பெரியாறு அணை வழக்கு கேரளாவின் புது ஆவணம் ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
பதிவு செய்த நாள்
11/24/2009 12:58:30 AM
புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணை வழக்கில் கேரளாவின் புதிய ஆவணங்களை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கும் என கடந்த வாரம் தெரிவிக்கப்பட்டது. இதன்படி, நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையில் நீதிபதிகள் முகுந்தகம் சர்மா, ஆர்.எம்.லோதா, பி.சுதர்சன ரெட்டி, தீபக் வர்மா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று முல்லைப் பெரியாறு அணை வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஜெயின் கூறுகையில், இரு மாநிலங்களுக்கும் வாதிட 2 நாட்கள் போதுமா? என கேட்டார். உடனே, இந்த வழக்கு இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னையாக இருப்பதால் விவாதத்திற்கு கூடுதல் நாட்கள் வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பராசுரன் வாதிட்டார். தொடர்ந்து கேரள அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே கூறுகையில்,
2 மாநிலங்கள் விவாதத்திற்கு 9 நாட்கள் தேவைப்படும் என கூறினார். மேலும் தங்கள் மாநிலம் சார்பில் புதிய ஆவணங்கள் தாக்கல் செய்ய அனுமதி வேண்டும் என்றார். ஆனால், இதை ஏற்க மறுத்த நீதிபதி ஜெயின், வழக்கு விசாரணை ஜனவரி 19ம் தேதி தொடங்கும் என்றும், புதிய ஆவணங்கள் தாக்கல் செய்வது குறித்து அப்போது முடிவு செய்யலாம் என்றும் கூறினார்.