SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

2018-2019ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: காவிரி பிரச்னை குறித்து விவாதிக்க 16ம் தேதி சட்டசபை சிறப்பு கூட்டம்?

2018-03-14@ 01:00:36

சென்னை: தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது. அன்றைய தினம் காலை 10.30 மணியளவில் 2018-2019ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டை துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் வாசித்து முடிக்கப்பட்டதும், சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில், பட்ஜெட் மீதான விவாதம் நடத்த சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்று விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும். சட்டப்பேரவை கூட்டம் சுமார் ஒரு மாதம் காலம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பட்ஜெட் கூட்டம் முடிவடைந்த பின்னர், மே மாதத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தவும் அதிமுக அரசு திட்டமிட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க உள்ளதால் பட்ஜெட்டில் பல்ேவறு புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. காவிரி தண்ணீர் விவகாரம், சட்டம்-ஒழுங்கு பிரச்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்களை எழுப்ப எதிர்க்கட்சியான திமுக மற்றும் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதனால், இந்த பட்ஜெட் கூட்டம் அனல் பறக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சட்டசபை சிறப்பு கூட்டம்: காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 16ம் தேதி இறுதி தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி.தண்ணீர் கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டது. ஏற்கனவே நடுவர் மன்றம் 192 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது.

உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பால் தமிழ்நாட்டு கிடைக்கும் தண்ணீரின் அளவு 14.75 டிஎம்சி குறைந்தது. இந்த தண்ணீரை ஆண்டுதோறும் வழங்கும் வகையில் 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக பிரதமரை அனைத்துக் கட்சியினர் சந்தித்து வலியுறுத்த முடிவு  செய்யப்பட்டது. அதன்படி கடந்த வாரம் பிரதமரை சந்திக்க அரசு சார்பில் நேரம்  கேட்கப்பட்டது. ஆனால் பிரதமர் அலுவலகம் நேரம் ஒதுக்க மறுத்துவிட்டது.

இதற்கிடையில் மேலாண்மை வாரியம் விவகாரம் தொடர்பாக விவாதிக்கும் வகையில் தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரளா மாநிலங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் கடந்த 9ம் தேதி ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த கூட்டத்திலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக எந்த உத்தரவாதமும் கிடைக்கவில்லை. இதனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது கானல் நீராகிவிடுமோ என்ற அச்சம் விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நாடாளுமன்றத்தில் அதிமுக, திமுக எம்பிக்கள் குரல் எழுப்பி வருகின்றனர். மேலும் நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை.

இந்த நிலையில் உடனடியாக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை கூட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று திமுக கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில் நாளை தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அதன் பின்னர், சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். அந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக விவாதிக்கும் வகையில் சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை கூட்டுவது குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதாவது மறுநாள் 16ம் தேதி இந்த சிறப்பு கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. சிறப்பு கூட்டத்தை கூட்டுவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சிறப்பு கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அதன் பிறகு 19ம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதத்தை நடத்தும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-09-2018

    21-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்