SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதை தடுக்க டீசல், பெட்ரோல் மீது மத்திய-மாநில அரசு விதித்துள்ள வரியை ரத்து செய்யுங்கள்

2018-02-14@ 00:34:26

சென்னை: போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதை தடுக்க டீசல், பெட்ரோல் மீது மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ள கலால் மற்றும் மதிப்பு கூட்டு வரிகளை ரத்து செய்து விட்டு, ஒரே சீரான 10 சதவிகித ஜி.எஸ்.டி. வரி விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 27 கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து, போக்குவரத்து துறையை சீரமைப்பது குறித்த 27 பரிந்துரைகளை அளித்தார். அந்த பரிந்துரைகள் விவரம்:

* போக்குவரத்து கழகங்களின் மோசமான நிதி மேலாண்மைக்கு அரசின் கொள்கையால் ஏற்பட்ட அனைத்து நட்டத்தையும், முதலீடுகளையும் அரசே ஏற்க வேண்டும்.
* மாணவர்கள், முதியோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு வழங்கப்படும் பயணச் சலுகை முழுமையாக மாதா மாதம் வழங்கப்பட வேண்டும்.
* எதிர்காலத்தில் கொடுக்கப்படும் ஊதிய உயர்வு, ஓய்வூதியர்களின் செலவை அரசே ஏற்க வேண்டும்.
* தொழிலாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் ஓய்வு கால பலன்கள் மற்றும் இதர பிடித்தங்களுக்கான தொகைகளை மாதா மாதம் அந்த உரிய கணக்கில் செலுத்த வேண்டும்.
* வருங்காலத்தில் டீசல், எரிபொருள் விலை உயர்வு காரணமாக ஏற்படும்  கூடுதல் நிதி சுமையை அரசும் பொதுமக்களும் உரிய விகிதத்தில் ஏற்றிட வேண்டும்.
* டீசல், பெட்ரோல் மீது மத்திய,மாநில அரசுகள் விதித்துள்ள கலால் மற்றும் மதிப்பு கூட்டு வரிகளை ரத்து செய்து விட்டு, ஒரே சீரான 10 சதவிகித ஜி.எஸ்.டி. வரி விதித்திட வேண்டும்.
* உடனடியாக கட்டண உயர்வு முழுமையாக திரும்ப பெற வேண்டும்.
* பேருந்து கூடு கட்டும் பணியை அரசு போக்குவரத்துக் கழகமே மேற்கொள்ள வேண்டும்.
* ஒரே வழித்தடத்தில் பயணிகள் அடர்த்திக்கேற்றவாறு தேவைக்கு அதிகமான பேருந்துகள் இயங்குவதை தவிர்க்க வேண்டும்.
* அரசு பேருந்துகளின் சேவை நேரங்கள் லாபம் ஈட்டும் வகையில் திரும்ப பெறப்பட வேண்டும்.
* 200 கிலோ மீட்டருக்கு அதிகமாக உள்ள வழித்தடங்களை அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் இணைக்க வேண்டும். இதனால் 8 மணி நேரத்திற்குமேல் ஊழியர்கள் பணியாற்றுவதை தவிர்த்து, விபத்தை தடுக்க முடியும்.
* பராமரிப்புக்காக ஒவ்வொரு பேருந்தும் 16 மணி நேரத்துக்கு ஒரு முறை பணிமனை திரும்ப வேண்டும்.
* ஆண்டுதோறும் புதிய பேருந்துகள் வாங்க 1,000 கோடிக்கு குறையாமல் நிதி ஒதுக்க வேண்டும்.
* பேருந்துகளுக்கு மோட்டார் வாகன காப்பீட்டை கட்டாயமாக்க வேண்டும்.
* பேருந்துக்கு தேவையான உதிரி பாகங்கள், டயர் போன்றவை தேவையான அளவுக்கு கொள்முதல் செய்து இருப்பில் இருக்க வேண்டும். தரமான அசல் உதிரி பாகங்களை வாங்குவதற்கு நிபுணர் குழு அமைத்து செயல்படுத்த வேண்டும்.
* தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு இணையாக கூடு கட்டவும், நீண்ட தூர பயணத்துக்கு ஏற்றவாறு அதி சொகுசு பேருந்துகளை வாங்கி இயக்க வேண்டும்.
* எரிபொருள் தணிக்கை நடத்திட நிபுணர்கள் குழு அமைக்க வேண்டும்.
* சிறப்பு பேருந்துகள், விழாக்கால பேருந்துகள் இயக்கத்தில் ஏற்படும் நட்டத்தை சரி செய்ய திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
* சுமை கட்டணம், சேவை மற்றும் முன்பதிவு கட்டணம் ஆகியவற்றை போக்குவரத்துக் கழகங்களே நடத்திட வேண்டும்.
* நவீன பதாகை விளம்பரம், கூரியர் சேவை போன்ற வருவாயை பெருக்கும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
* அரசு போக்குவரத்து கழகங்களுக்கு சொந்தமான பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளில் காலி இடங்களில் வர்த்தக ரீதியான பயன்பாட்டுக்கு ஈடுபடுத்த வேண்டும்.
* ரயில்வே துறையில் இருப்பதுபோல் ‘தட்கல்’ முறையை கொண்டு வர வேண்டும். பேருந்து கட்டணம் என்பது ரயில்வே கட்டணத்தைவிட குறைவாக இருத்தல் வேண்டும்.
* பயணிகள் மற்றும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் இடையே மாதந்தோறும் ‘நல்லிணக்க முகாம்கள்’ நடத்த வேண்டும்.
* தமிழக மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள திடீர் கட்டண உயர்வு போன்ற அதிர்ச்சிகளை தராத வகையில் அரசு பேருந்துகள் இயங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கெங்குசாமி நாயுடு மறைவுக்கு இரங்கல்
திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வௌியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கத்தின் நிறுவனர் தலைவரும், கல்வி தந்தையுமான கெங்குசாமி நாயுடு காலமானார் என்ற செய்தியறிந்து துயரமுற்றேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் திமுக சார்பில் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகம் முழுவதும் வாழும் தெலுங்கு பேசும் மக்களின் பேரன்பைப் பெற்று, சிறந்த தொழிலதிபராகவும், கொடை வள்ளலாகவும் திகழ்ந்து, அனைத்துத் தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட கெங்குசாமி நாயுடு மறைவு தமிழகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். மேலும் பாமக நிறுவனர் ராமதாசும் இரங்கல் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • lastfinaldest111

    21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்

  • finaldesti000

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்

  • kannirpeoplvaj

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி

  • bjpvajpai123

    டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி

  • dangerrrkerala123

    கேரளாவில் கனமழை - மீட்பு பணியில் ஈடுபட்ட பொதுமக்களின் துணிகர செயல்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்