SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீரிழிவு நோயகற்றும் நீலகண்டப் பிள்ளையார்

2013-12-11@ 16:00:48

விளக்கொளி வெள்ளத்தில், அருள் ததும்பும் திருமுகத்தைப் பார்த்து, இருகரம் கூப்பி ‘‘திருநீலகண்டா’’ என்று மனமுருக வேண்டினால் வேண்டுவன எல்லாம்

வாரி வழங்கும் வல்லமை கொண்டவர் பேராவூரணி நீலகண்டப் பிள்ளையார். நீலகண்டனின் நிழல்பட்ட திருநீறும் உடல்பட்ட அறுகும் மனக்கிலேசம் மட்டுமின்றி உடல் நோய்களையும் நீக்கும் அருமருந்துகள். தஞ்சை மாவட்டத்தின் கடைமடைப் பகுதியில், முடப் புளிக்காடு-ஏந்தல் என்றழைக்கப்படும் பேராவூரணி நகரின் மையப்பகுதியில் குடியிருக்கிறார் நீலகண்டர். அம்மன் கோயில்களில் மட்டுமே நடக்கும் தீமிதித் திருவிழாவும் முருகன் ஆலயங்களில் மட்டுமே நடக்கும் காவடி எடுப்புத் திருவிழாவும் இந்த நீலகண்டப் பிள்ளையாருக்கு நடத்தப்படுவது வியப்பு.

காயாத ஊருணிகள் நிறைந்து வளம் பொங்கும் ஊரென (பெயரா ஊருணி) பொருள்படும் பேராவூரணியில் பிரமாண்டமாக விரிந்து கிடக்கும் ஊருணிக் கரையொன்றில் இருக்கிறது இப்பழமையான கோயில். முடப்புளிக்காடு கிராமத்தில் வசிக்கும் சங்கரர் வகையறாக்களைச் சேர்ந்த மக்கள் சிறிய அளவில் வைத்து வணங்கிய இக்கோயில், திருநீலகண்டனின் மகிமையால் இன்று பிரமாண்டமாக பெயர் பரவி பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னர் துளசாஜி மகாராஜா, தீவிர தெய்வ பக்தி கொண்டவர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல கோயில்களை புனரமைத்தவர்.

அவரின் அன்புக்குப் பாத்திரமான தலைமை மந்திரிக்கு தீராத நீரிழிவு நோய் இருந்தது. நாட்டின் பல வைத்தியர்களிடம் சிகிச்சைப் பெற்று பார்த்தார்; நோயின் கடுமை குறையவில்லை. தம் அமைச்சரின் துன்பத்தைக் கண்டு வருந்திய துளசாஜி, நாடெங்கும் இருக்கும் திறன் வாய்ந்த வைத்தியர்கள் பற்றி விசாரிக்க தம் பரிவாரத்துக்கு உத்தரவிட்டார். ஆவுடையார்கோயிலில் வைத்தியர் ஒருவர் இருப்பதாகவும் நீரிழிவு நோய்க்கு வைத்தியம் செய்வதில் வல்லவர் என்றும் செய்தி கிடைத்தது. இதையடுத்து, அமைச்சரை அழைத்துக் கொண்டு ஆவுடையார்கோயில் நோக்கி பயணித்தார் மன்னர். வழியில் பேராவூரணியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த வேளையில், வயற்பரப்பில், சிறுகுடில் ஒன்றில் குடியிருந்த நீலகண்ட பிள்ளையாருக்கு, சிவனடியார்கள் (சங்கரர்கள்) இருவர் பூஜைசெய்து கொண்டிருப்பதைக் கண்டார் மன்னர்.

உடனடியாக தம் பல்லக்கை நிறுத்தி, அமைச்சரை அழைத்துக் கொண்டு அந்த கோயிலுக்குச் சென்றார். பிள்ளையாரை மனமுருக வணங்கி, அங்கிருந்த சங்கரர்களிடம், தம் அமைச்சரின் நிலையைக் கூறி அர்ச்சனை செய்யும்படி கோரினார். சங்கரர்களும் பிள்ளையாரைப் பிரார்த்தித்து, அர்ச்சனை செய்து திரு நீறும், அறுகம்புல் பிரசாதமும் தந்தார்கள். திருநீறை அணிந்து, அறுகம்புல்லை சாப்பிட்ட சில நாட்களிலேயே, அமைச்சரின் நீரிழிவு நோய் முற்றிலுமாகக் குணமடைந்தது. தம் அமைச்சரின் நோயை நீக்கிய பிள்ளையாரின் மகிமையைக் கண்டு பரவசமடைந்த துளசாஜி, நீலகண்டரின் பெயரில் பல வேலி நிலங்களை எழுதிவைத்து, கோயிலையும் விரிவுபடுத்திக் கட்டினார்.

அன்று முதல் இன்றுவரை நீலகண்டரின் திருநீறையும் அறுகையும் அருமருந்தாக கருதுகிறார்கள் பக்தர்கள். தம் கருணையால் பக்தர்களின் நோய்களகற்றி, கேட்ட வரங்களை வாரி வழங்குகிறார் நீலகண்டர். இவரைத் தரிசிக்க மாநிலங்கள் கடந்தும் பக்தர்கள் வந்து குவிகிறார்கள். பிள்ளையார்பட்டியை அடுத்து, பிள்ளையாருக்கென்று பிரத்யேகமாக அமைந்துள்ள இக்கோயிலில் ஈசனின் குடும்பமே குடியிருப்பதாக ஐதீகம். கருவறையில் நீலகண்ட பிள்ளையார் வீற்றிருப்பினும் உற்சவப் பெருமை என்னவோ தம்பி முருகனுக்குதான். வள்ளி-தெய்வானை சமேதராக வேல்தாங்கி வரும் முருகனே உற்சவ ஊர்வலங்களில் பங்கேற்கிறார். சித்திரை உற்சவத்தின் ஒன்பதாம் நாள், பழநிமலை, திருத்தணிகை கோயில்களுக்கு நிகராக பல்லாயிரம் பக்தர்கள் பால்காவடி, பறவைக்காவடி, வேல்காவடி சுமந்துவந்து நேர்ச்சை செலுத்துகிறார்கள். அன்று மாலை பிரமாண்டமான தேர்த்திருவிழா.

தேங்காய், கரும்பு, நெற்கதிர் என தங்கள் வயலில் முதலில் அறுவடையாகும் பொருட்களால் பக்தர்கள் தேரை அலங்கரிக்க, பல லட்சம் பக்தர்களுக்கு இடையே முருகப்பெருமான் தேரில் அசைந்தாடி வரும் காட்சியைக் காண கண்கோடி வேண்டும். அன்றுமாலை, அம்மன் கோயில்களில் மட்டுமே நிகழும் தீமிதி திருவிழா. கோயிலின் முகப்பில் அனல் கக்கிக் கிடக்கும் தீயில் பெரியோர் முதல் சிறியோர் வரை பலநூறு பேர் பரவசம் பொங்க தீ மிதித்துச் செல்லும் காட்சியில் உக்கிரம் ததும்பும். கிழக்கு நோக்கிய இந்த ஆலயத்தில் இரண்டு பிரமாண்டமான முன்மண்டபங்கள் உண்டு. பின்புறம் தல விருட்சமாக அரசும் வேம்பும் இரண்டறக் கலந்து நிற்கின்றன. கோயிலைச் சுற்றியுள்ள பிள்ளையாரின் சுதை வடிவங்கள் உள்ளத்தை கொள்ளை கொள்கின்றன. கோயிலையொட்டி பிரமாண்டமான திருக்குளம்.


இத்திருக்குள நீர் கங்கைக்கு இணையான தீர்த்தமாக கருதப்படுகிறது. இக்குளத்தில் நீராடி, திருநீலகண்டரை வழிபடுகிறார்கள். முருகனுக்கு உற்சவம்,   அம்மனுக்கு தீமிதித்தல், கங்கை தீர்த்த நீராடல் என இத்திரு நீலகண்டனை வணங்கினால் ஈசன் குடும்பத்தையே தரிசித்த பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். இக்கோயிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் நடக்கும் வழிபாடுகள் சிறப்பு வாய்ந்தவை. இந்நாட்களில் நீண்ட வரிசையில் நின்று நீலகண்டனை வணங்குவர். அதிகாலை வழிபாடு நீலகண்டருக்கு மிகவும் உகந்தது. ஆண்டுதோறும் நடக்கும் 12 நாள் சித்திரை முழுநிலவுக் காலத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. பல்வேறு சமூகத்தினரும் இத்திருவிழாவில் பங்கேற்கிறார்கள். 9ம் நாளன்று காவடியுடன், பலர் நேர்ச்சையிட்டு பால் குடம் எடுப்பார்கள்.


குழந்தைகளுக்கு கரும்புத் தொட்டில் கட்டுதல், பெயர் சூட்டுதல், முதல் உணவு ஊட்டும் நிகழ்ச்சிகளும் நீலகண்டர் முன்னிலையில் நடக்கிறது. இதுதவிர, காதணி விழா, நிச்சயதார்த்தம், திருமண விழாக்களும் நடத்தப் படுகின்றன. குழந்தைகளை நீலகண்டருக்கு நேர்ந்துவிடும் வழக்கமும் இப்பகுதியில் இருக்கிறது.

பேராவூரணி வட்டாரத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குழந்தைக்காவது நீலகண்டன் என்று பெயர் வைப்பதும் வழக்கம். நீலகண்டனின் நிழலில் அமர்ந்து, எழில்பொங்கும் அவன் திருமுகத்தைத் தரிசித்து, அவன் மேனி தவழ்ந்துவரும் காற்றை சுவாசித்து, அந்த ஆதி முதல்வனை உள்ளம் உருகி பிரார்த்தித்தால் மாறா வினையெல்லாம் மாறும். தீரா நோயெல்லாம் தீரும். ஆலயத் தொடர்புக்கு: 04373-233666.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

 • libya_sandai11

  தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

 • thuppaki-12jk

  13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

 • hurricane_12

  அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்