SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிளாட் ஆக மாற்றப்பட்ட 8 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் : வேளாண் துறை ஆய்வில் அதிர்ச்சி தகவல்

2018-04-17@ 12:20:34

மதுரை: மதுரை மாவட்டத்தில் பெரியாறு இருபோக பாசனப் பகுதியைச் சேர்ந்த 43 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களில் 8 ஆயிரம் ஏக்கருக்கு மேல் அழிக்கப்பட்டு பிளாட் மற்றும் வர்த்தக கட்டிடங்களாக மாறி உள்ளன. இந்த அதிர்ச்சி தகவல் வேளாண்துறை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை பாசன ஆயக்கட்டு மதுரை மாவட்டத்தில் இருபோகம் விளையும் வயல்கள் கள்ளந்திரி மதகு வரை 43 ஆயிரம் ஏக்கர். பசுமையாக காட்சி அளித்த இந்த நிலங்கள் சுருங்கி வருகின்றன. இது குறித்து வேளாண் துறையினர் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு: மதுரையில் இருந்து அழகர்கோவில் சாலை, நத்தம் சாலை, மேலூர் சாலை, வாடிப்பட்டி சாலை, அலங்காநல்லூர் சாலை, சிவகங்கை சாலை போன்ற பகுதியில் நெல் விளையும் பூமி மற்றும் தோட்டங்கள் அழிக்கப்பட்டு பிளாட்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இம்மாதிரி சுமார் 8 ஆயிரம் ஏக்கருக்கு மேல், விற்பனையாகி வீடுகளாகவும், வர்த்தகக் கட்டிடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களாகக் காட்சி அளிக்கின்றன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இருபோக பாசன விவசாயிகள் கூறியதாவது: தண்ணீர் பிரச்சினையால் ஆண்டுக்கு இருபோகம் விளைந்த பூமியில் ஒருபோகம் விளைவதே கடினமாக உள்ளது. இதுதவிர தண்ணீர் பிரச்னை, உரம், உற்பத்திச் செலவின் ஏற்றம், பாடுபட்டு விளைவிக்கப்படும் பொருட்களுக்கு கட்டுபடியான விலை இல்லாதது போன்ற காரணங்களால் வேளாண் தொழில் விவசாயிகளைக் கடனாளியாக்குகிறது. உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது, `பல ஏக்கர் விளைநிலம் இருந்தும், கையில் பணமில்லை’ என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

இதன் விளைவு, விவசாயிகள் விளை நிலங்களை விற்றுவிட்டு, விலகும் அபாயம் தொடர்கிறது. ஒரு ஏக்கர் நெல் பயிரிட விதை நெல், உழவு, நடவு,  களை எடுப்புக்கூலி, உரம், பூச்சிமருந்து விலை, அறுவடை இயந்திரக் கட்டணம் என அனைத்தும் முடிந்து வீட்டுக்கு நெல் வந்து சேரும் வரை மொத்தம் ரூ.25 ஆயிரம் வரை செலவாகிறது. தண்ணீர் தட்டுப்பாடின்றி சாகுபடியாகி முழு மகசூல் கிடைத்தால் ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம்தான் மிஞ்சும். தண்ணீர் தட்டுப்பாடு வந்தால் மகசூல் பாதித்து நஷ்டம்தான் ஏற்படுகிறது.

விவசாய செலவுக்காக வட்டிக்கு கடனோ, மனைவியின் நகைகளை அடமானமோ வைக்கும் நிலை ஏற்படுகிறது. அந்த நகைகளை மீட்க முடியாமல் மூழ்கி இழக்கும், விவசாயிகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.  முக்கியமாக வேளாண் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ள நிலையில் அதற்கு ஏற்ப விளைந்த பொருட்களுக்கு கட்டுபடியாகும் விலை கிடைக்காமல் தலையில் கை வைக்கும் நிலை ஏற்படுகிறது. இது போன்ற காரணங்களால் வேளாண்மைத் தொழில் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறது. இவ்வாறு கூறினர். வேளாண் துறை ஆய்வாளர்கள் கூறுகையில், “விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கச்செய்து அரசு கைதூக்கி விடுவது,  தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு போன்றவற்றின் மூலம் வேளாண்மைத் தொழிலைக் காக்க முடியும், தவறினால் விளை நிலங்களை அழிவில் இருந்து தடுக்க முடியாது” என்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-04-2018

  24-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • swati_hunger_strike

  போக்சோ சட்டத்தில் திருத்தம் எதிரொலி... உண்ணாவிரதத்தை கைவிட்டார் சுவாதி மாலிவால்!

 • volvo_boat_comp

  பிரேசில் நகரான இட்டாசாயிலிருந்து வோல்வோ கடல் பாய்மரப் படகுப் போட்டி தொடங்கியது!

 • wildanimals_docto11

  காட்டு மிருகங்களுக்கு முகத்தில் வலியுடன் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்

 • teachers_protest11

  டி.பி.ஐ வளாகத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்