ஓர் இளம்பெண்ணுக்கு வைக்கலாம். இதில் எந்தப் பிரச்னையும் ஏற்படாது.

ஆனால், இயற்கையாக கர்ப்பம் தரிக்க முடியாது. கர்ப்பப்பையை பெற்றுக்கொண்ட பெண் செயற்கை கருவூட்டல் முறையில் அதாவது சோதனைக் குழாய் மூலம்தான் கர்ப்பம் தரிக்க முடியும். பொதுவாக, இரண்டு மூன்று தடவை கருக்கலைப்பு உண்டானால் கர்ப்பப்பைக்குள் உள்ள சவ்வு போன்ற பகுதி பாதிக்கப்பட்டு பாதைகள் அடைத்துக் கொள்ளும்.

சிலருக்கு பிரசவத்தின்போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு கர்ப்பப்பை வேலை செய்யமுடியாமல் நின்றுவிடும். ஒருசிலருக்கு இளம்வயதில் கர்ப்பப்பையில் காசநோய் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. இந்தக் கிருமித்தொற்று அதிகமாகி கர்ப்பப்பை முழுவதும் பாதிக்கப்பட்டுவிடும்.

உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைகள் அதாவது, சிறுநீரகம், கண், இதயம் மாற்றி வைப்பதுபோல் கர்ப்பப்பையை மாற்றி வைத்தால்கூட அந்த உறுப்பு சரியாக பொருந்தி வர வேண்டும். சிலருக்கு மாற்று கர்ப்பப்பை ஒத்துக்கொள்ளாமல் கிருமித் தாக்குதல் ஏற்பட்டுவிடும். அதற்காக நிறைய மாத்திரை மருந்துகள் கொடுத்து 6 மாதகாலம் வரை பொறுத்திருக்க வேண்டும்.

6 மாதம் கழித்து அந்தப் பெண்ணுக்கு தானாகவே மாதவிடாய் வர ஆரம்பித்தால்தான் அந்தக் கர்ப்பப்பை சரியாகப் பொருந்தி உள்ளது எனக் கருதமுடியும். அப்படி பொருந்தவில்லை என்றால், வயிற்றுவலி மற்றும் அதிகமான காய்ச்சல் போன்ற அறிகுறிகள் மூலம் தெரிய வரும். அப்படி இருந்தால் பொருத்திய கர்ப்பப்பையை அகற்றிவிட வேண்டும்.

-தோ.திருத்துவராஜ்

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-08-2017

    24-08-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • starYRROSUSW

    சீனாவுக்கு கடத்த வீட்டில் நட்சத்திர ஆமை வளர்த்த வாலிபர் அதிரடி கைது

  • TripleTALAQ

    மும்முறை தலாக் கூறி விவாகரத்து பெறுவது செல்லாது! : உச்ச நீதிமன்ற அமர்வு வரலாற்று சிறப்பு தீர்ப்பு வழங்கியது

  • phiLDAYAVill42padukaYAM

    ஃபிலடெல்ஃபியாவில் ரயில் விபத்து : 42 பேர் படுகாயம்

  • tHREEboyresucedITALY

    பூகம்ப இடிபாடுகளுக்கிடையில் சிக்கி இருந்த 3 சகோதரர்கள் 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்