SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

9 நாடுகள் 100க்கும் மேற்பட்ட காடுகள் 4 லட்சத்துக்கும் அதிகமான மரங்கள்

2018-04-30@ 09:27:45

* வனம் வளர்க்கும் வாலிபர்!

தனி மனிதராக ஒருவர் நூற்றுக்கும் மேற்பட்ட காடுகளை உருவாக்கி இருக்கிறார் என்றால் நம்பவே முடியாதுதான். நான்கு லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் சுபேந்து சர்மாவின் பெயரை சொல்லிதான் தினம் தினம் தலையசைத்து வாழ்த்துகின்றன. எவ்விதமான செயற்கை உரங்களையும் பயன்படுத்தாமல் மிகவும் குறுகிய காலத்தில் இவரது Afforestt என்கிற நிறுவனம் இந்த சாதனையை செய்திருக்கிறது.

“சுற்றுச்சூழலில் எல்லோரையும் போலவே எனக்கும் ஆர்வமுண்டு. காடுகளை வளர்ப்பதை சேவையாக மட்டுமின்றி என்னுடைய வாழ்வியல் தேவைக்கான வணிகமாகவும் செய்து வருகிறேன்” என்று நேர்மையாகப் பேசுகிறார் சுபேந்து சர்மா.

அடிப்படையில் இவர் ஓர் இன்ஜினியர். பட்டப்படிப்பை முடித்துவிட்டு மிகப்பெரிய நிறுவனத்தில் நினைத்துப் பார்க்க முடியாத சம்பளத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். கடும் உழைப்பாளி. கண்ணும் கருத்துமாய் வேலை பார்ப்பவர். எந்த வேலை கொடுத்தாலும் சிறப்பாகச் செய்பவர். தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருந்த சின்சியர் சிகாமணி. இப்படி, வீட்டுக்கும் பணியிடத்துக்கும் மாறி மாறி ஓடி ரன் எடுத்துக்கொண்டிருந்த சுபேந்து
சர்மாவின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட விஷயம் ஒன்று அவர் நிறுவனத்தில் நடந்தது. அவர் பணியாற்றிய நிறுவனத்தின் சார்பாக வனம் ஒன்றை உருவாக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது. அதற்காக, ஜப்பானின் புகழ்பெற்ற அகிரா மியவகி என்ற தாவரவியலாளர் அழைக்கப்பட்டிருந்தார். அகிராவின் பணிகளுக்கு உதவி செய்வதற்காக நிறுவனத்தின் சார்பாக சுபேந்து சர்மா பணியமர்த்தப்பட்டார்.

இதுதான் அவர் வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான விஷயம். அகிராவின் நட்பு சுபேந்து சர்மாவின் வாழ்க்கைப் பற்றிய பார்வையையே மாற்றி அமைத்தது. நவீன மனிதன் எப்படி தன் சுயநலத்துகாக இயற்கையைக் கபளீகரம் செய்து கொண்டிருக்கிறான் என்பதை அகிராவுடனான உரையாடல் வழியாகப் புரிந்துகொண்டார்.  அது மட்டும் இல்லாமல் மிகக் குறைந்த காலகட்டத்திலேயே சிறப்பான இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றி ஓர் ஆரோக்கியமான வனத்தை எப்படி உருவாக்குவது என்ற அகிராவின் டெக்னிக்கையும் கற்றுக்கொண்டார். இப்படியாக சுபேந்து சர்மாவின் பார்வை சுற்றுச்சூழல் பக்கம் திரும்பியது.

பிழைப்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு தொழில் உள்ளது. நிச்சயமாக நாமும் ஏதாவது செய்யத்தான் வேண்டும். அது ஏன் அனைவருக்கும் பயனுள்ள ஒன்றாக இருக்கக்கூடாது என்று சிந்தித்தார். அகிராவிடம் கற்றுக்கொண்ட காடு வளர்க்கும் டெக்னிக்குகளை இந்திய நில அமைப்புக்கு ஏற்ப மாற்றி செய்தால் என்ன என்று தோன்றியது. உடனே செயலில் இறங்கினார்.

அப்படி உருவானதுதான் Afforestt அமைப்பு. செயற்கை முறையில் காடு வளர்க்கும் முயற்சியை முதன் முதலில் தனது சொந்த நிலத்தில்தான் தொடங்கினார். உத்தரகாண்டில் உள்ள தன் வீட்டின் பின்புற நிலத்தை இதற்காகப் பயன்படுத்தினார். இரண்டே வருடங்களில் அது மிகப்பெரிய வனமாக மாறியிருந்தது. இதைப் பார்த்த சுபேந்துவின் வீட்டாரும் உறவினர்களும் அக்கம்பக்கத்தவர்களும் அசந்துப் போனார்கள்.

“அகிராவிடம் நான் கற்றுக்கொண்ட வித்தைகளைப் பயன்படுத்தி என் சொந்த நிலத்தில் காடு அமைக்க முற்பட்டபோது என் வீட்டார்கூட என்னை ஏளனம் செய்தார்கள். ‘வேலைக்குச் சென்று கை நிறைய சம்பாதிப்பதை விட்டுவிட்டு இது என்ன பைத்தியகாரத்தனமான காரியம்?’ என்று கடிந்துகொள்ளவும் செய்தார்கள். ஆனால், நான் என் முடிவில் உறுதியாக இருந்தேன். இனி இதுதான் என் தொழில் என்று தீர்மானமாகச் சொன்னபோது என் வீட்டார் நிஜமாகவே வருந்தினார்கள்.

ஆனால் - இரண்டே வருடங்களில் அது மிகப்பெரிய வனமாக அது மாறியபோது அனைவருமே வியந்தார்கள்” என்கிறார். இது போன்ற வனங்களை உருவாக்குவதற்கு குறைந்தபட்சம் ஆயிரம் சதுர அடி நிலம் தேவைப்படும். முதலில் வனம் உருவாக்க வேண்டிய நிலத்தின் மண் வளம் எப்படி உள்ளது என்பதைச் சோதிக்க வேண்டும். ஒவ்வொரு மண்ணும் ஒவ்வொரு வகையான இயல்புடையவை. சிலவற்றில் நைட்ரஜன் வளம் இயற்கையாக இருக்கும் சிலவற்றில் கார்பன் வளம் இருக்கும். நிலத்தின் இயல்புக்கு ஏற்ற தாவரங்கள்தான் வளர முடியும் என்பதால் நிலவளப் பரிசோதனைதான் அடிப்படை.
இந்தப் பரிசோதனை முடிந்தபிறகு ஒவ்வொரு நிலத்திலும் வளரச் சாத்தியமான தாவரங்கள் எவை என்று முடிவு செய்யப்படும். முடிந்தவரை அந்த மண்ணில் காலங்காலமாக இயற்கையாக வளர்ந்து வரும் தாவரங்களையே தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த நிலத்துக்கு அந்நியமான தாவரம் என்றாலும் அந்த சூழலில் பராமரிப்பு இன்றி இயற்கையாகவே வளரும் தன்மையுடையது என்றால் அதுவும் அனுமதிக்கப்படுகிறது.

தாவரங்களுக்கு இடையிலான பயோடைவர்சிட்டி எனப்படும் சூழல் பங்கீடு பற்றிய புரிந்துணர்வு இதற்கு மிகவும் அவசியம். ஏனெனில், இயற்கையில் உயிர்கள் ஒன்றுக்கொன்று ஒத்திசைந்து ஒன்றை ஒன்று ஆதரித்தும் கட்டுப்படுத்தியும் வளர்வதே இயல்பாய் இருக்கின்றன. வனங்களை உருவாக்கும்போது இப்படியான இயற்கையான சூழல் அமைவும் மிக முக்கியம். இப்படி, ஒவ்வொரு விஷயத்தையும் நன்கு பரிசோதித்த பிறகே வனம் உருவாக்கப்படுகிறது. எந்தவிதமான செயற்கையான உரங்கள், பூச்சிக்கொல்லிகள் ஆகியவையும் இந்த வனங்களில் பயன்படுத்தப்படுவதில்லை என்பதால் இது முழு ஆரோக்கியமான உயிர் சூழல் மண்டலமாக இருக்கும். மேலும், முழுக்க முழுக்க இயற்கையான தாவர வளர்ப்பு முறை போன்றே இருப்பதால் இந்தக் காடுகளுக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பராமரிப்பு என்பதே தேவை இல்லை.

இயற்கையான காடுகள் எப்படி தம்மளவில் தாமே தன்னிறைவுடன் தம்மைப் பராமரித்துக்கொள்கிறதோ அதுபோல இந்தக் காடுகளும் தம்மைத் தாமே பராமரித்துக்கொள்வதாய் இருக்கும். இதுதான் இந்த அகிரா முறையின் முக்கிய அம்சமே என்று சொல்லலாம். “சூழலைக் காப்பாற்ற காடு வளர்ப்பது என்றதும் இது ஏதோ வேலையற்ற வேலை என்றும் கையில் இருக்கும் காசை தேவையில்லாமல் இரைப்பது என்றும் சிலர் நினைக்கிறார்கள். உண்மையில் இதைத் திட்டமிடும்போதே இது வணிகரீதியாகவும் வெற்றி பெறும் ஒரு லாப சாத்தியமுள்ள புராஜெக்டாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் நான் தீர்மானமாய் இருந்தேன். ஏனெனில், என்னுடைய பொருளாதாரரீதியிலான சரிவு என்னை மட்டும் சோர்வில் ஆழ்த்தாது. நாளை இப்படியான வேலை செய்வதற்காக வரும் துடிப்புள்ள பல நூறு இளைஞர்களையும் சோர்விலும் அவநம்பிக்கையிலும் ஆழ்த்திவிடும் என்று நான் நன்கறிந்திருந்தேன்” என்று சொல்லும் சுபேந்து சர்மாவை ஆரம்பத்தில் ஊக்கப்படுத்தியவர்கள் அவருடைய நண்பர்கள்தானாம்.

“எல்லா புதிய முயற்சிகளைப் போலவே இதிலும் நிறைய தொடக்க கால சவால்கள் இருந்தன. இன்று எங்கள் நிறுவனம் பெங்களூரில் இருக்கிறது. என்னுடன் இணைந்து பணியாற்ற ஆறு பேர் இருக்கிறார்கள். தேவைப்பட்டால் வெளி ஆட்களையும் நாங்கள் எங்கள் பணியில் இணைத்துக்கொள்கிறோம். ஆனால், தொடக்கம் இத்தனை சுலபமாக இருக்கவில்லை. நான் செய்யும் வேலையின் முக்கியத்துவத்தை மற்றவர்களுக்குப் புரியவைக்கவே அதிகம் மெனக்கெட வேண்டி இருந்தது. புரிந்தாலும் கைக் காசு போட்டு நான் ஏன் நிலத்தையும் வீணாக்க வேண்டும் என்கிற குழப்பம் பலரிடமும் இருந்தது. இதனால், என்ன செய்வது எனப் புரியாமல் நான் மிகவும் தடுமாறிக்கொண்டிருந்தேன்.

அந்தச் சூழலில்தான் ஜெர்மனியைச் சேர்ந்த ஃபர்னிச்சர் நிறுவனம் ஒன்று என்னை அணுகியது. சுமார் பத்தாயிரம் மரங்களுடன் ஒரு வனத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆர்டரை அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். மிகுந்த உற்சாகத்துடன் அதில் ஈடுபட்டோம். அந்த புராஜெக்ட் வெற்றிகரமாக நிறைவடைந்த பிறகு ஒவ்வொரு புராெஜக்டாக எங்கள் கதவைத் தட்டத் தொடங்கின” என்கிறார்.

புராஜெக்ட் ஆரம்பித்த பிறகு தேவைப்படும் எல்லாவகையான தேவைகளையும் இவரது நிறுவனமே பார்த்துக்கொள்ளும். பணியாட்கள், விவசாய உபகரணங்கள், உள்கட்டமைப்புகள் ஏற்பாடு செய்வது முதல் மியவகி முறைப்படி வனங்கள் நிர்மாணித்து அது நன்கு வளர்வது வரை பராமரிப்பது உட்பட அனைத்து வேலைகளையும் சுபேந்துவின் நிறுவனமே ஏற்றுக்கொள்ளும். இதைத் தவிர புராெஜக்ட் மேனேஜ்மெண்ட், இடத்துக்கு நேரடியாகச் சென்று ஆலோசனைகள் சொல்வது, சாஃப்ட்வேர் சப்போர்ட் ஆகியவற்றையும் நிறுவனமே ஏற்றுக்கொள்ளும். இவரது நிறுவனத்தின் வெற்றிக்கு இன்னொரு முக்கியக் காரணம் இவர்கள் இதற்காக பெறும் தொகைதான். சதுர அடிக்கு ரூ.150/- மட்டுமே வசூலிக்கிறார்கள். செயற்கைக் காடுகளை உருவாக்கித் தருவதற்காக மற்ற நிறுவனங்கள் பெரும் தொகையோடு ஒப்பிடும்போது இது மிக மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

“நாங்கள் வெறுமனே வனங்களை உருவாக்கும் புராஜெக்டுகளை மட்டுமே மேற்கொள்வது இல்லை. எங்கள் நிறுவனத்தின் சார்பாக மியவகி முறையில் தாவரங்களை வளர்ப்பது எப்படி என்பதைப் பற்றிய வகுப்புகளையும் நடத்திவருகிறோம். எங்கள் இணையதளத்தில் மியவகி உற்பத்தி முறை பற்றிய விரிவான தகவல்கள் உள்ளன. இதை யார் வேண்டுமானாலும் பார்த்து தங்கள் சொந்த இடத்திலேகூட தாங்களாகவே முயற்சி செய்யலாம். அவசியம் எனில் எங்களிடம் ஆலோசனையும் கேட்கலாம். தாராளமாக நாங்கள் உதவக் காத்திருக்கிறோம். ஒரு பழத்தைப் புசிக்கும் எண்ணம் ஒருவருக்குத் தோன்றினால், அதைக் கடையில் சென்று வாங்குவதைவிடவும் அவரின் வீட்டின் பின்புறம் சென்று பறிப்பது சுலபமாக இருக்க வேண்டும். இப்படி ஒரு நிலை உருவாக வேண்டும் என்பதுவே என் ஆசை.

இந்தத் தொழிலின் மிகப் பிரதானமான சவால் என்னவென்று கேட்டால், இது சந்தைத் தேவையை நிறைவேற்றுவது இல்லை என்பதுதான். இப்போது மட்டும் அல்ல இம்மாதிரியான விஷயங்களுக்கு நேரடியான சந்தைப் பயன் என்பது எப்போதுமே இல்லை. மேலும், தன் வீட்டின் பின்புறம் ஒரு காடு இருக்க வேண்டும் என்று அனைவருமே விரும்புவது இல்லை. ஆனால், சுற்றுச்சூழல் ஆரோக்கியமாய் இருக்க வேண்டும் என்பது நமக்கு மட்டும் அல்ல. நம் எதிர்காலத் தலைமுறைக்கும் மிகவும் முக்கியம். வெறும் கொடுக்கல் வாங்கல் கணக்குகளைக் கடந்து இயற்கை முக்கியம் என்ற புரிதல் அனைவருக்குமே முக்கியம். அந்த வகையில் மிக உபயோகமான ஒரு வேலையைச் செய்துகொண்டிருக்கிறேன் என்ற நம்பிக்கை என எப்போதுமே உண்டு” என்கிறார் இந்த சுற்றுச்சூழல் இன்ஜினியர்.

அகிரா யார்?

அகிரா மியவகி தொன்னூறு வயதைக் கடந்து வாழ்ந்துகொண்டிருக்கும் ஜப்பானின் புகழ்பெற்ற தாவரவியலாளர். சுற்றுச்சூழல் தாவரவியல் துறையின் முன்னோடிகளில் ஒருவர். இயற்கைக் காடுகள் ஆய்வில் முக்கியமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர். ஜப்பானின் கைவிடப்பட்ட தரிசு நிலங்களை எல்லாம் மீண்டும் பச்சையம் துளிர்க்கும் பூமியாக மாற்றிய அற்புதக்காரர். உலகின் புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களில் பணியாற்றியவர்.
ஜப்பானின் இயற்கையான காடுகள், யாரும் பராமரிக்காமல் கைவிட்ட கோயில்கள், சமாதிகளில் எப்படித் தாவரங்கள் சிறப்பாக வளர்கின்றன என்பதைக் கவனித்து ஒரு சிறப்பான தாவர வளர்ப்பு முறையை உருவாக்கினார் இவர்.

அது மியவகி தாவர வளர்ப்பு முறை எனப்படுகிறது. ஜாப்பானிய நிலத்துக்கே உரிய பாரம்பரிய மரங்களோடு டிம்பர் தேவைகளுக்காக நடப்பட்ட ஐரோப்பிய மரங்கள் எப்படி ஒத்திசைவாக வளர்கின்றன என்பதை அவதானித்த அகிரா, மரங்களுக்கிடையிலான உயிர் தொடர்பை நன்கு புரிந்துகொண்டு தனது தாவர வளர்ப்பு முறையை உருவாக்கினார். இது பாரம்பரியமான ஜப்பானிய தாவர வளர்ப்பு முறையில் இருந்து சற்று வேறுபட்ட ஒன்றாகவும் அதே சமயம் அதை சிறப்பாக மேம்படுத்துவதாகவும் இருந்தது. உலக அளவில் சுற்றுச் சூழல் விஞ்ஞானத்தில் சிறப்பான பங்களிப்பை செய்பவர்களுக்கு வழங்கப்படும் விருதான ’நீல கிரகம் பரிசு’ (Blue planet prize) கடந்த 2006 ஆண்டு அகிரா மியவகிக்கு வழங்கப்பட்டுள்ளது.


- இளங்கோ


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்