வில் வளைந்து நிமிர்வதுபோல் சமயோசித புத்தியுடன் நடந்து கொள்ளும் நீங்கள், சிக்கல்களின் ஆணிவேரை கண்டறிந்து அகற்றுவதில் வல்லவர்கள். உங்களுடைய ஏழாவது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் தொட்ட காரியங்கள் எல்லாம் துலங்கும். பிரபலங்கள் பாராட்டும் அளவிற்கு நடந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த பதவிகள் கிடைக்கும். குருபகவான் ஏழாவது வீட்டை பார்ப்பதால் உங்களிடம் தேங்கிக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உள்மனதிலிருந்த அச்சம் நீங்கி தெளிவு பிறக்கும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் வந்தாலும் அன்பும் அரவணைப்பும் குறையாது. தெய்வ நம்பிக்கை மேலோங்கும். குருபகவான் உங்களின் ஒன்பதாவது வீட்டைப் பார்ப்பதால் செலவுகளை ஓரளவு கட்டுப்படுத்துவீர்கள். தந்தையாருடன் அடிக்கடி கருத்து மோதல் வந்ததே! அது இனி குறையும். பிள்ளைகளிடம் இருந்த சில கெட்ட பழக்கங்கள் நீங்கும். மகளுக்கு தடைபட்டுக் கொண்டிருந்த திருமணம் கூடிவரும். மகனின் வேலைக்காக சிலரின் உதவியை நாடுவீர்கள். வரவேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள்.
வருடம் பிறக்கும் நேரத்தில் குரு மூன்றாம் வீட்டில் மறைந்திருப்பதால் அங்கீகாரமில்லாத நிதி நிறுவனங்களில், வங்கிகளில் பணத்தைப் போட்டு ஏமாறாதீர்கள். முக்கியமாக, குறைந்த விலையில் தங்கம் தருவதாக கூறுபவர்களிடம் கவனமாக இருங்கள். 4.5.2010 முதல் 6.11.2010 வரை குரு 4ம் வீட்டில் அமர்வதால் முன்பின் அறிமுகமில்லாதவர்களை வீட்டிற்குள் அழைத்து வரவேண்டாம். சொத்து விற்கும் விஷயத்தில் எவரிடமும் முன்பணம் வாங்க வேண்டாம். வாடகை வீடு மாறுபவர்கள், அட்வான்ஸ் தொகையை வாங்கியபின் வீட்டை காலி செய்வது நல்லது. சகோதரகாரகனான செவ்வாய் தொடர்ந்து பலவீனமாக இருப்பதால் உடன்பிறந்தவர்களுடன் உறவுமுறை சுமாராக இருக்கும். பிள்ளைகளை அவர்களின் உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிரிய வேண்டி வரும். நெருங்கிய உறவினர்களானாலும் சரி, நண்பர்களானாலும் சரி, கொஞ்சம் இடைவெளி விட்டு பழகுவது நல்லது. ராசிக்குள் ராகு அமர்ந்திருப்பதால் தலைச்சுற்றல், மன உளைச்சல், முன்கோபம் அதிகரிக்கும். உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகளை எடுத்து அவதிப்படாதீர்கள்.
7ம் வீட்டில் கேது நிற்பதால் மனைவிக்கு அறுவை சிகிச்சை, கர்ப்பப்பை கோளாறு வரும். இருவருக்குமிடையே அவ்வப்போது வீண் சந்தேகம், குழப்பம் வந்து நீங்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகளை கவனமாகக் கையாளுங்கள். அக்கம்&பக்க வீட்டாரிடம் குடும்ப விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். சனிபகவான் 10ம் வீட்டில் தொடர்வதால் சில சவாலான காரியங்களை எடுத்துச் செய்வீர்கள். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள்.
வியாபாரிகளே! கடையை விரிவுபடுத்தி, பெரிய முதலீடுகளை போட்டு நஷ்டப்படாதீர்கள். இருப்பதை வைத்து என்ன செய்யலாம் என யோசியுங்கள். மற்றவர்களின் ஆலோசனையை ஒதுக்கித் தள்ளுங்கள். உங்கள் அனுபவ அறிவை பயன்படுத்துங்கள். வேலையாட்கள் அவ்வப்போது விடுப்பில் சென்று உங்களை டென்ஷனாக்குவார்கள். மெடிக்கல், எலக்ட்ரானிக்ஸ், பெட்ரோ கெமிக்கல் வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்கள் முரண்டு பிடிப்பார்கள். செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். உத்யோகஸ்தர்களே! மற்றவர்களின் பணிகளையும் சேர்த்துப் பார்க்க நேரிடும். சக ஊழியர்களில் சிலர் உங்களைப் பற்றி மேலதிகாரியிடம் குறை கூறுவார்கள். அலுவலகத்தின் எல்லா நடவடிக்கைகளிலும் கவனமாக இருங்கள். இடமாற்றங்கள் வரும். மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அதிகாரிகளால் அனுகூலம் உண்டு.
கன்னிப் பெண்களே! நல்லவர்களைப்போல் நடித்து சிலர்
ஏமாற்றுவார்கள். இப்போதைக்குக் காதல் வேண்டாமே. பெற்றோரின் அறிவுரை இப்போது கசக்கும்;
பின்னர் இனிக்கும். திருமணம் கொஞ்சம் தாமதமாகி முடியும். விடுபட்ட பாடத்தை முடித்து
வேலையில் சேரப்பாருங்கள். மாணவர்களே! தேர்வில் வெற்றி எளிது என்று அலட்சியமாக
இருக்காமல், எப்போதும் படித்து, எழுதி பார்ப்பது நல்லது. அரசியல்வாதிகளே! உங்களின்
நடவடிக்கைகளை தலைமை உற்று நோக்கும். உட்கட்சிப்பூசலில் தள்ளியே இருங்கள். கலைஞர்களே!
உங்களுக்கு வாய்ப்பு தருவதாக சில நிறுவனங்கள் இழுத்தடிக்கும். வீண் கிசுகிசுக்களும்,
புகார்களும் வரும். விவசாயிகளே! பக்கத்து நிலத்துக்காரரை அனுசரித்துப் போங்கள்.
இந்தப் புத்தாண்டு பலவிதங்களில் உங்களை பக்குவப்படுத்தும். சிக்கனத்தாலும்,
சகிப்புத்தன்மையாலும் வெற்றி பெற வைக்கும்.
பரிகாரம்:
திருச்சிக்கு அருகேயுள்ள உறையூர் வெக்காளியம்மனை தரிசனம் செய்து வாருங்கள். மரக்கன்று நட்டு பராமரியுங்கள்.
|





