SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோடை விடுமுறை பிச்சாவரத்தில் குவியும் சுற்றுலா பயணிகள் கடும் வெயிலால் அவதி

2017-05-08@ 12:51:00

சிதம்பரம் : கோடை விடுமுறையால் பிச்சாவரத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் களைகட்டியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில்இருந்து சுமார் 17 கி.மீ தொலைவில் கடலோரத்தில் அமைந்துள்ளது அழகிய பிச்சாவரம் சுற்றுலா மையம். இங்கு இயற்கை எழில் கொஞ்சும் சதுப்பு நிலக்காடுகள் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன. இந்தியாவில் மேற்குவங்கம், ஆந்திரா, ஒரிசா மாநிலங்களிலும், தமிழகத்தில் பிச்சாவரம், முத்துபேட்டை ஆகிய பகுதிகளில் மட்டுமே அரிய வகை சதுப்பு நிலக்காடுகள் உள்ளது.

பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகளில் உப்பங்கழிகளும், அடர்த்தியான மாங்குரோவ் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சுரபுன்னை செடிகளும் அதிகளவில் வளர்ந்துள்ளன. சுரபுன்னை செடிகள் மருத்துவ குணம் வாய்ந்தவை என கூறப்படுகிறது. கடலோரத்தில் உப்பனாற்றில் உள்ள இக்காடுகளில் 4400 கால்வாய்கள் உள்ளன. இக்காடுகளை வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர்.

சூழல் சுற்றுலா திட்டம்: பிச்சாவரத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் படகுகள் இயக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு வனத்துறை சார்பில் பிச்சாவரத்தை ஒட்டி சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் சூழல் சுற்றுலா திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வந்தன. கடந்த ஆண்டு இறுதியில் பிச்சாவரத்தில் சூழல் சுற்றுலா திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த சூழல் சுற்றுலா திட்டத்துக்காக உள்ளூர் மக்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காகவே பிச்சாவரம் அருகே உள்ள தளபதி நகர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பிச்சாவரம் வனப்பகுதியில் நடைபயிற்சி செய்வதற்காக 1000 மீட்டர் தூரத்துக்கு மரத்தில் ஆன நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது.  வனத்துறையின் கீழ் பிச்சாவரத்தில் 6 மோட்டார் படகுகளும், 6 பரிசல்களும் உள்ளன.

தளபதி நகர் மீனவர்களை கொண்டு தற்போது 3 மோட்டார் படகுகள் இயக்கப்படுகின்றன. இதில் வரும் வருவாய் அந்த கிராமத்துக்கு சென்றடையும் வகையில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் வனத்துறை சார்பில் ரூ.9 லட்சம் செலவில் சூழல் சுற்றுலாவுக்காக கருத்தியல் காட்சி கூடம் கட்டப்பட்டுள்ளது. தற்போது அதில் மாடி அரங்கும் கட்டப்படுகிறது. அதில் பிச்சாவரத்தில் உள்ள மாங்குரோவ் செடி வகைகள், வரும் பறவைகள் குறித்தும் விவரங்களை சுற்றுலா பயணிகள் தெரிந்து கொள்வதற்காக காட்சி படங்கள் வைக்கப்பட்டுள்ளது.

4 கிலோ மீட்டருக்கு ரூ.1500: வனத்துறை மூலம் இயக்கப்படும் மோட்டார் படகுகளில் ஒரே நேரத்தில் 10 பேர் செல்லலாம். 10 பேருக்கு ஒரு மணி நேரத்துக்கு 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ. 1500 பணம் பெறப்படுகிறது. 10 பேருக்கு ஒன்றரை மணி நேரத்துக்கு 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ. 2 ஆயிரம் பெறப்படுகிறது. இதில் படகில் சென்று பின்னர் நடைமேடையில் வனக்குகையில் நடந்து சென்று இயற்கை எழிலை ரசிக்கலாம்.

சூழல் சுற்றுலா திட்டம் இன்னும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. அதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாக வன அலுவலர்கள் தெரிவித்தனர். ஆனால் அதற்குள் வனக்குகையில் அமைக்கப்பட்டுள்ள நடைமேடையில் சில இடங்களில் சேதம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தனியார் படகுகளில் ஆபத்து பயணம்: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் இயக்கப்படும் படகுகள் கட்டணத்தைவிட வனத்துறை இயக்கும் படகு கட்டணம் குறைவாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் வனத்துறை படகுகளில் செல்ல ஆர்வம் காட்டுகின்றனர்.

வனத்துறை சார்பில் இயக்கப்படும் படகுகள் விடுமுறை தினங்களில் மட்டுமே இயக்கப்படுகிறது. சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் உரிமம் பெற்று 48 படகு ஓட்டுநர்கள் படகுகளை இயக்கி வருகின்றனர். ஏற்கனவே தனியார் படகுகளில் சிலர் சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்வதால் படகு ஓட்டுநர்களின் வருவாய் குறைந்துள்ளது.

இந்நிலையில் வனத்துறை மூலம் படகுகள் இயக்கப்படுவதால் இவர்களுடைய வருவாய் மேலும் குறைந்துள்ளதாக படகு ஓட்டுநர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சுற்றுலா படகு தொழிலாளர்கள் சங்க செயலாளர் ராஜா கூறுகையில், கோடை விடுமுறைக்காக அதிகளவில் சுற்றுலா பயணிகள் பிச்சாவரம் வருகின்றனர். அனுமதிக்கப்பட்ட சுற்றுலா படகுகளை தவிர தற்போது நிறைய தனியார் படகுகள் அனுமதி இல்லாமலும், பாதுகாப்பு கவசங்கள் இவ்லாமலும் பயணிகளை ஆபத்தான முறையில் அழைத்து செல்வதை தடுக்க வேண்டும் என்றார்.

பிச்சாவரம் சுற்றுலா மைய படகு குழாமில் வெயிலில் வரும் பயணிகள் இளைப்பாற தென்னை ஓலையால் ஆன பந்தல் அமைக்க வேண்டும் என்றும் சுற்றுலா மைய வளாகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. தற்போது சுற்றுலா மைய வளாகத்தில் இளநீர் விற்கப்படுகிறது. மக்கள் தாகத்தை தணிக்க இளநீர் பருக சென்றால் ஒரு இளநீரின் விலை ரூ.25க்கு விற்கப்படுகிறது. சுற்றுலா வளர்ச்சி கழகம் மேல் நடவடிக்கைகளை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறைபாடுகள் நிறைந்த சுற்றுலா மையம்  
பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு சவாரி செய்யும் பயணிகளுக்கு லைப் ஜாக்கெட் தரப்படுகிறது. அந்த லைப் ஜாக்கெட்டுகள் மிகவும் அழுக்காக இருப்பதால் பயணிகள் முகம் சுளிக்கின்றனர். பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் உள்ள உயர்கோபுரத்தில் ஏறி சென்று வனக்காடுகளை தொலைநோக்கி கருவி மூலம் பார்த்திட ரூ.5 வசூல் செய்யப்படுகிறது.

தற்போது தொலைநோக்கி கருவி பழுதடைந்துள்ளதால் பயணிகள் உயர்கோபுரத்தில் ஏறி பார்ப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. பிச்சாவரம் சுற்றுலா மைய வளாகத்தில் பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த மார்ச் மாத இறுதியில் புறக்காவல் நிலையத்தை ஏஎஸ்பி நிஷா தொடங்கி வைத்தார். ஆனால் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டும் மூடியே கிடக்கிறது.

பிச்சாவரம் சுற்றுலா மைய படகு குழாமின் ஒரு பகுதியில் இளநீர் கூடுகள் அங்கேயே கொட்டப்பட்டுள்ளதால் அதனை மாடுகள் கிளறி சுகாதார சீர்கேடுகளை உண்டாக்குகிறது. அது மட்டுமில்லாமல் இளநீர் கூடுகளால் கொசுக்கள் பெருகி டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் அபாயம் உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • raajeshaathan20

    ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

  • 27-02-2020

    27-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • thodar vanmurai20

    கலவர பூமியாக மாறிய தலைநகர்: வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரிப்பு...தொடர்ந்து 4வது நாளாக பதற்றம் நீடிப்பு!

  • brezil20

    பிரேசில் கார்னிவல் 2020: ஆடம்பரமான ஆடைகளில் ஆடல் பாடலுடன் மக்கள் கொண்டாட்டம்!

  • vimaanam20

    பாலகோட் ஏர் ஸ்ட்ரைக் நினைவு நாள்: சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் 2.0 க்கு பயன்படுத்தப்படும் மிராஜ் -2000 போர் ஜெட் விமானங்கள் காட்சிக்கு வைப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்