SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓகி புயலால் சரிந்த ரப்பர் மரங்களை தூக்கி நிறுத்தும் விவசாயிகள்

2018-01-13@ 12:37:45

குலசேகரம்: குமரி மாவட்டம் விவசாயத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு ரப்பர், வாழை போன்றவை அதிகம் பயிரிடப்படுகிறது. இவை குமரி மாவட்டத்தின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளன. கடந்த ஆண்டு நவம்பர் 29ம் தேதி வீசிய ஓகி புயலில் குமரி மாவட்டம் பெரும் அழிவை சந்தித்தது. பலர் உயிரிழந்ததோடு பல லட்சக்கணக்கான ரப்பர், வாழை போன்றவை காற்றில் சரிந்து விழுந்தன. நூற்றுக்கணக்கான வீடுகளும் சேதமடைந்தன. மீட்பு பணியின் காரணமாக போக்குவரத்து சரி செய்யப்பட்டதுடன் ஒரு மாத தீவிர பணியினால் மின்பாதைகளும் சரி செய்யப்பட்டு மின் இணைப்புகள் வழங்கப்பட்டது. மீனவ மக்களின் தொடர் போராட்டங்களினால் புயல் காற்றில் சிக்கி இறந்துபோன மீனவர்களுக்கு நிவாரண தொகை அறிவிக்கப்பட்டது.

அழிந்து போன விவசாயத்தை மீண்டும் தொடருவதற்கு அரசு, காற்றில் விழுந்த ரப்பர், வாழை, தென்னை போன்றவற்றிற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையும், போராட்டங்களும் கண்டு கொள்ளப்படாத நிலையில் உள்ளது. தமிழக அரசு ஒரு ஹெக்டேருக்கு ஒரு லட்சம் என நிவாரணம் அறிவித்துள்ளது. இதற்கு சில விதிமுறைகளையும் அறிவித்துள்ளது. அதன்படி ஒரு ஹெக்டேரில் 33 சதவீதத்திற்கு அதிகமான மரங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்கு 18 ஆயிரம், அதன் பின்னர் வாழை, அன்னாசி ஊடுபயிராக பயிர் செய்யப்படுவதற்கு 50 ஆயிரம், தேனீ வளர்ப்பதற்கு 32 ஆயிரம் என ஒரு லட்சம் ரூபாயை நிர்ணயித்துள்ளது. ரப்பர் கன்றுகள் நடப்பட்டு ஏழு ஆண்டுகளுக்கு பின்னர்தான் வருவாய் எதிர்பார்க்க முடியும்.

நீர்ப்பாசன வசதியுள்ள பகுதிகள் மட்டுமே வாழை ஊடு பயிராக பயிரிட முடியும். எல்லா பகுதிகளிலும் அன்னாசி பயிரிடுல் மற்றும் தேனீ வளர்ப்பு சாத்தியமில்லை. இதனால் அரசு அறிவித்துள்ள நிவாரணம் குமரி மாவட்ட விவசாயத்திற்கு பொருந்தாத நிலையில் உள்ளது.இந்த நிலையில் அரசு நிவாரணம் கிடைக்கும் என காத்திருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சிய நிலையில் தற்போது காற்றில் சரிந்த நிலையிலுள்ள ரப்பர் மரங்களை மீண்டும் நேராக தூக்கி நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான பணிகளில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நான்கு தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து பணி செய்தால் நாள் ஒன்றிற்கு 4 முதல் 6 ரப்பர் மரங்கள் வரை மட்டுமே நிமிர்த்த முடிகிறது. இவ்வாறு ரப்பர் மரங்களை நிமிர்த்தி கட்டுவதற்கு பிளாஸ்டிக் கயிறு பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஒரு மரத்தை நிமிர்த்தி கட்டுவதற்கு 1000க்கு மேல் செலவாகிறது. காற்றில் சரிந்து விழுந்த வேர்கள் சேதமடைந்திருப்பதால் இவ்வாறு அதிகம் செலவழித்தும் அதற்குரிய பலன் கிடைக்குமா என்ற சந்தேகம் விவசாயிகளிடையே எழுந்துள்ளது. பல இடங்களில் சரிந்து விழுந்த ரப்பர் மரங்களை தூக்கி நிறுத்துவதற்குரிய பண வசதியில்லாததாலும், தொழிலாளர் பற்றாக்குறையினாலும் சரிந்த மரங்களை தூக்கி நிறுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் ஓகி புயலின் தாக்கத்திலிருந்து மீள முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-07-2018

  22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-07-2018

  21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • DryingClothingfestival

  சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

 • unmanedbookshopchina

  சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

 • newyork_steam_explosion

  நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்