SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுயாட்சி, கூட்டாட்சி கொள்கையை வலுவிழக்க செய்யும் வகையில் கவர்னர் ஆய்வு தொடர்ந்தால் திமுக ஆர்ப்பாட்டம் நடத்தும் : மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

2017-12-08@ 00:16:05

சென்னை : திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களைத் தொடர்ந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்திருப்பது, ‘ராஜ்பவன்’ மத்திய பா.ஜ. அரசின் அரசியல் நடவடிக்கைகளுக்கு தீவிரமாகவும் பரவலாகவும் பயன்படுத்தப்படுகிறதோ என்ற பலத்த சந்தேகத்தை எழுப்புவதோடு, “இது ஆய்வு அல்ல, வெளிப்படையான அரசியல்”, என்பதை உணர்த்துகிறது. “மாநில சுயாட்சி  மத்தியில் கூட்டாட்சி” எனும் மாபெரும் முழக்கம் ஓங்கி ஒலிக்கும் தமிழ் மண்ணில், அதற்கு நேரெதிராக நடைபெறும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
“அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்படுவேன்”, “வெளிப்படையான நிர்வாகத்திற்கு வித்திடுவேன்”, என்றெல்லாம் பல வாக்குறுதிகளை அளித்துப் பதவியேற்ற கவர்னர் தற்போது மத்திய அரசின் திட்டங்களுக்குத் தூதுவராக செயல்பட்டு, பல மாவட்டங்களுக்குச் சென்று கொண்டிருப்பது கவர்னரின் வரம்புகளை இன்னும் அவர் கவனத்தில் கொள்ளவில்லை என்பதை எடுத்துக் காட்டுகிறதா அல்லது “எல்லை - வரம்புகள்” தெரிந்திருந்தும் மத்திய பா.ஜ. அரசின் கட்டளைப்படி தமிழகத்தில் பா.ஜ.விற்கு இதுவரை இல்லாத நற்பெயரை திரட்டிவிட வேண்டும் என்று கருதுகிறாரா என்ற கேள்வியும் எழுகிறது.

மத்திய அரசின் திட்டங்கள் மட்டுமல்ல, மாநில அரசின் திட்டங்களும் முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யும் பொறுப்பையோ, அதிகாரத்தையோ நிச்சயமாக அரசியல் சட்டம் நியமன கவர்னருக்கு வழங்கிடவில்லை. அப்படியிருக்கும் சூழலில் இதுபோன்ற ஆய்வுகளில் கவர்னர் தொடர்ந்து ஈடுபடுவது மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரங்களில் ராஜ்பவன் மூலம் ஆக்கிரமித்து, தனியாதிக்கம் செலுத்தும் செயலாகும். அதுமட்டுமின்றி, இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவதன் மூலம், பாராளுமன்ற ஜனநாயகத்தில் கவர்னர் நம்பிக்கை குறைந்துவிட்டதோ என்ற சந்தேகமும் மக்கள் மனதில் எழுந்து வருகிறது. அரசு கஜானாவைச் சுரண்டி ஆட்சி நடத்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கவர்னர் மேற்கொள்ளும் ஆய்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் துணிச்சல் துளியும் இல்லாமல், மத்திய பாஜ அரசுக்கு அடிபணிந்து கிடக்கிறார்.“குமரி துயரத்தில்” இருந்து மீள முடியாமல் தவிக்கும் மக்களுக்கு அதிகாரிகள் மட்டத்தில் நடக்கும் ஏதோ ஒரு சில நிவாரண நடவடிக்கைகளையும் “ஆளுநரின் குமரி ஆய்வு” பாதிக்கும் செயலாக அமைந்துவிட்டது என்பதையும் இந்த நேரத்தில் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே, மாவட்டங்களில் ஆய்வு செய்யும் “அரசியல் பணியை” கவர்னர் உடனடியாகக் கைவிட்டு, இப்போது நடைபெற்று வரும் மக்கள் விரோத மைனாரிட்டி அரசின் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சருக்கு உத்தரவிட முன் வரவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். “பெரும்பான்மை உள்ளவர்தான் மாநிலத்தின் முதலமைச்சராக நீடிக்க வேண்டும்”, என்பதை உறுதி செய்யும் தன் அரசியல் சட்டக்கடமையை நிறைவேற்றாமல், மாவட்ட ரீதியாக இப்படிப்பட்ட ஆய்வுகளை இனிமேலும் தொடர்ந்து, “மாநில சுயாட்சி” கொள்கையையும் “இந்திய நாட்டின் கூட்டாட்சி” தத்துவத்தையும் வலுவிழக்க வைக்க முயன்றால், இனிவரும் காலங்களில் கவர்னர் ஆய்வுக்குச் செல்லும் மாவட்டங்கள் அனைத்திலும் திமுக சார்பில் அறவழி ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டிய நிலை உருவாகும் என்று எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • thaliland_boyshome

  தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்

 • gujaratheavyrain

  குஜராத் மாநிலம் கிர்சோம்நாத் பகுதியில் பலத்தமழை : பொதுமக்கள் பாதிப்பு

 • vintage_car_gurgaon

  பழங்குடிப் பொருட்களிலிருந்து விண்டேஜ் கார்கள் வரை... பல்வேறு வகையான கலைப்பொருட்களை உள்ளடக்கிய குர்கான்!

 • public_trans_venen

  வெனிசுலாவில் அரசு பேருந்துக்கு கடும் கிராக்கி: மக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் அவலம்!

 • Manilarainstorm

  பிலிப்பைன்ஸில் கனமழை மற்றும் புயல்: வெள்ளக்காடான மணிலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்