SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

18 சட்டப்பேரவை தொகுதிகள் அடங்கிய பெலகாவி

2018-02-14@ 00:57:21

மாநிலத்தில் பெரிய மாவட்டமாக கருதப்படும் பெலகாவி மாவட்டத்தில் பெலகாவி மற்றும் சிக்கோடி ஆகிய இரு மக்களவை தொகுதிகள் உள்ளன. கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கர்நாடகா-மகாராஷ்டிரா இடையில் எல்லை பிரச்னை இருந்து வருகிறது. கடந்த 1924ம் ஆண்டு மகாத்மாகாந்தி தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடத்திய வரலாறும் பெலகாவிக்கு உள்ளது. கித்தூர்ராணி சென்னம்மா போன்ற சுதந்திர போராட்ட வீரர், வீராங்கணைகள் பிறந்த மண்ணாகவும் உள்ளது. மாநிலத்தில் எல்லையோர பகுதி மேம்பாடு குறித்து விவாதிப்பதற்காக ஆண்டுதோறும் சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடரை பெலகாவியில் நடத்த கடந்த 2006ம் ஆண்டு மஜத-பாஜ கூட்டணி ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது.
 மேலும் ஆண்டுதோறும் குளிர்கால கூட்டத்தொடர் நடத்த புதிய கட்டிடம் எழுப்பவும் முடிவு செய்யப்பட்டது.  அதன்படி ரூ.350 கோடி செலவில் பெலகாவியில் சுவர்ண விதானசவுதா கட்டிடம் கட்டி கடந்த 2012ம் ஆண்டு குடியரசு தலைவர் பிரணாப்முகர்ஜி திறந்து வைத்தார். விவசாயம் மட்டும் இத்தொகுதியில் பிரதானமாகும். கம்பு, மக்காசோளம், கரும்பு, சோளம் ஆகியவை முக்கிய விவசாய தொழிலாக உள்ளது. லிங்காயத்து, பஞ்சமசாலி, குருபர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் உள்ள தொகுதியில் லிங்காயத்து மற்றும் குருபர் வகுப்பினர் சம பலத்தில் இருந்தாலும், வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் சக்தியாக தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினர் உள்ளனர்.

பெலகாவி மக்களவை தொகுதி பெலகாவி, பைலஹொங்கலா, சவதத்தி, ராமதுர்கா, கித்தூர் ஆகிய 5 தாலுகாக்களை உள்ளடக்கியுள்ளது. பெலகாவி மக்களவை தொகுதியில் அரபாவி, பெலகாவி (ஊரகம்), பெலகாவி (வடக்கு), பெலகாவி (தெற்கு), பைலஹொங்கலா, கோகாக், ராமதுர்கா, சவதத்தி ஆகிய 8 தொகுதிகள் உள்ளன. கடந்த 2004ம் ஆண்டு வரை தனி தொகுதியாக இருந்த சிக்கோடி, தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக 2009ல் பொது தொகுதியாக மாற்றப்பட்டது. இதில் சிக்கோடி, அதாணி, நிப்பாணி, காகவாட், ராய்பாக், ஹுக்கேரி, குடசி, யமகனமரடி ஆகிய 8 சட்டப்பேரவை தொகுதிகள் அடங்கியுள்ளன. மேலும் கானாபுரா மற்றும் கிட்டூர் ஆகிய இரு சட்டப்பேரவை தொகுதிகள் என பெலகாவி மாவட்டத்தில் மொத்தம் 18 சட்டப்பேரவை தொகுதிகள் அடங்கியுள்ளன. மாநிலத்தில் அதிக பேரவை தொகுதிகள் உள்ள மாவட்டம் என்ற பெருமையும் இதற்குள்ளது.
 கடந்த 2013ல் நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 18 தொகுதிகளில் 9 தொகுதிகளில் பாஜ, 5 தொகுதிகளில் காங்கிரஸ், கர்நாடக ஜனதா கட்சி மற்றும் பிஎஸ்ஆர் காங்கிரஸ் தலா 1, சுயேட்சைகள் 2 என்ற வகையில் எம்.எல்.ஏக்கள் உள்ளனர். மஜதவுக்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்கவில்லை. கோகாக் மற்றும் கிட்டூர் தொகுதிகளில் மட்டும் இரண்டாவது இடம் பிடித்தது.

7 முறை வெற்றி பெற்ற சங்கரானந்த்
சிக்கோடி தனி தொகுதியாக இருந்தபோது, காங்கிரஸ் சார்பில் கடந்த 1967ம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்ற பி.சங்கரானந்த், 1971, 1977, 1980, 1984, 1989, 1991 ஆகிய தேர்தல்களில் தொடர்ந்து 7 முறை தோல்வியில்லாமல் வெற்றி பெற்றார். கடந்த 1996ம் ஆண்டு ஜனதாதளம் சார்பில் போட்டியிட்ட ரத்னமாலாவிடம் அவர் தோல்வியடைந்தார். கடந்த 1998, 1999, 2004 ஆகிய தேர்தல்களில் ரமேஷ் ஜிகஜிணகி போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2009ல் பொது தொகுதியாக மாற்றியதை தொடர்ந்து பாஜ சார்பில் போட்டியிட்ட ரமேஷ்கத்தி வெற்றி பெற்றார். இரண்டாவது முறையாக கடந்த 2014ல் நடந்த தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-03-2019

  22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • NerthikkadanTriplecane

  பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

 • TokyoOlympicTorch

  2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

 • newzealandattack

  நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

 • PhilipinesWhalePlastic

  இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்