SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தை பிறந்தால் வழி பிறக்கும் மக்கள் விரும்பும் ஆட்சி மாற்றம் ஏற்படும்: மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

2018-01-13@ 01:18:41

சென்னை: தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதுபோல் மக்கள் விரும்பும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர் ஊராட்சியில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா நேற்று மாலை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவை மு.க.ஸ்டாலின் மற்றும் துர்க்கா ஸ்டாலின் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். மு.க.ஸ்டாலின் பேசியதாவது: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் சமத்துவப் பொங்கல் விழாவில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் பொங்கலுக்கு முன்னதாக நடைபெறும் இந்த விழா நடைபெறும் நாள், தேதி குறித்து விழா ஏற்பாட்டாளர்களை விட எனக்கு அதிக ஆர்வம் ஏற்படும்.

ஏனென்றால் இதுபோன்று கலைநிகழ்ச்சிகளோடு இந்த பொங்கல் விழா நடைபெறுவது எனக்கு மிக்க மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. விழா நடைபெறும் இந்த ஆதனூர் பகுதிக்கு திமுக எந்த அளவுக்கு உறுதுணையாக இருந்திருக்கிறது என்பதை இப்பகுதி பொதுமக்கள் நன்கு அறிவர். கடந்த 1990ஆம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்த போது போக்குவரத்துத் தொழிலாளர்களுக்காக இப்பகுதியில் 39 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு 442 தொழிலாளர்களுக்கு வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. அதற்காக மாதம் ரூபாய் 502 வீதம் 10 ஆண்டுகளுக்கு செலுத்தி வீடு இப்போது தொழிலாளர்களுக்கு சொந்தமாகி உள்ளது. தற்போது அதன் மதிப்பு 50 லட்சம் ஆகும்.

ஆனால் தற்போதைய ஆட்சி போக்குவரத்துத் தொழிலாளர்கள் குறித்து எந்த அக்கறையும் இல்லாத அரசாக இருக்கிறது. தற்போதைய ஆட்சியாளர்களின் ஒரே கவலை ஆட்சியை தக்கவைப்பது மட்டுமே. அதற்காக தங்கள் கட்சி எம்எல்ஏக்களையே 18 பேரை நீக்கினார்கள். மேலும் சதித்திட்டம் மூலம் நம்முடைய 21 எம்எல்ஏக்களை நீக்க திட்டமிட்டார்கள். ஆனால் சரியான நேரத்தில் நீதிமன்றத்தை அணுகியதன் மூலம் அந்த சதியை முறியடித்தோம். இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. விரைவில் நமக்கு சாதமாக தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, நீதிமன்றம் மூலம் இந்த ஆட்சி அகற்றப்படும்.

விமானத்தில் சென்றாலும், ரயிலில் சென்றாலும், நடைபயிற்சியின்போதும், டீ குடிக்கச் சென்றாலும், உணவருந்தச் சென்றாலும் பார்க்கும் அனைவரும் இந்த ஆட்சியை எப்போது வீட்டுக்கு அனுப்பப் போகிறீர்கள் என்றுதான் கேட்கிறார்கள். தை பிறந்தால் வழி பிறக்கும். அதேபோன்று திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக அறிவிக்க சட்டம் இயற்றப்படும். அணைவருக்கும் தைத்திருநாள் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவுக்கு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன் வரவேற்றார். மாவட்ட அவைத்தலைவர் துரைசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் விசுவநாதன், ஜி.சி.அன்புச்செழியன், கலைவாணி காமராஜ், மாவட்ட பொருளாளர் எஸ்.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக் நன்றி கூறினார்.  வீரவாள் பரிசளிப்பு: மு.க.ஸ்டானுக்கு ஆதனூர் ஊராட்சி கழக செயலாளர் தமிழ்அமுதன், ஒன்றிய மகளிரணி செயலாளர் மலர்விழி தமிழமுதன் வெள்ளி வீரவாளை நினைவுப் பரிசாக வழங்கினர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • bus_fire_kazakhstan

  கஜகஸ்தானில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 52 பேர் கருகி உயிரிழப்பு

 • london_light_festival

  குளிர்கால விளக்குத் திருவிழா: விளக்கின் வெளிச்சத்தில் மின்னும் லண்டன் நகரம்!

 • kalaivanar_arangil11

  கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்திய ராணுவ தளவாட உற்பத்திக்கான புதிய பங்களிப்பு தொடர்பான கண்காட்சி

 • popecile

  போப் ஆண்டவர் தென் அமெரிக்கா நாடுகளில் சுற்றுப்பயணம்

 • prakash_IIT_chennai

  இந்தியாவில் முதல் முறையாக பல்கலைக்கழகத்தால் இயக்கப்படும் ஆராய்ச்சி பூங்கா: சென்னை ஐஐடியில் பிரகாஷ் ஜவடேகர் திறந்து வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்