SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் குட்கா விற்பனையை தடையில்லாமல் நடத்த அமைச்சர், டிஜிபிக்கு லஞ்சம் தரப்பட்டது: வருமானவரித்துறை பரபரப்பு மனு

2018-01-13@ 01:20:24

* வருமானவரித் துறை வேதாஇல்லத்தில் உள்ள சசிகலாவின் அறையில் சோதனை நடத்தியபோது, டிஜிபிக்கு வருமானவரித்துறை அனுப்பிய ரகசிய கடிதத்தின் ஒரிஜினல் கண்டுபிடிக்கப்பட்டது

சென்னை: .தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களான குட்கா, பான் மசாலா போன்ற பொருட்கள் தங்கு தடையில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு அமைச்சர்களும், போலீஸ் அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். எனவே, இந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் மத்திய கலால் துறை தாக்கல் செய்த பதில் மனுவில், டெல்லியில் உற்பத்தியாகும் குட்கா பொருட்கள் சட்டவிரோதமாக தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது என்றும், ஹவாலா முறையில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டு இது வரை ரூ.55 கோடி வரை வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, வருமானவரி துறை முதன்மை இயக்குநர் (விசாரணை) சுசி பாபு வர்கீஸ் நேற்று உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:சென்னையில் உள்ள எம்டிஎம் குட்கா தயாரிப்பு நிறுவனம் மற்றும் அதன் குடோன்களிலும், ஆந்திரா மாநிலம், குண்டூரிலும் கடந்த 2016 ஜூலை 8ம் தேதி வருமானவரித்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. சோதனையின்போது அந்த நிறுவனத்தின் அக்கவுண்டன்ட் வி.ஏ.யோகேஸ்வரி என்பவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் செங்குன்றத்தில் உள்ள 10 குடோன்களில் சோதனை நடத்தப்பட்டது.

மேலும், எம்டிஎம் நிறுவனத்தின் வியாபார பார்ட்னர்களான கோடம்பாக்கத்தில் வசிக்கும் மாதவராவ், சீனிவாசராவ் பாலிசெட்டி, குண்டூரைச் சேர்ந்த உமா சங்கர் குப்தா தாளம் மற்றும் வேறு சிலரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அதன்பிறகு, 2016 ஆகஸ்ட் 23ம் தேதி தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, சில்வாசா ஆகிய இடங்களில் குட்கா பொருட்களை சப்ளை செய்தவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு புகையிலை, பாக்கு, பாக்கெட் செய்யும் எந்திரங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. மாதவராவிடம் நடத்திய விசாரணையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அப்போது சென்னை போலீஸ் கமிஷனராக இருந்தவர்களின் உதவியுடன் குட்கா வியாபாரம் நடத்தியதாக கூறியுள்ளார்.

மேலும், சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அப்போதைய சென்னை போலீஸ் கமிஷனர் மற்றும் பல உயர் அதிகாரிகளுக்கு பணம் தரப்பட்டுள்ளது. கடந்த 2016 ஏப்ரல் 1 முதல் ஜூன் 15ம் தேதி வரை சுகாதாரத்துறை அமைச்சருக்கு பல்வேறு நபர்கள் வாயிலாக  ரூ.56 லட்சம் கொடுக்கப்பட்டது என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, இந்த விசாரணை மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக தலைமைச் செயலாளர்  மற்றும் அப்போதைய போலீஸ் டிஜிபி அசோக்குமாருக்கு 2016 ஆகஸ்ட் 11ம் தேதி ரகசிய கடிதம் அனுப்பினோம். அதில், மாதவராவ் கொடுத்த வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ள தேவையான பகுதிகளையும் இணைத்திருந்தோம்.

இந்த முறைகேட்டில் தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய நபர்கள் மட்டுமல்லாமல் மத்திய கலால் துறை அதிகாரிகள் பலரும் கூட்டு சேர்ந்ததையும் குறிப்பிட்டிருந்தோம். அந்த கடிதம் நேரடியாக தலைமைச் செயலாளருக்கும் தரப்பட்டது. டிஜிபிக்கு சிறப்பு ஊழியர் மூலம் நேரடியாக அந்த கடிதம் தரப்பட்டது. அந்த கடிதத்தை டிஜிபியின் தனிச் செயலாளர் வாங்கி அதற்கான சான்றையும் கொடுத்துள்ளார். அந்த கடிதத்தை டிஜிபி அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ளார். இந்த கடிதம் மற்றும் ஆவணங்கள் தொடர்பான விவகாரம் நிலுவையில் உள்ள நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 17ம் தேதி வருமானவரித் துறை போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் உள்ள சசிகலாவின் அறையில் சோதனை நடத்தியது.

அப்போது, டிஜிபிக்கு வருமானவரித்துறை அனுப்பிய ரகசிய கடிதத்தின் ஒரிஜினல் அங்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனுடன் வருமான வரித்துறை அனுப்பிய ஆவணங்களும் சசிகலாவின் அறையில் இருந்ததும் தெரியவந்தது. ஏற்கனவே, இந்த முறைகேடுகள் குறித்து வின்சென்ட் என்பவர் தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்பிறகு, கதிரேசன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால உத்தரவை 2017 ஜூலை 6ல் பிறப்பித்தது. அதன் பின்னர் உயர் நீதிமன்றம் 2017 ஜூலை 28ம் தேதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில்  வருமானவரித்துறை இயக்குநர் அலுவலகம் (விசாரணை) தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருக்கு 2017 செப்டம்பர் 21ம் தேதி கடிதம் எழுதியது.

அந்த கடிதத்துடன் மாதவராவ், சீனிவாச ராவ், உமா சங்கர் குப்தா, ஆர்.நந்தகுமார், யோகேஸ்வரி ஆகியோரிடம் பெறப்பட்ட வாக்குமூலம், கைப்பற்றப்பட்ட குட்கா தொடர்பான ஸ்டாக் பட்டியல், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய மொபைல் போன்களில் பரிவர்த்தனை தொடர்பாக பதிவான தகவல்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் பைண்ட் செய்யப்படாத பேப்பர்கள் ஆகியவையும் கொடுக்கப்பட்டது.

இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில்  நேற்று மதியம் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெ.அன்பழகன் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, நாங்கள் சிபிஐ விசாரணை கோரி வழக்கு தொடர்ந்துள்ளோம். தற்போது வருமானவரித்துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட போதுமானதாக உள்ளது. எனவே, இந்த மனுவைப் பதிவு செய்துகொண்டு வரும் 17ம் தேதி இந்த வழக்கு விசாரணையை நடத்த வேண்டும் என்று கோரினார். இதையடுத்து, விசாரணையை நீதிபதிகள் வரும் 17ம் தேதி மதியம் 3 மணிக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்