SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நடிகர் விஷால் மனு தள்ளுபடி விவகாரம் விதிகளை பின்பற்றாமல் கோட்டை விட்டாரா தேர்தல் அதிகாரி

2017-12-08@ 00:04:54

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் மனு தள்ளுபடியானது தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையை சீர்குலைத்துள்ளது. ஆர்.கே.நகர் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட் டதும், அதிகாரியாக வேலுச்சாமி  நியமனம் செய்யப் பட்டார். திடீர் திருப்பமாக நடிகர் விஷால் போட்டியிடுவதாக அறிவித்தார்.  ஆனால் விஷால், தீபா உட்பட 73 பேர் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது பரபரப்பையும் சர்ச்சையையும் உண்டாக்கியிருக்கிறது. விஷால் மனுவில் முன்மொழிந்திருந்த சுமதி, தீபன் ஆகியோர் தேர்தல் அதிகாரியின் அறைக்கு வந்து, விஷால் வேட்பு மனுவில்  தங்களது பெயர்கள் தங்கள் விருப்பம் இல்லாமல் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், கையெழுத்துகள் போலியாக போடப்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவித்தனர்.அதனையடுத்து விஷால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி வேலுச்சாமி அறிவித்தார்.

 இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகர் விஷால் கடும் கண்டனம் தெரிவித்தார்.  விஷால் மனுவில் முன்மொழிந்தவர்கள்  கையெழுத்து ேபாலியானது என்று தேர்தல் அதிகாரி முடிவு செய்யும் முன்பு புகார் சொல்ல வந்தவர்களின் கையெழுத்துடன் எந்த வகையிலும் சோதனை செய்ததாக தெரியவில்லை. தீபன், சுமதி ஏற்கனவே வைத்திருக்கும் ஆவணங்களில் போட்டிருந்த கையெழுத்துகளுடன் ஒப்பீடு செய்யாமல் வாய் புகாரை ஏற்று விஷாலின் மனுவை இயந்திரத்தனமாக தள்ளுபடி செய்துள்ளனர். விஷால் மனுவில் முன்மொழிந்தவர்களின் கையெழுத்து போலி என்பதால் மனுவை தள்ளுபடி செய்ததை நியாயப்படுத்தும் தேர்தல் அதிகாரிகள், தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில்  ஜெயலலிதாவின் கைரேகையுடன் கூடிய பிரமாண பத்திரத்தை எப்படி ஏற்றார்கள் என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் தற்போது எழுப்பியுள்ளனர். இத்தனைக்கும் அப்போது ஜெயலலிதா உயிரோடு இருந்தாரா என்ற கேள்வி இருந்தது. அந்த சந்தேகம் ஆளும் அதிமுக அரசுக்கு இருப்பதால்தான் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளது.

 சின்னத்தை ஒதுக்க, கட்சி வேட்பாளர் என்று அங்கீகாரம் தருவதற்கான பிரமாண பத்திரத்தில் ஜெயலலிதா வைத்திருந்த கைரேகை குறித்து டாக்டர் பாலாஜியிடம் நேற்று விசாரணை நடைபெற்றது.  அப்போது விசாரணை ஆணைய நீதிபதி ஆறுமுகசாமி, ‘கைரேகை பதிவு செய்தபோது ஜெயலலிதா சுய நினைவுடன் இருந்தாரா, கைரேகை பதிவு செய்ததை நீங்கள் நேரில் பார்த்துதான் சான்றிதழ் கொடுத்தீர்களா, எத்தனை மணிக்கு கைரேகை பெறப்பட்டது, அப்போது யார் யார் உடன் இருந்தார்கள்’ என்று சரமாரியாக கேள்வி கேட்டுள்ளார். இந்த கேள்விகள் 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் போதும் எழுப்பப்பட்டன. எதிர்கட்சிகளின் கேள்விகளை கண்டுகொள்ளாத இந்திய தேர்தல் ஆணையம், ‘பிரமாண பத்திரம்  செல்லும்’ என்று அறிவித்தது. அப்போதே  அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது. அந்த ஆதரவு நடவடிக்கைகள் ஆர்கே நகர் இடைத்தேர்தலிலும் தொடர்கிறது. விஷால் மனுவில் போலி கையெழுத்து இருப்பதாக சொல்லும் தேர்தல் அதிகாரியோ,  சம்பந்தப்பட்ட தீபன், சுமதி, கார்த்திகேயன் என யாரும் இதுவரை விஷால் மீது போலீசில் புகார் செய்யவில்லை. தடய அறிவியல் சோதனைக்கு கூட பரிந்துரை செய்திருக்கலாம். தள்ளுபடி’ வேலையை சரியாக செய்ததுடன் நிறுத்திக் கொண்டுள்ளார் தேர்தல் அதிகாரி. மனுக்கள் பரிசீலனை நடந்துகொண்டிருக்கும்போதே  தங்கள் பெயர் போலியாக எழுதப்பட்ட விவரம் இந்த ்மூவருக்கும் எப்படி் தெரிந்தது. தள்ளுபடி பிரச்னை தீவிரமாக இருந்தபோது இந்த மூவரும் சொல்லி வைத்தார்போல் நேரில் வந்து நின்றது எப்படி என்ற கேள்விக்கு இதுவரை பதிலில்லை.

மனு தள்ளுபடியானதால் பிரபலமான  தீபன், சுமதி, கார்த்திகேயன் ஆகிய மூவரையும் பத்திரிகையாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. வீட்டில் கேட்டால் ஆள் இல்லை என்கிறார்கள். இதுவரை அவர்கள் எங்கு தங்கியிருக்கிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை. யார் அவர்களை ஒளித்து வைத்திருக்கிறார்கள் என்று தெரியாத நிலை இருக்கிறது. இந்நிலையில்தான் சம்பந்தப்பட்ட 3 பேரும் நேரில் வந்து தங்கள் கையெழுத்துதான் என்று கூறினால் விஷால் மனு மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் டெல்லியில் தெரிவித்துள்ளனர். ஆனால் சம்பந்தப்பட்ட 3 பேரையும் யார் ஒளித்து வைத்திருக்கிறார்கள் என்று தெரியாத நிலையில்தான் தேர்தல் ஆணையம் இப்படி சொல்லியிருப்பது மக்களிடையே சந்தேகத்தை அதிகரித்துள்ளது.  தொகுதி தேர்தல் அதிகாரிக்கான கையேட்டில்  விதி எண் 6ல் ‘வேட்பு மனுவில் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் அது வேட்பாளரின் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும். அதாவது வேட்பாளரின் தரப்பை சொல்ல வாய்ப்பளிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சிறு பிழைகளுக்கு கடுமை காட்டத்தேவையில்லை என்றும் இந்த விதியில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் வேட்பாளர் தரப்பு நியாயத்தை சொல்ல வாய்ப்பளிக்கவில்லை என்கிறார் விஷால்.

மேலும் இந்த கையேட்டின் விதி எண் 11ல் ‘ வேட்பு மனுவில் ஏதாவது பிரச்னைகள்  இருந்தால்,  வேட்பாளரின் கோரிக்கையை ஏற்று விசாரணையை அடுத்த நாளுக்கு ஒத்தி வைக்க வேண்டும்.  ஒத்தி வைக்கப்பட்ட நாள் விடுமுறை நாளாக இருந்தால் வேட்பு மனு திரும்ப பெறும் நாளில் பகல் 11 மணிக்குள் விசாரணையை முடித்து விட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  ஆனால் விஷாலின் மனுவை முதலில் ஏற்பதாக அறிவித்த தேர்தல் அதிகாரி,  வேட்பாளருக்கு எந்த வாய்ப்பையும் தராமல் அதே நாள் இரவில் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்படுவதாக அறித்தார். தனக்கான நடத்தை விதிகளை கூட தேர்தல் அதிகாரி கடைபிடிக்கவில்லை என்பது இந்த விவகாரத்தில் வெளிப்படையாக தெரிகிறது. மேலும் ‘‘விஷால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தன்னை முற்றுகையிட்டதால் வேறுவழியில்லாமல் அவரது மனு ஏற்கப்படுவதாக முதலில் தெரிவித்தேன்’’ என்று தேர்தல் அதிகாரி வேலுச்சாமி நேற்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்(1951) பிரிவு 36ல், ‘‘ வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யும் போது  பிரச்னைகள், கலகம் ஏதாவது ஏற்பட்டால் பரிசீலனையை அடுத்த நாளுக்கு தள்ளி வைக்கலாம்’ என்றும் சொல்லியிருக்கிறது. சட்டத்தை மதிக்காமல்  விஷால் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதால் மனுவை ஏற்பதாக கூறினேன் என்று தேர்தல் அதிகாரி கூறியிருப்பதை அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சிக்கின்றன.

ஆர்.கே.நகர் தொகுதியில் விஷால் களம் இறங்கினால், அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு பாதிப்பு ஏற்படும். காரணம் அவரும் தெலுங்குகாரர் என்பதால் தொகுதியில் உள்ள தெலுங்கு மொழிக்காரர்களின் வாக்குகள் பிரிந்துவிடுமோ என்று அதிமுகவினருக்கு கலக்கம் ஏற்பட்டது. அதனால் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்ற அச்சத்தினால்தான் ஆர்கே நகரில் விஷாலின் மனு தள்ளுபடி செய்யப்படக் காரணம் என்றும் தொகுதியில் பரவலாக பேசப்படுகிறது. ஆனால் தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பான தேர்தல் ஆணையம், தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்தும் என்று மக்கள் கருதும் சூழ்நிலையில், தேர்தல் விதிகளை கூட பின்பற்றாமல் இயந்திரத்தனமாக செயல்பட்டிருப்பது மக்களிடையே சந்தேகத்தையும், கேள்வியையும் எழுப்பியுள்ளது.

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் மறுபரிசீலனையில் ஏற்கப்பட்ட வரலாறு
தேர்தலில் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டு மறுபரிசீலனையில் ஏற்கப்பட்ட வரலாறு ஏற்கனவே உள்ளது. 2009ம் ஆண்டு பர்கூர் இடைத்தேர்தலில் சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தை சேர்ந்த சிவ இளங்கோ என்பவரின் வேட்புமனு, திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் அங்குள்ள வி.ஏஓவின் சான்றிதழ் கடிதத்தை இணைக்கவில்லை என்று தள்ளுபடி செய்யப்பட்டது. அதேபோல  தேமுதிக வேட்பாளர் சந்திரனை முன்மொழிந்த 10 பேரின் வாக்காளர் எண் சரியாக இல்லை என்றும், அவரது கட்சித்தலைவர் அளிக்கும் படிவம் ஏ, பி இணைக்கவில்லை என்றும் தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் நள்ளிரவில் அழைத்து மனுவை தேர்தல் அதிகாரிகள் மறுபரிசீலனைக்கு எடுத்துக் கொண்டனர். அப்போது வேறு மாவட்டத்திலிருந்து போட்டியிடுபவர், வி.ஏ.ஓ. சான்றிதழ் இல்லாவிட்டால், வாக்காளர் பட்டியலில் அவர் பெயர் உள்ள பகுதியை இணைத்திருந்தால் போதும் என்று கூறி சிவ இளங்கோ மனுவையும்,  தேமுதிக வேட்பாளர் சந்திரனை முன்மொழிந்த 10 பேரின் வாக்காளர் எண்கள் மாறியிருப்பதை சரிசெய்து ஏற்பதாகவும், படிவம் ஏ,பி சமர்ப்பிக்காததால் சுயேச்சை வேட்பாளர் என அங்கீகரித்தனர். இதன்மூலம் வேட்புமனுவை மறுபரிசீலனை செய்த முன்னுதாரணம் உள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sabarimala11

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

  • pothumakkal_siramam1

    வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு : பொதுமக்கள் கடும் சிரமம்

  • dubai_hospitalll11

    துபாயில் ஒட்டகத்திற்கு மட்டும் சிகிச்சை அளிக்கும் வினோத மருத்துவமனை

  • Astronauts

    சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள்

  • 15-12-2017

    15-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்