சென்னை: ஆச்சிக்கிழவி திரைக்கூடம் சார்பில் திரவிய பாண்டியன் தயாரிக்கும் படம் ‘ஒச்சாயி‘. பிரேம்சங்கர் ஒளிப்பதிவு. ஜீவராஜா இசை. சினேகன் பாடல்கள். நிர்வாக தயாரிப்பு ஓமுரு. படம் பற்றி இயக்குனர் ஆசைத்தம்பி கூறியதாவது:ஒரு குடும்பத்தில் நடக்கிற ஒரு சம்பவம் ஒரு தலைமுறையை எப்படி பாதிக்கிறது என்பதுதான் கதை. அதாவது பெற்றோர்கள் செய்யும் தவறு பிள்ளைகளை எப்படி பாதிக்கிறது என்பதை சொல்லியுள்ளோம். புதுமுகம் தயா ஹீரோ. யதார்த்தமாக இருக்க வேண்டும் என்று ஹீரோயின் தேடிக்கொண்டிருந்தோம். அப்போது மதுரை கரிசல் பட்டியை சேர்ந்த ஆடுமேய்க்கும் பெண்ணான தாமரை கதைக்கு பொருத்தமாக இருந்தார். அவரையே நடிக்க வைத்துள்ளோம். ‘ஒச்சாயி‘ என்பது சிறு தெய்வம். இன்னும் மதுரை அருகே, குடும்பத்தில் பிறக்கும் முதல் பெண் குழந்தைக்கு ஒச்சாயி என்று பெயர் வைக்கும் பழக்கம் இருக்கிறது. கிராமத்து வாழ்க்கையையும் அந்த மனிதர்களின் பழக்க வழக்கங்களையும் படத்தில் புதுமையாக காண்பித்துள்ளோம். கஞ்சா கருப்பு, ஷகிலாவின் காமெடி பேசப்படும் விதமாக இருக்கும். படம் முடிந்துவிட்டது. ஏப்ரல் இறுதியில் ரிலீஸ் ஆகும்.இவ்வாறு ஆசைத்தம்பி கூறினார்.





