மற்றவர்கள் மனது புண்படாதபடி எதையும் செய்பவர்களே! நாடு கடந்து சென்றாலும் சொந்த ஊரை மறக்காதவர்களே! பிள்ளைகளின் மீது அதிகம் பிரியமுள்ளவர்களே! உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் குருபகவான் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் குடும்பத்தில் நிலவி வந்த தொடர் யுத்தமெல்லாம் விலகும். கணவன்-மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகளை இனி கட்டுப்படுத்துவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்யும் அளவிற்கு பணம் வரும். வீட்டில் தடைபட்டுக் கொண்டிருந்த கல்யாண நிகழ்ச்சிகள் இனி நடந்தேறும். குழந்தை வரம் வேண்டி கோயில் கோயிலாக ஏறி இறங்கிய தம்பதியருக்கு அழகான வாரிசு உருவாகும். தாயாரின் உடல் நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும். ஆரோக்யம் கூடும். இனி உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். குலதெய்வக் கோயிலுக்குச் செய்ய வேண்டிய நேர்த்திக் கடனை உடனே முடிப்பீர்கள்.
ராசிக்கு 3ம் வீட்டில் ராகு நிற்பதால் பிரச்னைகளை கண்டு அஞ்சாமல் பதிலடி கொடுக்கும் அளவிற்கு மனதைரியம் பிறக்கும். பிரபலங்கள், நாடாளுபவர்களின் உதவியுண்டு. அரைகுறையாக நின்றுபோன பல வேலைகளை இனி முழு மூச்சுடன் முடித்துக் காட்டுவீர்கள். உங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு இதோ, அதோ என்று இழுத்தடித்தவர்கள் இப்பொழுது திருப்பித் தருவார்கள். கேது 9ம் வீட்டில் நிற்பதால் தந்தையாரின் உடல்நிலை பாதிக்கும். யாருக்காகவும் பைனான்ஸில் பணம் வாங்கித் தரவேண்டாம். அவ்வப்போது எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும். என்றாலும் குரு ஐந்தாம் பார்வையால் உங்களின் 9ம் வீட்டை பார்ப்பதால் தந்தையுடனான மனஸ்தாபங்கள் நீங்கும். தந்தைவழி சொத்திலிருந்த வில்லங்கம் விலகும். தொழிலதிபர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களின் விசேஷங்களில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியிருந்தீர்களே! இனி உற்சாகமாக கலந்து கொள்வீர்கள். பதினோறாவது வீட்டை குரு பார்ப்பதால் உங்களின் செல்வாக்கு உயரும். ஏழரைச்சனி நடப்பதால் உடல் அசதி, மனச்சோர்வு வரும். பீரோ சாவியை அடிக்கடி மறந்து வைத்து விடுவீர்கள். ஊருக்கு செல்லும் முன் சமையலறையில் கேஸ் இணைப்பை சரிபார்த்து செல்லுங்கள்.
4.5.2010 முதல் 6.11.2010 முடிய குருபகவான் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் சென்று மறைவதால் அலைச்சலை உண்டாக்குவார். என்றாலும் 22.5.2010 முதல் 27.9.2010 முடிய உள்ள காலகட்டத்தில் குருபகவான் உங்களின் சுகாதிபதியும் பூர்வ புண்யாதிபதியுமான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் செல்வதால் வங்கிக் கடனுதவியுடன் வீடு வாங்குவீர்கள். பழைய சொத்துப் பிரச்னை நல்ல விதத்தில் முடியும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். தாயார் உதவுவார். இருந்தாலும் சில நேரங்களில் பழைய சம்பவங்களை நினைத்து வருந்துவீர்கள்.
வியாபாரிகளே! எதைத் தொட்டாலும் நஷ்டத்தில் முடிந்ததே! இனி புதுப்புது திட்டங்களால் போட்டியாளர்களை திணறடிப்பீர்கள். கொடுக்கல்-வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் இணைவார்கள். வேலையாட்கள் இனி பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உத்யோகஸ்தர்களே! எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் இப்பொழுது கிட்டும். சக ஊழியர்கள் உங்களிடம் அன்பாக பேசினாலும் மேலதிகாரியிடம் உங்களை பற்றி புகார் செய்து கொண்டுதான் இருப்பார்கள். புது வாய்ப்புகளும் தேடி வரும். மார்ச், ஏப்ரல், ஆகஸ்ட் மாதங்களில் சம்பளம் உயரும்.
கன்னிப் பெண்களே! மனதில் மறைக்கத் தெரியாமல் வெளிப்படையாக பேசி விவகாரங்களில் சிக்கித் தவித்தீர்களே! இனி பேச்சில் அனுபவம் தெரியும். நல்ல கணவர் வந்தமைவார். மாணவர்களே! உங்களால்தான் குடும்பம் தலைநிமிரும் என்பதை உணர்ந்து படிக்கப் பாருங்கள். கெட்ட நண்பர்களை ஒதுக்குங்கள். ஏழரைச் சனி இருப்பதால் கடைசி நேரத்தில் படிக்காமல் முன்கூட்டியே படித்து வைத்துக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகளே! எதிர்க்கட்சியைப் பற்றி விமர்சனம் செய்து நேரத்தை வீணடிக்காமல் ஆக்கப்பூர்வமாக செயல்படப் பாருங்கள். கலைஞர்களே! பெரிய நிறுவனம் உங்களை அழைத்துப் பேசும். கிடைக்கும் வாய்ப்புகளையும் தக்கவைத்துக் கொள்ளுங்கள். விவசாயிகளே! வற்றிய கிணறு சுரக்கும். டிராக்டர் வாங்க லோன் கிடைக்கும். விளைச்சலை அதிகப்படுத்துவீர்கள்.
இந்தப் புத்தாண்டு தைரியத்தையும் எதிர்பாராத வளர்ச்சியையும் தருவதோடு புதிய திட்டங்களை நிறைவேற்றவும் உறுதுணையாக இருக்கும்.
பரிகாரம்:
கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருநாகேஸ்வரத்தில்
வீற்றிருக்கும் நாகநாதரையும் மங்கள ராகுவையும் தரிசியுங்கள். கட்டடத்
தொழிலாளிகளுக்கு உதவி செய்யுங்கள்.
|





