எதுகை மோனை மற்றும் எடுத்துக் காட்டுகளுடன் உங்களுக்கு பேசத்தெரியாது. அதனால் மனதில் பட்டதை அப்படியே கொட்டுவீர்கள். பணம், காசை விட சரித்திரத்தில் இடம் பிடிக்கும்படி ஏதாவது செய்ய வேண்டுமென துடிப்பீர்கள். அப்படிப்பட்டவர்களான உங்களுக்கு 15.12.2009 முதல் 21.11.2010 வரை உள்ள காலகட்டங்களில் குருபகவான் என்ன செய்யப் போகிறார்?
இதுவரை உங்களுக்கு எதிரி வீடான ஆறாம் வீட்டில் அமர்ந்திருந்து அடுக்கடுக்காக பல இன்னல்களை தந்த குருபகவான், இப்போது ஏழாம் வீட்டில் அடி எடுத்து வைப்பதால் இனி எதிலும் வெற்றி பெறுவீர்கள். இதுவரை குடும்பத்தில் உள்ளவர்கள்கூட உங்களை ஒரு பொருட்டாக நினைக்காமல் அலைகழித்தார்களே! இப்போது உங்களின் யோகாதிபதியான குருபகவான் உங்கள் ராசியை நேருக்குநேர் பார்ப்பதால் இனி குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். கணவன்-மனைவிக்குள் இருந்த சலசலப்புகள் நீங்கும். அடுத்தடுத்து வீட்டில் திருமணம், சீமந்தம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். மழலை பாக்யத்திற்காக நீங்கள் பார்க்காத மருத்துவரே இல்லை, இனி அழகான வாரிசு கிடைக்கும். அடகிலிருந்த வீட்டு பத்திரத்தை மீட்பீர்கள். புதுவீடு கட்டுவீர்கள். சொத்துப்பிரச்னை நல்ல விதத்தில் முடியும்.
குருபகவான் லாப வீட்டை பார்ப்பதால் ஷேர், கமிஷன் வகைகளால் பணம் வரும். மூத்த சகோதரருக்கு திருமணம் சிறப்பாக முடியும். இளைய சகோதரருடன் இருந்த மனவருத்தம் நீங்கும். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களால் ஆதாயம் உண்டு. உங்கள் ராசிக்கு 3ம் வீட்டை குரு பார்ப்பதால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கோயில் திருவிழாவை முன்னின்று நடத்துவீர்கள்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சார பலன்கள்:
15.12.2009 முதல் 18.1.2010 முடிய உங்களின் சுக பாக்யாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் தன்னம்பிக்கை பிறக்கும். நாடாளுபவர்களின் அறிமுகம் கிடைக்கும். இழுபறியாக இருந்த சொத்துப்பிரச்னை சுமுகமாக முடியும். படுத்த படுக்கையாக இருந்த பெற்றோர் நோயிலிருந்து விடுபடுவார்கள். அரைகுறையாக நின்ற வீட்டை கட்டி முடிப்பீர்கள்.
19.1.2010 முதல் 17.3.2010 முடிய ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் திருமணம் உள்ளிட்ட சுபச்செலவுகள் அதிகரிக்கும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். சமூக சேவைகளில் ஈடுபடுவீர்கள். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். குலதெய்வக்கோயிலுக்குச் சென்று பிரார்த்தனைகளை முடிப்பீர்கள்.
18.3.2010 முதல் 3.5.2010 வரை மற்றும் 7.11.2010 முதல் 21.11.2010 முடிய உங்களின் பூர்வ புண்யாதிபதியான குருபகவான் தனது பூரட்டாதி நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளை பலவகையிலும் உற்சாகப்படுத்துவீர்கள்.
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டு. பணப்புழக்கம் அதிகரிக்கும். மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் முடியும். வேலை கிடைக்கும். அரசியல் தலைவர்கள் அறிமுகமாவார்கள். சின்ன சொத்தை விற்று பெரிய சொத்து வாங்குவீர்கள்.
4.5.2010 முதல் 21.5.2010 வரை மற்றும் 28.9.2010 முதல் 6.11.2010 முடிய குரு பகவான் தனது பூரட்டாதி நட்சத்திரத்தில் சென்றாலும் உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் சென்று மறைவதால் கொஞ்சம் அலைச்சலும், வீண் செலவுகளும் இருக்கும். வெளிநாட்டுப் பயணம் அமையும். கல்வி, உத்யோகம் பொருட்டு பிள்ளைகளை பிரிவீர்கள்.
22.5.2010 முதல் 27.9.2010 முடிய உங்களின் ரோக சப்தமாதிபதியான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும். மனைவிக்கு உடல் நிலை பாதிக்கும். யாராவது யாருக்காவது பணம் வாங்கித்தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். வாகனத்தை இயக்கும் போது கவனம் தேவை. இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அசைவ உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள்.
வியாபாரத்தில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். பழைய பாக்கிகளும் வசூலாகும். வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். உணவு, வாகனம், ஏற்றுமதி, இறக்குமதி வகைகளால் ஆதாயம் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் குழப்பங்கள் நீங்கும்.
உத்யோகத்தில் பிரச்னை தந்த மேலதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். புதிய அதிகாரி உங்களை ஆதரிப்பார். பிப்ரவரி, ஏப்ரல், மே மாதத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். அயல்நாட்டுத்தொடர்புடைய நிறுவனங்களில் இருந்து நல்ல வாய்ப்புகளும் தேடிவரும்.
கன்னிப்பெண்களே! உங்கள் மனம் போல நல்ல கணவர் அமைவார். சிலருக்கு வெளிநாட்டில் உயர்கல்வி தொடர வாய்ப்பு வரும். நல்ல வேலையும் கிடைக்கும்.
மாணவர்களே! அதிக மதிப்பெண் வாங்கும் மாணவர்களின் நட்பு கிடைக்கும். நினைவாற்றல் பெருகும். சந்தேகத்தை ஆசிரியரிடம் தைரியமாக கேளுங்கள். தேர்வில் அதிக மதிப்பெண் கிட்டும்.
கலைஞர்களே! உங்கள் படைப்புக்கு அரசு பரிசு கிடைக்கும். விவசாயிகளே! கரும்பு ஆதாயம் தரும். மூலிகைப்பயிர்களால் லாபமடைவீர்கள்.
அரசியல்வாதிகளே! தலைமைக்கு வேண்டப்பட்டவர்களால் அலைகழிக்கப்பட்டீர்களே! இனி தலைமையால் பாராட்டப்படுவீர்கள். பெரிய பதவிகள் கிடைக்கும்.
இந்த குரு பெயர்ச்சி பழைய பிரச்னைகள், சிக்கல்கள், பணத்தட்டுப்பாடு இவற்றிலிருந்து உங்களை விடுவிப்பதுடன் புதிய பாதையில் சென்று சாதிக்க வைக்கும்.
பரிகாரம்:
மேல்மருவத்தூருக்கு அருகிலுள்ள அச்சிறுப்பாக்கம் எனும்
தலத்தில் அருள்பாலிக்கும் இளங்கிளியம்மை சமேத ஆட்சீஸ்வரரையும்
உமையாட்சீஸ்வரரையும் வணங்குங்கள். முதியவர்களுக்கு கம்பளித்துணி வாங்கிக்கொடுங்கள்.
|





