உளவியல் அறிந்த நீங்கள், மற்றவர்களின் முகத்தைப் பார்த்தவுடனேயே அவர்களைப் பற்றி முடிவெடுத்து விடுவீர்கள். தன்னை அண்டி வந்தவர்களை அரவணைத்துப் போகும் நீங்கள் அதிகாரம் செய்பவர்களை கண்டு அஞ்சமாட்டீர்கள். உங்கள் ராசியை ஐந்து கிரகங்கள் பார்க்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதையும் சாதிப்பீர்கள். ஆனால் உங்கள் ராசியிலேயே இந்தப் புத்தாண்டு பிறப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். அவ்வப்போது உடல்நிலை லேசாக பாதிக்கும். குருபகவான் வருட முற்பகுதி வரை சாதகமாக இருப்பதால் தொடங்கிய பணிகள் உடனே முடியும். குடும்பத்தில் இனம் புரியாத கவலை, வாக்குவாதங்கள் என இருந்ததே! இனி வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வருமானத்தை உயர்த்த புதுவழிகளில் முயற்சி செய்வீர்கள். கணவன்-மனைவிக்குள் சின்ன சின்ன பிரச்னைகள் வரும். என்றாலும் ஒற்றுமைக்கு குறைவிருக்காது. இருவரும் தங்கள் வழி சொந்த பந்தங்களைப் பற்றி பெருமையாகப் பேசிக் கொண்டிருக்காதீர்கள். ராசிக்குள் கேது நிற்பதால் ஒற்றைத் தலைவலி, காய்ச்சல், தூக்கமின்மை, எதிலும் ஒருவித சலிப்பு, முன்கோபம் வந்து நீங்கும். வருமானம் அதிகரித்தாலும் சேமிக்க முடியாமல் கையிருப்பு கரையும். திடீர் பயணங்களுக்கு குறைவிருக்காது. நண்பர்களுடன் வீண்பேச்சை குறைக்கப் பாருங்கள். பிள்ளைகளிடம் அதிக நேரம் பேசி அவர்களின் அடி மனதிலிருக்கும் தாழ்வு மனப்பான்மையை நீக்க முயற்சி செய்யுங்கள். அவர்களின் உயர்கல்வியில் கூடுதல் அக்கறை செலுத்துவீர்கள். மகனுக்கு நல்ல வரன் அமையும். நினைத்தபடி வேலை கிடைக்கும். மகளுக்கு அயல்நாட்டில் படிக்கும் வாய்ப்பு கிட்டும்.
வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கையில் காசுபணம் புரளும். சொத்து சேரும். தடைபட்ட காரியங்களை முழு வேகத்துடன் முடித்துக் காட்டுவீர்கள். அர்த்தாஷ்டம சனி நடைபெறுவதால் தாயாரின் உடல்நிலை பாதிக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். 7ல் ராகு நிற்பதால் மனைவியுடன் விவாதங்கள், சந்தேகம், பிரிவு என்று வரும். முன்கோபத்தை குறைக்கப் பாருங்கள்.
குருபகவான் ஐந்தாம் பார்வையாக உங்கள் ராசியை பார்ப்பதால் வாடிக்கிடந்த உங்கள் முகம் பிரகாசிக்கும். சேமிக்கத் தொடங்குவீர்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. சிலருக்கு வேலை கிடைக்கும். தந்தை வழி சொத்தை அடைவதில் இருந்த தடைகள் விலகும். 22.5.2010 முதல் 27.9.2010 வரை உங்கள் யோகாதிபதியான சனிபகவானின் நட்சத்திரத்தில் குரு செல்வதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கோயில் திருவிழாவை முன்னின்று நடத்துவீர்கள். பணவரவு உண்டு. ஆபரணம் சேரும். ஆனால் மனைவிக்கு உடல்நலக்குறைவும் மருத்துவச் செலவும் வந்து போகும்.
வியாபாரிகளே! அரசு கெடுபிடிகள் தளரும். பங்குதாரர்களின் துரோகங்களை மறந்து பழைய நிலைக்கு திரும்புவீர்கள். பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களை மாற்றுவீர்கள். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த பிட் நோட்டீஸ், வானொலி விளம்பரம் என செலவிடுவீர்கள். மார்ச், ஏப்ரல் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதிய தொழிலில் கால்பதிக்கும் முன்பு அனுபவஸ்தர்களிடம் ஆலோசனை கேளுங்கள். உத்யோகஸ்தர்களே! இழுபறியாக இருந்த பதவி உயர்வு இப்போது கிடைக்கும். மேலதிகாரி உங்களிடம் சிலநேரங்களில் கோபப்பட்டாலும் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். கேட்ட இடத்திற்கு இடமாற்றம் உண்டு. செப்டம்பர் மாதத்தில் வேறு சில வாய்ப்புகளும் வரும். என்றாலும் 4.5.2010 முதல் 6.11.2010 வரை குரு 10ம் வீட்டிற்கு செல்வதால் மறுக்கப்பட்ட உரிமைகளை பெற சிலர் நீதிமன்றம் செல்ல வேண்டி வரும்.
கன்னிப் பெண்களே! முடிவெடுக்கமுடியாமல் திணறினீர்களே! இனி
சுயமாக சிந்தித்து முடிவெடுப்பீர்கள். தள்ளிப்போன கல்யாணம் கூடி வரும். பெற்றோரின்
அரவணைப்பு அதிகரிக்கும். மாணவர்களே! நண்பர்களுடன் இருந்து வந்த சண்டை சச்சரவுகள்
மறையும். படிப்பில் மட்டுமின்றி விளையாட்டிலும் சாதிப்பீர்கள். அரசியல் வாதிகளே!
தலைமையுடன் நெருக்கமாக இருந்தாலும் அவரின் சொந்த விஷயங்களில் தலையிடாமல் இருப்பது
நல்லது. சகாக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினரே! வீண்வதந்திகளால்
ஒதுங்கியிருந்த நீங்கள், இனி உற்சாகமாகி தடைபட்ட வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள்.
விவசாயிகளே! பயிரை பாதுகாக்க பலவகை மருந்துகளை போட்டும் பயனில்லாமல் போனதே! இனி
அந்தநிலை மாறி மகசூல் பெருகும். மாற்றுப் பயிரால் லாபமும் வரும்.
இந்தப் புத்தாண்டு உங்களுக்குள் ஒளிந்து கிடக்கும் உள்ளுணர்வின் துணையால் எதையும்
சாதிக்க வைக்கும்.
பரிகாரம்:
தடைகளைத் தகர்க்கும் பழநியில் அருளும் முருகப்பெருமானை உளமாற
வணங்குங்கள். சாலைப் பணியாளர்களுக்கு உதவுங்கள்.
|





