SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குமரியில் அதிகரிக்கும் கடத்தல் : கொள்ளை போகும் இயற்கை வளங்கள்

2018-04-17@ 12:06:36

மார்த்தாண்டம்: குமரி மாவட்டத்தில் இருந்து கனிம வளங்களை கடத்தி நல்ல லாபம் பார்க்கும் கும்பல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கருங்கல், பாறைத்தூள், மணல், மண் என இந்த பட்டியல் நீளும். குறிப்பாக குமரி மாவட்டத்தில் இருந்து கருங்கல், மணல் மற்றும் பாறைப்பொடி அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது. இதனால் குமரியில் மலைகளாக காட்சியளித்த பல இடங்கள் இன்று மடுவாக காட்சியளிக்கின்றன. கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் மணல் மற்றும் கல்குவாரிகளுக்கு தடை உள்ளது. இதனால் குமரி உள்பட எல்லையோர மாவட்டங்கள் வழியாக மணல் கடத்தல் வெகு ஜோராக நடந்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தற்போது பலரும் எம்.சான்ட் எனப்படும் செயற்கை மணலுக்கு மாறிவிட்டனர்.

இந்த செயற்கை மணலும் குமரியில் இருந்து கேரள மாநிலத்திற்கு அதிகம் கடத்தப்படுகிறது. பொதுவாக ஆற்று மணலுக்கு கேரளாவில் நல்ல கிராக்கி உள்ளதாலும், விலை அதிகம் கிடைப்பதாலும் பலரும் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். தேவை மற்றும் தட்டுப்பாடு அதிகம் உள்ளதால் பலரும் திருட்டு மணலை எந்த விலை கொடுத்தும் வாங்கி வருகின்றனர். இதுபோல மேடு, பள்ளங்கள் அதிகம் கொண்ட குமரி மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தில், தாழ்வான பகுதிகளை நிரப்பி கட்டுமான பணிகள் மேற்கொள்ள அதிக அளவில் மண் தேவைப்படுகிறது. ஆனால் மேடான பகுதிகளில் இருந்து மண் வெட்டி கடத்திச்செல்ல தடை உள்ளது. ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மண் எடுத்துச்செல்ல உரிய அனுமதி பெற வேண்டும்.

இருப்பினும் காசு பார்க்கும் நோக்கோடு பலரும் திருட்டுத்தனமாக மண் கடத்தலில் ஈடுபடுகின்றனர். இதற்கு சில அதிகாரிகள் மற்றும் பல போலீசார் துணை நிற்கின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. மணல் மற்றும் மண் கடத்தலில் ஈடுபடும் கும்பல் சில போலீசாரையும், அதிகாரிகளையும் கையில் போட்டுக்கொண்டு, அவர்களுக்கு ஒரு தொகையை வழங்கி விடுகின்றனர். இதனால் கடத்தலை இவர்கள் கண்டுகொள்வதில்லை. அவ்வப்போது சிக்கும் சில கடத்தல் வாகனங்களிலும் அதை கடத்தியவர்கள் பிடிபடுவதில்லை. தப்பி ஓடி விடுகிறார்களாம். இதுபோன்று பறிமுதல் செய்யப்படும் வாகனங்களும் சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களில் ஒப்படைக்கப்படுவதில்லை. குறிப்பிட்ட தொகையை வாங்கிக்கொண்டு சில போலீசார் சப்தம் இல்லாமல் வாகனங்களை விடுவித்து விடுகின்றனர்.

சில நேர்மையான மேலதிகாரிகளின் கவனத்துக்கு வரும் கடத்தல் வாகனங்கள் மட்டுமே அவர்களின் உத்தரவுபடி தாலுகா அலுவலகங்களில் ஒப்படைக்கப்படுகின்றன. அங்கும் சில அதிகாரிகள் துணையுடன் இந்த சம்பவம் மூடி மறைக்கப்பட்டு எளிதில் தப்பி விடுகின்றனர். இதுபோல பணவெறி படைத்த கும்பல் மற்றும் அரசு துறைகளில் உள்ள கருப்பு ஆடுகளால் குமரியின் இயற்கை வளம் வெகுவாக கரைந்து வருகிறது. இயற்கையை நாம் அழித்தால் அது நம்மை பழிதீர்த்து விடும் என்பதை சென்னை மழை சேதம் உட்பட பல சான்றுகளை நாம் கண்டுள்ளோம். இருப்பினும் நாம் விழித்துக் கொள்ளவில்லை என்பது வருந்தத்தக்கது.

இந்த நிலையில் எழில் மிகு இந்த பூமியை அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்வது நம் கடமையாகிறது. எனவே இயற்கையை பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை. இதற்கு அரசு அதிகாரிகள், போலீசார் தங்களின் பங்களிப்பை களங்கமின்றி செய்திட வேண்டும். இயற்கையை அழிக்கும் ஈனர்கள், அவர்களுக்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் மீது, உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதன்மூலம் குமரியின் இயற்கை வளம் பாதுகாக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • harry_megan_mandela

  லண்டனில் நெல்சன் மண்டேலா கண்காட்சிக்கு வருகை புரிந்த இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே!: புகைப்படங்கள்

 • ethiopia_eritria_flight

  எத்தியோப்பியா-எரிட்ரியா இடையே விமான சேவை: 20 ஆண்டுக்கு பின் கண்ணீர் மல்க உறவினர்களை வரவேற்ற மக்கள்!

 • world_clean_placechina

  பூமியின் சுத்தமான பகுதி சிங்காய்-திபெத் பீடபூமி: சுற்றுச்சூழல் முன்னேற்றம் குறித்து சீனா வெள்ளை அறிக்கை!

 • 19-07-2018

  19-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • thaliland_boyshome

  தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்