பண்பாடு கலாசாரத்தின் மீது பற்று வைத்திருக்கும் நீங்கள், புதுமையையும் விரும்புவீர்கள். எதையும் ஆழமாகப் பார்க்கும் நீங்கள், சமூக சீர்கேடுகளை களைவதில் ஆர்வமுள்ளவர்கள்.
குருபகவான் உங்கள் சுகஸ்தானத்தை பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பிரபலங்கள் உதவுவார்கள். தாயாரின் ஆசி கிட்டும். வீடுகட்டும் பணி முழுமையடையும். வாகனம் வாங்குவீர்கள். ராகுபகவான் உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் இருக்கும்போது இந்த வருடம் பிறப்பதால் சாதிக்க வேண்டுமென்ற வைராக்கியம் பிறக்கும். புதிய திட்டங்களை தீட்டி வெற்றி பெறுவீர்கள். வெளிநாட்டிலிருக்கும் நண்பர்கள் உதவுவார்கள்.
குருபகவான் ராசிக்கு 12ல் அமர்ந்திருப்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைத்து, சிக்கனமாக இருக்கப் பாருங்கள். குடும்பத்தில் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வந்துபோகும். மனைவி, பிள்ளைகளை அரவணைத்துப் போங்கள். உங்கள் குடும்ப அந்தரங்க விஷயங்களில் மற்றவர்கள் மூக்கை நுழைக்க விடாதீர்கள். சில காரியங்கள் இழுபறியாகி முடியும். நம்பிக்கைக்குரியவராக இருந்தாலும் ரகசியங்களை பகிர்ந்துகொள்ள வேண்டாம். எல்லாவற்றிலும் உங்களின் நேரடி கவனம் இருப்பது நல்லது. நீண்டநாட்களாக செல்ல வேண்டுமென நினைத்த புகழ்பெற்ற புண்ணிய தலத்திற்குச் சென்று வருவீர்கள்.
குரு 6ம் வீட்டைப்பார்ப்பதால் உங்களை சுற்றியிருப்பவர்களின் தராதரத்தை புரிந்து கொள்ளுவீர்கள். எதிரிகளில் சிலர் நண்பர்களாவார்கள். குரு 8ம் வீட்டைப் பார்ப்பதால் திடீர் பயணங்கள் இருக்கும். 4.5.2010 முதல் 6.11.2010 வரை உங்கள் ராசிக்குள்ளேயே குரு வந்தமர்வதால் உணவில் கட்டுப்பாடு தேவை. நேரம் கடந்து சாப்பிடுவதையும் தவிர்க்கவும். சர்க்கரை நோய் வரக்கூடும். நடைபயிற்சியை மேற்கொள்ளத் தவறாதீர்கள். சிறிய உபாதை என்றாலும் மருத்துவரை பார்ப்பது நல்லது. பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். விரக்தி, ஏமாற்றம் வந்து நீங்கும். சகோதர வகையில் அதிக உரிமையெடுத்துக் கொள்ள வேண்டாம். கடந்தகால சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள்.
கேது உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் இந்த வருடம் முழுக்க தொடர்வதால் பதட்டத்திலிருந்து விடுபட வைப்பதுடன் பக்குவப்படவும் வைக்கும். கனிவான பேச்சாலேயே காரியங்களை சாதிப்பீர்கள். மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். குலதெய்வக் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று நேர்த்திக்கடனை முடிப்பீர்கள். ராசிக்கு 7ம் வீட்டில் சனி நிற்பதால் இனி எதையும் திட்டமிட்டு செய்யப் பாருங்கள். வெளிவட்டாரத்தில் உஷாராகப் பழகுங்கள். நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்பதை தரம் பிரித்துப் பார்க்க முடியாமல் தடுமாறுவீர்கள். முன்புபோல கேட்டவர்களுக்கெல்லாம் வாரி வழங்கிக் கொண்டிருக்காதீர்கள். வருங்காலத்தை மனதில்கொண்டு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் தலைதூக்கும். மனைவிக்கு அறுவை சிகிச்சை வரக்கூடும். மனைவிவழி உறவினர்களுடன் ஒத்துபோக முடியாத நிலை உருவாகும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். தோலில் நமைச்சல், அலர்ஜி, செரிமான-வாயுக்கோளாறால் நெஞ்சுவலியும் வந்து நீங்கும்.
வியாபாரிகளே! போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் கடையை விரிவுபடுத்துவீர்கள். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த சலுகை திட்டங்களை அறிவிப்பீர்கள். அனுபவமிகுந்த வேலையாட்களை சேர்ப்பீர்கள். நன்கு அறிமுகமானவர்களானாலும் கடன் தரவேண்டாம். புரோக்கரேஜ், ஏஜென்ஸி வகைகளால் ஆதாயம் உண்டு. கூட்டு த்தொழிலில் பங்குதாரர்களுடன் அவ்வப்போது மனஸ்தாபங்கள் வெடிக்கும். ஜனவரி, பிப்ரவரி, ஜூலை, டிசம்பர் மாதங்களில் லாபம் உயரும். உத்யோகஸ்தர்களே! அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மற்றவர்கள் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்கப்போய் சக ஊழியர்களுடன் மனத்தாங்கல் வரும். தலைமையை அனுசரித்துப் போங்கள். பிப்ரவரி, ஜூலை, செப்டம்பர் மாதங்களில் ஓரளவு திருப்தி உண்டாகும்.
கன்னிப் பெண்களே! நீங்கள் ஆசைப்பட்டதைப் போலவே நல்ல கணவர் அமைவார். புதிய வேலை கிடைக்கும். மாணவர்களே! ஏனோ தானோ என்று படிக்காமல் முழு கவனத்தையும் செலுத்துங்கள். அரசியல்வாதிகளே! கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். கலைஞர்களே! உங்கள் வெற்றி தொடரும்; அரசு பாராட்டும். விவசாயிகளே! மரப்பயிர்களால் காசுபணம் பார்ப்பீர்கள்.
இந்தப் புத்தாண்டு, நெளிவு சுளிவுகளைப் புரிந்து கொள்வதாலும், வளைந்து கொடுத்துப் போவதாலும் வாழ்வில் முன்னேற்றத்தை தரும்.
பரிகாரம்:
காரைக்குடிக்கு அருகேயுள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை தரிசித்து வாருங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.
|





