SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

‘தமிழக அரசும், மத்திய அரசும் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை’கவர்னரை முற்றுகையிட்டு குளச்சலில் மீனவர்கள் கோஷம்

2017-12-08@ 00:07:41

நாகர்கோவில் : குளச்சலில் இறந்த மீனவர் வீட்டிற்கு ஆறுதல் தெரிவிக்க சென்ற தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை மீனவர்கள் முற்றுகையிட்டு கோஷமிட்டதால் அவர் வேகமாக அங்கிருந்து வெளியேறினார். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரி வந்தார். அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியவர் நேற்று காலை  கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயில்களில் தரிசனம் செய்தார். தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் ஹான்ஸ்ராஜ் வர்மா, அவருடன் வந்தார். பின்னர் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் சுமார் ஒரு மணிநேரம் ஆலோசனை நடத்தினார். பின்னர் ஓகி புயலால் கடலில் இறந்ததாக கருதப்படும் குளச்சல், துறைமுக தெருவில் உள்ள மீனவர் ஜாண் டேவிட்சன்(36) வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினார். அப்போது அங்கு திரண்டிருந்த மீனவர்கள் சிலர் கவர்னர் அருகே சென்று ஆவேசத்துடன் கோஷமிட்டனர். ‘எதற்கு நீங்கள் இருக்கிறீர்கள், தேடுவதற்கு கப்பல் விட்டு என்ன பயன்? தமிழக அரசும், மத்திய அரசும் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை, எங்கள் பிள்ளைகளை காப்பாற்றுங்கள்’ என்று கூறி அவரை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.

அப்போது கவர்னருடன் வந்தவர்களும், அங்கிருந்த சிலரும் அந்த பெண்ணை அமைதிப்படுத்த முயன்றனர். அங்கிருந்த பெண்கள் கதறி அழுதவாறே ‘என் மகன் உயிரை பிடித்துக்கொண்டு கடலில் போராடியிருக்கிறான், அவனை யாரும் காப்பாற்ற செல்லவில்லையே’ என்று கதறி அழுதனர். அந்த பெண்களின் தலையில் கை வைத்து அவர்களுக்கு கவர்னர் ஆறுதல் தெரிவித்தார். அப்போது தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் எதிராக மீனவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் கவர்னர் மீனவர்  வீட்டில் இருந்து அவசரமாக வெளியேறினார். இதனால் அதே தெருவில் உள்ள ஜஸ்டின்பாபு(44), லியோன் நகரில் டெல்பின் ராஜ்(50) ஆகிய இரு மீனவர்கள் வீட்டிற்கு  அவர் செல்லவில்லை.   குளச்சலில் இருந்து புறப்பட்ட கவர்னர் பன்வாரிலால் புரோகித், தடிக்காரன்கோணத்தில் முறிந்து விழுந்த ரப்பர் மரங்கள், தெரிசனங்கோப்பு பகுதியில் வாழை மரங்கள், சுசீந்திரம் கற்காடு புறவழிச்சாலையில்  ஏற்பட்டிருந்த சாலை உடைப்பு ஆகியவற்றை பார்வையிட்டார்.

 பின்னர் கன்னியாகுமரி விவேகானந்தர் கேந்திராவில் நிறுவனர் ஏக்நாத் ரானடே நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். விவேகானந்தர் நினைவிடத்திற்கு சென்ற அவர் அங்கு அதிகாரிகளுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.  அப்போது மழைபெய்ய தொடங்கியதால் சிறிது நேரம் கொட்டும் மழையில் நனைந்தவாறே அவர் மீண்டும் விருந்தினர் மாளிகைக்கு புறப்பட்டார். அங்கு  உயர் அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை நடத்தினார். பின்னர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை அவர் பெற்றார். மாலை 5.10 மணிக்கு கார் மூலம் மதுரை புறப்பட்டார்.

இக்கட்டான தருணத்தில் உங்களுடன் துணை நிற்பேன்’

குளச்சல் கடலோர கிராமங்களில் மீனவர்களை சந்தித்த கவர்னர் பன்வாரிலால் புரோகித், குளச்சலில் உள்ள லேபாஸ் மண்டபத்தில் மீனவர்களுடன் பேசினார். அப்போது அவர், ‘உங்கள் துயரத்தில் நானும் பங்கேற்கிறேன். உங்கள் கோரிக்கையை உயர்மட்டம் வரை கொண்டு செல்வேன். இங்கு நான் ஆய்வு செய்ததை அறிக்கையாக தயாரித்து மத்திய அரசுக்கு அளிப்பேன். உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற நான் துணை  நிற்பேன். இக்கட்டான இந்த தருணத்தில் உங்களுடன் நான் இருக்கிறேன். நிச்சயம் உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • thaliland_boyshome

  தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்

 • gujaratheavyrain

  குஜராத் மாநிலம் கிர்சோம்நாத் பகுதியில் பலத்தமழை : பொதுமக்கள் பாதிப்பு

 • vintage_car_gurgaon

  பழங்குடிப் பொருட்களிலிருந்து விண்டேஜ் கார்கள் வரை... பல்வேறு வகையான கலைப்பொருட்களை உள்ளடக்கிய குர்கான்!

 • public_trans_venen

  வெனிசுலாவில் அரசு பேருந்துக்கு கடும் கிராக்கி: மக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் அவலம்!

 • Manilarainstorm

  பிலிப்பைன்ஸில் கனமழை மற்றும் புயல்: வெள்ளக்காடான மணிலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்