SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாங்காடு சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.40 கோடி மோசடி : முதியவர் போலீசில் சரண்

2018-04-17@ 00:56:48

 சென்னை,: மாங்காடு சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏலச்சீட்டு நடத்தி 40 கோடி  மோசடி செய்ததாக முதியவர் மற்றும் அவரது மகள், மகன்கள் மீது  பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அடுத்த மாங்காடு பெருமாள்  கோயில் தெருவை சேர்ந்தவர் பழனி (70). இவருக்கு சத்தியமூர்த்தி, மணிகண்டன்,  ருத்ரமூர்த்தி என்ற மகன்களும், பானு என்ற மகளும் உள்ளனர். பழனி தனது மகள்,  மகன்களுடன் சேர்ந்து, வீட்டின் ஒரு பகுதியில் வரலட்சுமி பைனான்ஸ் என்ற  பெயரில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஏலச்சீட்டு நடத்தி வருகிற.

இவர்களிடம்  மாங்காடு மற்றும் சுற்றுப் வட்டாரப் பகுதிகளை சேர்ந்த 1300க்கும்  மேற்பட்டோர் ₹10 லட்சம், ₹5 லட்சம், ₹2 லட்சம் மற்றும் ₹1 லட்சம் வீதம்  சீட்டு பணம் கட்டி வந்துள்ளனர். ஆரம்பத்தில் சீட்டு கட்டியவர்களுக்கு  ஒழுங்காக பணத்தை கொடுத்து வந்த பழனி, சமீப காலமாக சீட்டு கட்டியவர்களுக்கு  முதிர்வு தேதி வந்த பின்னும் பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாக  கூறப்படுகிறது.சீட்டு கட்டியவர்கள் நெருக்கடி கொடுத்த பிறகும்  பணத்தை கொடுக்க மறுத்துள்ளதாக தெரிகிறது. இதனால், பாதிக்கப்பட்டோர் நேற்று  மாங்காடு பேரூராட்சி முன்னாள் தலைவர் சீனிவாசனிடம் இதுபற்றி தெரிவித்தனர்.  இதையடுத்து, அவரது தலைமையில் 250க்கும் மேற்பட்டோர் கிண்டியில் உள்ள  பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் நேற்று புகார் கொடுத்தனர்.
புகார் பெற்றுக் கொண்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி  தன்ராஜ் கணேசன், இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்  என்று தெரிவித்தார். இதனிடையே போலீசில் புகார் கொடுக்கப்பட்டது பற்றி  அறிந்ததும் குற்றப்பிரிவு போலீசில் பழனி ஆஜரானார். அவரிடம் போலீசார்  விசாரித்து வருகின்றனர்.

செல்போன் பறிப்பு   3 வாலிபர்கள் சிக்கினர்:

மாதவரம் சீத்தாபதி நகரை சேர்ந்தவர் சாதிக்பாஷா (45). நேற்று முன்தினம் காலை சாதிக்பாஷா, நண்பரை சந்திக்க தபால் பெட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் பைக்கில் வந்த 3 பேர், அவரது கையில் இருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் பறந்தனர். இதை பார்த்த அவ்வழியாக ரோந்து வந்த மாதவரம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், 3 வாலிபர்களையும் விரட்டிச்சென்று மடக்கி பிடித்தார். விசாரணையில், மாதவரம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த பாரதி (21), மணிகண்டன் (22), கார்த்திக் (18) என்பதும் தெரிந்தது. இதையடுத்து, 3 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மாஞ்சாநூல் முதியவரின் கழுத்தை அறுத்தது:

அம்பத்தூர், வெங்கடாபுரம் வடக்கு பூங்கா தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (62). இவர், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சொந்தமாக லேத்துப்பட்டறை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்ததும் பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார். அம்பத்தூர் அடுத்த கருக்கு மேம்பாலத்தில் சென்றபோது, ஒரு காற்றாடிநூல் அறுந்து பறந்து வந்து சண்முகசுந்தரம் கழுத்தை இறுக்கியது. உடனே, அவர் வலி தாங்க முடியாமல் பைக்கை ஓரமாக நிறுத்தினார். அதற்குள் அவர் கழுத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. அக்கம் பக்கத்தினர், சண்முகசுந்தரத்தை மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சாலை விபத்தில் சிக்கி 2 காவலர்கள் படுகாயம்:

தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (29). இவர் சென்னை பரங்கிமலையில் உள்ள ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று பணியை முடித்துவிட்டு பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது, சென்னை  பல்கலைக்கழக நுழைவு வாயில் அருகே நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
அதே போல், சென்னை மாநகர காவல் துறையின் அதிரடிப்படையில் பணியாற்றி வரும் சேலம் பகுதியை சேர்ந்த கண்ணன் (29) என்பவர், பணி முடிந்து பைக்கில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தபோது, திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் மற்றொரு பைக் மோதியதில், அவர் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த முகமது யூனீஸ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குட்கா விற்ற 2 பேர் கைது:

மயிலாப்பூர் நைனார் தெருவில் பான் மசாலா குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்து வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த தௌபிக் அலி (37), மன்சூர் அலி (42) ஆகிய இருவரையும் மயிலாப்பூர் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 800 கிலோ மதிப்புடைய பான் மசாலா மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
 
மது விற்ற இருவர் கைது:

மயிலாப்பூர் நொச்சிநகர் பகுதியில் ரகசியமாக பதுக்கி வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த சத்யா (30), விக்ரம் (34) ஆகிய 2 பேரையும் மயிலாப்பூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 52 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

கட்டிடத் தொழிலாளி பலி;

ஒடிசாவை சேர்ந்தவர் ராமு (50). கட்டிட தொழிலாளி. ஒடிசாவை சேர்ந்தவர்கள் மேடவாக்கத்தில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி, வேலை செய்து வருகின்றனர்.இந்நிலையில் ராமு வேலை முடிந்ததும் நேற்று முந்தினம் இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். சகதொழிலாளிகள் அவரை வேலைக்கு அழைத்துச் செல்வதற்காக நேற்று காலையில் எழுப்பியுள்ளனர். ஆனால் அவர் எழுந்திரிக்கவில்லை போதை தலைக்கேறிய நிலையில் அவர் இறந்திருப்பது தெரியவந்துள்ளது.

42 சவரன் நகை பறிமுதல்;

வடபழனி இன்ஸ்பெக்டர் சந்துரு நேற்று வடபழனி ஆற்காடு சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அந்த வழியாக வந்த 2 நபர்களை பிடித்து விசாரணை நடத்தினார். அதில், நெற்குன்றம் பகுதியை சேர்ந்த அப்பு (எ) இளவரசன் (32), வடபழனி பகுதியை சேர்ந்த சந்தோஷ் (எ) ராஜா (19) என்பதும், இருவரும் சேர்ந்து சென்னை விருகம்பாக்கம் பகுதியில் 5 வீடுகளிலும், வடபழனி பகுதியில் 8 வீடுகளிலும், கோடம்பாக்கம் பகுதியில் ஒரு வீட்டிலும் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடியதும், வடபழனியை சேர்ந்த மணி என்பவரை மிரட்டி செயின் பறித்ததும் தெரிந்தது. 2 பேரும் மீது 19 வழக்குகள் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 42 சவரன் தங்க நகைகள், ஒரு செல்போன் ஆகியவைகளை பறிமுதல் செய்யப்பட்டது.

கஞ்சா விற்ற பாட்டி, பேத்தி கைது;

மேற்கு தாம்பரம், கைலாசபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வசந்தா (72) மற்றும் அவரது பேத்தி சாலி (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பெண் தூக்கிட்டு தற்கொலை ;

தாம்பரம் அடுத்த நூத்தஞ்சேரி, பஜனைகோவில் தெருவை சேர்ந்தவர்க மஞ்சுபிரியா (24), இவர், கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.  நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த மஞ்சுபிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

‘ஸ்ட்வ்’ தீப்பிடித்து பெண் பலி;

குரோம்பேட்டை, பாரதிபுரம், சம்மந்தம் தெருவை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவரது மனைவி மும்தாஜ் பானு (38), தம்பதிக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். சாகுல் சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரி இல்லாமல் உயிரிழந்தார். இதனையடுத்து, சகோதரர் உதவியுடன் மும்தாஜ் துணிகளை இஸ்திரி போடும் தொழில் நடத்தி குடும்பத்தை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் மும்தாஜ் வீட்டில் சமையல் செய்ய மண்ணென்ணெய் ‘பம்ப்-ஸ்டவ்’ பற்ற வைக்க முயன்றார். அப்போது, மண்ணென்ணெயில் தீப்பிடித்து, மும்தாஜின் உடலில் தீ பரவி கருகி பலியானார்.

ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி மீது தாக்குதல்:

சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால் (38) ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியான இவர் சிலம்பாட்ட கலையில் வல்லவர். நேற்று முன்தினம் மாலை நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் உள்ள விளையாட்டு திடலில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு சிலம்பு கலை குறித்த வேணுகோபால் பயிற்சி வழங்கி கொண்டிருந்தார். அப்போது மைதானத்திற்குள் வந்த 10 பேர் கொண்ட கும்பல் வேணுகோபால் மற்றும் அவருடன் இருந்த மணிகண்டன், செல்வகுமார், சிவசுப்பிரமணியன் ஆகிய 4 பேரையும் தாக்கினார்கள். இதில் 4 பேரும் படுகாயம் அடைந்தனர். புகாரின் பேரில், நுங்கம்பாக்கம் காமராஜர்புரம் பகுதியை சேர்ந்த டில்லிபாபு, சிவகுமார், மகேஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2018

    16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்