அபு சலீம் பற்றி கூறிய அமைச்சர் மீது வழக்கு
பதிவு செய்த நாள்
7/30/2010 12:04:04 AM
மும்பை : ஆர்தர் ரோடு சிறையில் பிரபல தாதா அபு சலீம் சொகுசு வசதிகளுடன் இருந்ததாக கூறிய மகாராஷ்டிரா உள்துறை இணை அமைச்சர் ரமேஷ் பாக்வே மீது வழக்கு தொடரப் போவதாக சலீமின் வழக்கறிஞர் கூறியுள்ளார். மும்பை நிழல் உலக தாதா அபு சலீம் மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது, தாவூத் இப்ராகிம் கூட்டாளி முகமது தோஸாவும் அவனுடைய கூட்டாளிகளும் தாக்கினர். இந்த சம்பவத்தை தொட ர்ந்து, சிறைக்கு நேரில் சென்ற உள்துறை இணையமைச்சர் ரமேஷ் பாக்வே பார்வையிட்டார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘சிறையில் அபு சலீம் நட்சத்திர ஓட்டல் வசதிகளுடன் இருக்கிறான். அவனுடைய அறை மிக சுத்தமாக இருந்தது. மேஜையில் விலை உயர்ந்த பழங்கள் வைக்கப்பட்டு இருந்தன. ஆடைகள் இஸ்திரி போடப்பட்டு நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. சிறை அதிகாரிகளின் உதவி இல்லாமல் இது சாத்தியமல்ல’’ என்று கூறினார். இது குறித்து அபு சலீமின் வழக்கறிஞர் ஷாபா குரேஷி நேற்று அளித்த பேட்டியில் அமைச்சர் மீது வழக்கு தொடரப்படும் என்றார்.