புதுடெல்லி, : பாகிஸ்தானின் தகவல் தொடர்பு நிறுவனங்களின் சிக்னல்கள் இந்தியாவுக்குள் ஊடுருவி பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவி வருவது இந்தியாவுக்கு பெரும் பிரச்னையாக இருக்கிறது. இது போதாதென்று பாகிஸ்தானின் தகவல் தொடர்பு நிறுவனங்களின் சிக்னல்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவி வந்து இந்தியாவின் தகவல் தொடர்புக்கு தொல்லை தருகின்றன.
குறிப்பாக பஞ்சாபுக்குள் ஊடுருவி இந்திய தகவல் தொடர்பு சாதனங்களில் இடையூறு செய்யப்படுகிறது. இதை இந்திய அதிகாரிகள், பாகிஸ்தான் தரப்பு அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இது குறித்து இருநாட்டு தகவல் தொடர்புத்துறை அதிகாரிகள் மட்டத்தில் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு இருப்பதாக டெல்லியில் அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்தது. இதற்கிடையில் இந்தியாவைச் சேர்ந்த டாட்டா மொபைல், ரிலையன்ஸ் கம்யூனிக்கேஷன்ஸ் நிறுவனங்களின் அலைவரிசைகள் தங்களது சேவையில் குறுக்கிடுவதாகவும், இதனால் தங்களது சேவை தரம் குறைந்ததாகி வருவதாகவும் பாகிஸ்தானைச் சேர்ந்த செல்போன் நிறுவனங்கள் புகார் கூறி உள்ளனர்.





