மும்பை, : மும்பையில் ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிடங்குகள் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட இருந்த மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இதற்காக ஊடுருவிய 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். மும்பையில் 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி, பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, மும்பைக்கு தொடர்ந்து தீவிரவாத அச்சுறுத்தல் இருந்து வருகிறது. இந்த நிலையில், மும்பையில் உள்ள இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் எண்ணெய் கிடங்குகள் மற்றும் பிரபல வணிக வளாகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டப்பட்டு இருப்பதாக தீவிரவாத தடுப்பு படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து உஷாரான பாதுகாப்பு படையினர், அப்துல் லத்தீப் ரஷீத் (29), ரியாஸ் அலி (23) என்ற 2 தீவிரவாதிகளை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
இது தொடர்பாக தீவிரவாத தடுப்பு படைத் தலைவர் ரகுவன்ஷி கூறியதாவது: கைது செய்யப்பட்டுள்ள இருவரும் மும்பையை சேர்ந்தவர்கள். பாகிஸ்தானில் தீவிரவாத பயிற்சி பெற்றவர்கள். பாந்த்ராவில் உள்ள ஓ.என்.ஜி.சி. அலுவலகம் மற்றும் அதற்கு சொந்தமான கிடங்குகள், போரிவலியில் உள்ள தாக்கர் மால், தெற்கு மும்பையில் உள்ள மங்கள்தாஸ் மார்க்கெட் ஆகியவற்றில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தவும், தீ வைக்கவும் இவர்கள் திட்டமிட்டிருந்தனர். இந்த இடங்களின் வரைபடத்தை அவர்களிடம் இருந்து கைப்பற்றி இருக்கிறோம். நவி மும்பையில், ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் உள்ள நவசேவா பகுதி உட்பட வேறு சில இடங்களையும் இவர்கள் நோட்டமிட்டுள்ளனர். தாக்குதல் நடத்தி விட்டு, பாகிஸ்தானுக்கு தப்பிச் செல்ல வசதியாக பாஸ்போர்ட்டுக்கும் இவர்கள் விண்ணப்பித்துள்ளனர். எனினும், தாக்குதலை நடத்தும் முன்பே சிக்கி விட்டனர். இவ்வாறு ரகுவன்ஷி கூறினார்.
இருவரும் மும்பை கில்லா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையில், குஜராத்தில் முகாம் அமைக்க முயன்ற தீவிரவாதி ஒருவன் நேற்று கைது செய்யப்பட்டான். இவன் பெயர் பஷீர். பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவன். இவன் ஹிஜ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத் தலைவனுடன் நேரடி தொடர்புடையவன் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.





