SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எம்எல்ஏக்கள் சம்பள உயர்வை ஏற்க மாட்டோம்; திமுக எம்எல்ஏக்கள் கையெழுத்திட்டு சபாநாயகரிடம் வழங்கியுள்ளோம்; மு.க.ஸ்டாலின்

2018-01-13@ 01:27:39

சென்னை: எம்எல்ஏக்கள் சம்பள உயர்வை ஏற்க மாட்டோம் என்று திமுக எம்எல்ஏக்கள் கையெழுத்திட்டு சபாநாயகரிடம் வழங்கியுள்ளோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். சட்டப்பேரவை முடிவடைந்த பிறகு அவைக்கு வெளியில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்  மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: கவர்னர் உரையில் இந்த அரசு கடனில் மூழ்கி இருக்கிறது என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறது. இதற்கிடையில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் தங்களுடைய ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை ஆகியவற்றை காரணம் காட்டி தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அது நீதிமன்றத்தில் இருக்கிறது. அதற்குள் நான் போக விரும்பவில்லை.

ஆகவே, அதற்கு நிதி கொடுக்க முடியவில்லை, “அரசுக்கு மனம் இருக்கிறது, ஆனால் பணம் இல்லை” என அதிமுக அரசின் தரப்பில் அமைச்சரே சொல்லியிருக்கிறார். இந்தச் சூழ்நிலையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஏறக்குறைய 100 சதவீதம் உயர்த்திக் கொடுப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. எனவே, அந்த சட்ட முன்வடிவை அறிமுகப்படுத்திய நேரத்தில், அதை நாங்கள் கண்டித்திருக்கிறோம். இந்நிலையில் இன்றைக்கு நடைபெற்ற விவாதத்தில் தெளிவாக நான் எடுத்துச் சொல்லியிருக்கிறேன். இதை கண்டிக்கும் வகையில் மட்டுமல்ல, போக்குவரத்துத் தொழிலாளர்கள் பிரச்னை தீரும் வரையில், அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உயர்த்தித் தந்திருக்கின்ற சம்பள உயர்வை நாங்கள் ஏற்றுக் கொள்வதாக இல்லை என்பதையும், திமுகவின் அத்தனை சட்டமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டு சபாநாயகரிடத்தில் வழங்கி இருக்கிறோம்.

திமுக தலைவர் கருணாநிதி காலத்தில் ஊதிய உயர்வு வழங்கப்பட்டு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு திருப்பி பெறப்பட்டதாக நீங்கள் குறிப்பிட்டு இருக்கிறீர்களே? என்று கேட்கிறீர்கள். ஆம். பொருளாதார சூழ்நிலை சரியில்லை என்பதை காரணம் காட்டி ஒத்தி வைத்துவிட்டு பொருளாதாரம் சீரான பிறகு உயர்த்திக் கொடுப்பதாக ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இதே அவையில் சொல்லியிருக்கிறார். இப்போது பொருளாதாரம் இன்னும் சீரடையவில்லை. அப்படியிருந்தால் போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டியது தானே?, தொழிலாளர்களின் சேமிப்பு பணத்தையே இந்த அரசால் அவர்களுக்கு கொடுக்க முடியவில்லை.  இவ்வாறு அவர் கூறினார்.

‘வைரமுத்துவை மிரட்டுவதா?’

மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:  வைரமுத்து எழுதிய கட்டுரையில் ஆண்டாள் குறித்து தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அவர் உடனடியாக விளக்கம் அளித்து வருத்தம் தெரிவித்திருக்கிறார். ஆனால் வெறுப்பு அரசியலுக்கு விதை தூவ காத்திருக்கும் சிலர் தாங்கள்தான் ஒட்டுமொத்த இந்து மதத்தின் பாதுகாவலர்கள்  என்ற போர்வையில் கவிஞர் வைரமுத்து மீது அராஜகமான கருத்துகளைத் தெரிவிப்பதும், மிரட்டுவதும் துளியும் நாகரீகமானது அல்ல. மிகவும் அருவருக்கத்தக்க செயல். இதற்கு திமுக சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயகத்தில் கருத்துக்கு மாற்றுக் கருத்து மட்டும் இருக்க முடியுமே தவிர, அநாகரீகத்திற்கும் வரம்புமீறலுக்கும் நிச்சயம் தமிழகத்தில்  இடமில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-10-2018

  21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • dussehraa_11

  நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

 • 20-10-2018

  20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • tirupathivavacha

  திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

 • kulasaidasaraeight

  வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்