SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குண்டுப் பெண்ணே ஒல்லி இடுப்பு வேணுமா? கில்லி டிப்ஸ்!

2017-03-20@ 14:30:06

‘கொழுக்மொழுக்கென்று இருந்தால்தான் அழகு’ என்கிற எண்ணம் தமிழர்களுக்கு இருந்தது ஒரு காலம். அந்த காலத்தில்குஷ்புவுக்குக்  கோயில் எல்லாம் கட்டினார்கள். ஆனால் இன்றோ, த்ரிஷாக்களும் தமன்னாக்களும் லைம்லைட்டில் டாலடிக்கிறார்கள். சைஸ் ஜீரோ இடுப்புதான் இன்றைய டிரெண்ட்.கொஞ்சமே கொஞ்சம் பூசினாற்போல பப்ளியாக இருக்கும் பெண்களில் தொடங்கி. அதிகப் பருமனான பெண்கள் வரை தங்கள் உடல்வாகால் அனுபவிக்கும் தொல்லைகள் கொஞ்ச நஞ்சம் அல்ல.

துணிக்கடைகளுக்குச் சென்றால் அழகான டிசைன்கள் எதுவுமே அவர்கள் சைஸில் சிக்காது. ஓடியாடி வேலை செய்ய முடியாது. கோடையைச் சமாளிக்க முடியாது; சுற்றி இருப்பவர்களின் கேலிப்பேச்சைத் தாங்க முடியாது. இம்மாதிரி ஏகப்பட்ட தொல்லைகளைசொல்லிக்கொண்டே போகலாம்.இவை ஒருபுறம் என்றால் ‘ஒபிஸிட்டி’ பிரச்னையால் உயர் ரத்த அழுத்தம் முதல் சர்க்கரை நோய் வரை ரவுண்டுகட்டி அடிக்கக் காத்திருக்கின்றன. இந்த நோய்களின் கொலைமிரட்டலால் உளவியல்ரீதியாக குண்டுப் பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் என்கிறார்கள் மனநல ஆலோசகர்கள்.இந்தப் பிரச்னையை எப்படிசமாளிப்பது? நிபுணர்களையே கேட்போம்.

உணவால் ஒல்லியாகலாம்! அம்பிகா சேகர் உணவு ஆலோசகர்


ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மூலமாக தேவையற்ற கொழுப்பைக் கரைக்க முடியும். எனவே, உணவுமுறையைத் திட்டமிட வேண்டியது மிகவும் அவசியம்.நமது உடலில் 10 முதல் 20 சதவிகிதம் அளவுக்குக் கொழுப்பு இருப்பது ஆரோக்கியமானது. இதற்கு மேல் இருந்தால் ‘ஒபிஸிட்டி’ பிரச்னை ஏற்பட்டு உயர் ரத்த அழுத்தம் முதல் சர்க்கரை நோய் வரை பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.
ஒருவரின் உயரத்துக்கு ஏற்ற எடையை பி.எம்.ஐ என்ற அளவால் குறிப்பிடுவார்கள். ஒவ்வொருவரும் அவர்களின் பி.எம்.ஐ அளவு ஆரோக்கியமாக இருக்கும்படிபார்த்துக்கொள்ள வேண்டும்.

உதாரணமாக, ஒருவர் 160 செ.மீ உயரம் உள்ள ஒரு பெண் 55 முதல் 65 கிலோ எடைக்குள் இருக்கலாம். அதற்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கக் கூடாது.சிலர் உடல் எடையை உடனடியாகக் குறைக்க வேண்டும் என்று கேள்விப்படும் டயட்களை எல்லாம் முயற்சி செய்கிறார்கள். இது தவறான விஷயம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு டயட் செட் ஆகும். மருத்துவர், உணவியல் நிபுணரை ஆலோசித்து உங்களுக்கு ஏற்ற டயட் எது என்பதை தெரிந்துகொண்டு அதைப் பின்பற்றுவதே சரியான முறை.எண்ணெய், சர்க்கரை இரண்டிலுமே கலோரி அதிகம் என்பதால், அவை போதிய உடல் உழைப்பின் மூலம் எரிக்கப்படாவிட்டால் கொழுப்பாக உடலில் தங்கும். எனவே, அளவுக்கு அதிகமாக இரண்டையும் எடுத்துக்கொள்ள வேண்டாம்.
ஒருவர் சாப்பிடும் உணவில் 20 சதவிகிதம் கார்போஹைட்ரேட், 30 சதவிகிதம் புரதம்,50 சதவிகிதம் பழம் மற்றும் காய்கறிகள் இருப்பது அவசியம். இவை ஒவ்வொருவரின் உடல் அமைப்பு, அவர்களின் வேலை, சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும்.
உடனடியாக எடை குறைய வேண்டும் என்று நினைப்பது தவறு. எப்படி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்ததோ அப்படி கொஞ்சம் கொஞ்சமாக குறைப்பதுதான் ஆரோக்கியமான வழி. ஒரு மாதத்துக்கு இரண்டு அல்லது மூன்று கிலோ குறைக்க வேண்டும் என்று திட்டமிட்டாலே போதும்.

ஆரோக்கியமான ஒரு பெண்ணுக்கு நாள் ஒன்றுக்கு 2,000 கலோரியும் ஆணுக்கு 2,500 கலோரியும் தேவை. விளையாட்டு வீரர்கள்,
பாடி பில்டர்களுக்கு சற்று அதிகமாகத் தேவைப்படும். மற்றவர்கள் தேவையான கலோரிக்கு அதிகமாக உடலில் சேர்க்கும்போது அது கொழுப்பாகமாறுகிறது.உண்ணும் உணவு ஒவ்வொன்றுக்கும் ஒரு கலோரி அளவு உள்ளது. நீங்கள் உண்ணும் உணவு எவ்வளவு கலோரி என்பதை அறிந்து உண்பது எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து, வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், நார்ச்சத்து, நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள், பழங்கள்  சாப்பிடலாம். இவை அனைத்துமே உடலுக்கு அவசியம். எனவே, இவை அனைத்தும் கொண்ட சமச்சீரான உணவை எடுத்துக்கொள்வதுநல்லது.

உடல் எடையை குறைக்க விரும்புவோர் சாக்லேட், கோலா போன்ற கார்போனேட்டட் பானங்கள், செயற்கை பழரச பானங்கள், ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட்ஸ் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.சாப்பிடாமல் பட்டினி இருப்பது ஒரு தவறான விஷயம். பட்டினி இருக்கும்போது உடலின்வளர்சிதை மாற்றம் எனப்படும் மெட்டபாலிசம் கெடுகிறது. இதனால், நாம் நினைப்பதற்கு மாறாக எடை அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம்.சிலர் பரம்பரைரீதியாகவே குண்டான உடல்வாகோடு இருப்பார்கள். இவர்களுக்கு உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் மிகவும் அவசியம்.

கிராஷ் டயட் இருக்கும்போது முறையான உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால் சதை தொங்கிப்போய் வயதான தோற்றம் ஏற்படும். எனவே, உடற்பயிற்சியும் அவசியம்.மேலும், தினசரி எட்டு மணி நேர தூக்கம் மிகவும் அவசியம். தூக்கத்தின் போதுதான் நம் உடலின் வளர்சிதை மாற்றப் பணிகள் நடக்கின்றன. தூக்கம் பாதிக்கப்படும்போது உடல் பருமன் ஏற்படுகிறது.ஆழ்ந்த இருட்டில் நாம் உறங்கும்போது மூளையில் மெலட்டோனின் என்ற சுரப்பு உருவாகிறது. லைட் வெளிச்சத்திலோ டி.வி, கணிப்பொறி போன்ற ஒளிர்திரை வெளிச்சத்திலோ உறங்கும்போது மெலட்டோனின் சுரப்பது இல்லை. இதனால், ஆழ்ந்த தூக்கம் கிடைக்காமல்போகிறது. எனவே, உறங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு மொபைல், டி.வி, கணிப்பொறி போன்றவற்றை அணைத்துவிடுவது நல்லது.

ஃபிட்டாக்கும் பயிற்சிகள் ராகினி , உடற்பயிற்சி நிபுணர்.

உடல் பருமனாக இருப்பவர்கள் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். முதலில் அவர்களை மனரீதியாக இந்தப் பிரச்னையில் இருந்து விடுவிக்க வேண்டும். அதன் பிறகுதான் உடற்பயிற்சி குறித்து ஆலோசனை வழங்க வேண்டும். மற்றவர்கள் இரண்டு கிலோ எடையைக் குறைத்தாலும் அது தோற்றத்தில் நன்றாக வெளிப்படும். ஆனால், பிளஸ் சைஸில் இருப்பவர்கள் ஐந்து கிலோ குறைந்தால்கூட தோற்றத்தில் பெரிய மாற்றம் வராது. உடல் எடையைக் குறைக்க முற்படும்போது இப்படியான விஷயங்களால் சோர்ந்துபோகக் கூடாது. குண்டாக இருப்பவர்களின் கால் முட்டி அதிக வலு இருக்காது. அதனால் அவர்கள் முட்டியை சுற்றிலும் உள்ள தசையை வலுவாக்க உடற்பயிற்சி செய்ய வேண்டும். முட்டிக்கு அதிக ஸ்ட்ரெய்ன் இல்லாத உடற்பயிற்சிகள் அளிக்க வேண்டும். அதில் அவர்கள் ஓரளவு திடமானதும் மற்ற உடற்பயிற்சிகளை அளிக்க வேண்டும்.

பருமனானவர்களுக்கு உடல் சமநிலை குறைவாக இருக்கும். எனவே, நடனமாடுவது, ஏரோபிக்ஸ் போன்றவற்றை மிகவும் குண்டானவர்கள் முயன்று, கீழே விழுந்து எலும்பை உடைத்துக்கொள்ள வேண்டாம். இவர்களுக்கு உடற்பயிற்சிகள்தான் பெஸ்ட்.
தினசரி சாப்பிடுவதைப் போல் உடற்பயிற்சியும் அவசியமாகச் செய்ய வேண்டும். என்ன மாதிரியான உடற்பயிற்சி,  யாருக்குத் தேவை என்பதை நிபுணர்தான் முடிவு செய்ய முடியும். எனவே, நீங்களாகவே முயற்சி செய்வதைவிட ஒரு நல்ல ஜிம்மாகப் பார்த்துச்சேரலாம். அடிப்படையான அறிவுரைகள் பெற்ற பின்பு சுயமாக வீட்டில் செய்யலாம்.எல்லோருக்குமே கடினமான உடற்பயிற்சி தேவைப்படும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு வாக்கிங், ஜாகிங், ஸ்ட்ரெச்சிங் போன்ற பயிற்சிகளோடு சில எளிய உடற்பயிற்சிகளே போதுமானது.

பிளஸ் சைஸ் ஆட்களுக்கு பிரத்யேக உடைகள்! தபசும், ஃபேஷன் டிசைனர்

‘ஆள் பாதி; ஆடை பாதி’  என்பார்கள். பருமனாக உள்ளவர்கள் உடையில்  சின்ன சின்ன மாற்றங்களைச் செய்வதன் மூலம், குண்டான தோற்றத்தை ஓரளவுத் தவிர்க்கலாம்.ஒவ்வொரு பெண்ணுக்கும் உடலின் ஏதாவது ஒரு பகுதி அழகாக இருக்கும். அந்த அழகை மேம்படுத்திக்காட்டுவது போல உடை அணியும்போது, குண்டான உடல்வாகு தெரியாமல் போகிறது. உதாரணமாக, சிலருக்கு வயிறு பெரிதாக தொப்பையுடன் இருக்கும். ஆனால், தொடை மற்றும் கால்கள் மெலிதாக இருக்கும். இவர்கள் தொப்பையை மறைக்கும் விதமாக அழகான டாப் அணிந்து, கால் அழகை மேம்படுத்த அழகான ஜீன்ஸ் பேண்ட் அணியும்போது அவர்களின் உடல் பருமன் பெரிதாக மற்றவர்களின் கண்களை உறுத்தாது.

குண்டாக இருக்கும் பெண்கள் இரண்டு விதமான சைஸ் மற்றும் ஷேப்களில்தான் இருப்பார்கள். ஒன்று ஆப்பிள் ஷேப், அதாவது இடுப்புக்கு மேல் உள்ள பகுதி இடுப்புக்கு கீழ் உள்ள பகுதியைவிட பருமனாக இருக்கும். மற்றொன்று பியர் ஷேப், இதில் இடுப்புக்கு கீழ் உள்ள பகுதி பருமனாக இருக்கும்.ஆப்பிள் ஷேப்பில் இருப்பவர்கள் என்றால் அவர்கள் அடர்த்தியான நிறங்களின் மேலாடையும், மென்மையான  நிறங்களில் பேண்டும் அணியலாம். அதேபோல் பியர் ஷேப்பில் இருக்கும் பெண்கள் மென்மையான நிறங்களில் மேலாடையும் அடர்த்தியான பேண்டும் அணியலாம்.
 
அடர்த்தியான நிறங்கள் நம்மை ஒல்லியாக காண்பிக்கும். அதே சமயம் மெல்லிய நிறங்கள் நம்மை குண்டாக எடுத்துக்காட்டும். குண்டான பகுதியை அடர்நிறங்களில் மறைத்தும், குண்டற்ற பகுதியை மென்மையான நிறங்களில் வெளிப் படுத்தியும் ஆடை அணியும்போது தோற்றம் மேம்படுகிறது. மேலும், சின்னச் சின்ன டிசைன்கள் உள்ள உடைகளை அணிந்தால், பார்க்க ஒல்லியாக தெரிவார்கள். அதே போல் வெர்டிகல் மற்றும் டயக்னல் கோடிட்ட உடைகளை அணியலாம்.பருமனானவர்கள் கிடைவாக்கில் (ஹரிசான்டல்) கோடுகள் உள்ள உடையைத் தேர்வுசெய்ய வேண்டாம். அது மேலும் பருமனாகக் காட்டும்.

பியர் ஷேப் அமைப்புக்கொண்டவர்கள்,மார்பகப் பகுதியில் ஹாரிசான்டல் கோடுகள்கொண்ட டிசைன் அணியும்போது, அது அவர்களின் குண்டான கால் பகுதிக்கு இணையாக மேல் உடலும் தோன்றுவதால், சிறப்பான தோற்றம் கிடைக்கும்.
சிலர், குண்டாக இருந்தாலும் கைகள் பார்க்க அழகாக இருக்கும். அவர்கள் ஸ்லீவ்லெஸ் உடை அணியலாம். கைகள் குண்டாக இருப்பவர்கள் ஷார்ட் ஸ்லீவ் மற்றும் முக்கால் கை அல்லது முழங்கை வரை உள்ள உடைகளை அணியலாம். இவர்கள் எப்போதும் கழுத்தை இருக்கி பிடிக்கும் உடைகளை அணியக் கூடாது. மாறாக, பரந்த கழுத்துள்ள உடைகளை அணியலாம்.

ஷிபான் உடைகளை தவிர்த்து விட்டு பட்டு மற்றும் காட்டன் உடைகளை அணியலாம். இவை நேர்த்தியாகவும் பார்க்க அழகாகவும் இருக்கும்.குண்டாக இருப்பவர்களுக்குத் தசைகளும் ஆங்காங்கே அதிகமாக இருக்கும். அதை இழுத்துப்பிடிக்கும்படியான உள்ளாடைகள் அணிந்து, அதற்கு மேல் உடைகளை அணியும்போது, பருமனான தோற்றத்தை ஓரளவு கட்டுப்படுத்தலாம்.
பருமனானவர்களுக்கு என இப்போது பிரத்யேக உள்ளாடைகள் வருகின்றன. சில உள்ளாடைகள் இடுப்பு வரை உள்ளன. வயிற்றுப் பகுதிகளில் தேவையற்ற சதைப்பிடிப்பு உள்ளவர்கள், தொப்பை உள்ளவர்கள் இந்த இடுப்புவரை வரும் உள்ளாடைகளை அணியும்போது தோற்றம் மேம்படும்.

அதே போல் மேலாடைகளிலும் அவர்களின் மார்பகங்களை முழுமையாக மறைப்பதற்கு ஏற்பவும், அவற்றை அழகாக எடுத்துக்காட்டுவதற்காகவும் பிரத்யேக பிராக்கள் உள்ளன.தரமானதாக தேர்வுசெய்து அணியலாம். பேண்ட் அணியும்போது, நிறைய லேயர் கொண்ட பேண்ட் அணிய வேண்டாம். ஸ்ட்ரெயிட் கட் கொண்ட பலாசோ பேண்ட் உடுத்தலாம். லெக்கிங்ஸ் உடுத்துவதைத் தவிர்க்கலாம். தொடைப் பகுதி பெரிதாக இருப்பதால்லெக்கிங்ஸ் செட் ஆகாது. ஸ்கர்ட் போன்ற உடைகளும் அணியலாம். ஏலைன் ஸ்கர்ட் பார்க்க அழகாக இருக்கும். அதே போல் ராப் அரவுண்ட் ஸ்கர்ட்டும் இவர்கள் அணியலாம்.

அனார்கலி மற்றும் டியூனிக்ஸ் பட்டியாலா பேண்ட், தோதி சல்வார் போன்றவற்றை அணிவதைத் தவிர்க்க வேண்டும். இவை மேலும்பருமனான தோற்றத்தை ஏற்படுத்தும்.சல்வாருக்கு அடுத்து பெண்களுக்குப் பிடித்த உடை புடவை. காட்டன் புடவைகளை அணியாமல், அடர்த்தியான நிறங்களில் ஜார்ஜெட், ஷிபான் புடவைகள் அணியலாம். மைசூர் சில்க் மற்றும் கிரேப் புடவைகள் அணியும்போது பார்க்க ஒல்லியான தோற்றம் இருக்கும். புடவையில் நிறைய வேலைப்பாடுகள் இருந்தால் தவிர்ப்பது நல்லது. பருமனானவர்களுக்கு இது மேலும் பருமனான தோற்றத்தைஏற்படுத்தும்.உடையில் மட்டும் கவனம் செலுத்தாமல், அதற்கு ஏற்ப அணிகலன்களிலும் கவனம் செலுத்துவது அவசியம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • children_protestt11

  ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் - பிரசாரத்துக்கு சிறுவர்களை ஈடுபடுத்தும் அரசியல் கட்சிகள்

 • 2500_type_idlyy

  உலக இட்லி தினம் - சென்னையில் 2500 வகையான இட்லிகளின் கண்காட்சி நடந்தது

 • 30-03-2017

  30-03-2017 இன்றைய சிறப்பு படங்கள்

 • FLIHJTarestre

  செம்மரக்கட்டை கடத்தலில் 6 மாதம் தலைமறைவான விமான பணிப்பெண் கைது: கொல்கத்தாவில் சிக்கினார்

 • farmersSUPPORtstuMAR

  விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் மாணவர்கள் கடலில் இறங்கி போராட்டம்