SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடலில் மாயமானவர்களை கண்டுபிடிக்க கோரி 7 ஆயிரம் மீனவர்கள் ரயில் மறியல்

2017-12-08@ 00:04:47

கருங்கல்:  ஓகி புயல் காரணமாக மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, குழித்துறையில் நேற்று 7 ஆயிரம் மீனவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்தில்   ஓகி புயல் காரணமாக ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற 1000த்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் கதி தெரியாமல் உள்ளது. கர்நாடகம், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் குமரி மீனவர்கள் கரை திரும்பியதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை எத்தனைபேர் திரும்பி உள்ளனர். அவர்களின் நிலை என்ன? என்பது பற்றி தமிழக அரசு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இதனால் கடந்த 1 வாரத்துக்கும் மேலாக குமரி மாவட்ட மீனவ கிராமங்களில் பதற்றமான நிலை நீடித்து வருகிறது.
இந்நிலையில் மாயமான மீனவர்களை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும். பலியான மீனவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று குமரி மாவட்டம் தூத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட இரையுமன்துறை, பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை, இரவிபுத்தன்துறை, வள்ளவிளை, மார்த்தாண்டன் துறை, நீரோடி ஆகிய  8 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் ஒருங்கிணைந்து ரயில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டனர்.

இதையடுத்து நேற்று காலை முதல் குழித்துறை ரயில் நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். காலை 9.30 மணியளவில் 8 கிராமங்களை சேர்ந்த சுமார் 7 ஆயிரம் மீனவர்கள், 15 கி.மீ. தூரம் ஊர்வலமாக வந்து குழித்துறை ரயில் நிலையத்துக்குள் நுழைந்தனர். அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசாரால், மீனவர்களை தடுத்து நிறுத்த முடியவில்லை. ரயில் நிலையத்துக்குள் வந்த மீனவர்கள் அனைவரும் தண்டவாளத்தில் அமர்ந்து  பகல் 11.30 மணியளவில் ரயில் மறியல் போராட்டத்தை தொடங்கினர். பங்கு தந்தைகள், பங்கு பேரவைகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தை தொடர்ந்து ரயில் நிலையத்தை சுற்றி ஆயிரக்கணக்கான போலீசாரும் வரவழைக்கப்பட்டனர். தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்சுகளும் வரவழைக்கப்பட்டன. நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சராட்கர் தலைமையில் வந்த போலீஸ் அதிகாரிகள்  நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

இரவு 7 மணியளவில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், எஸ்பி துரை ஆகியோர் ரயில் நிலையம் சென்று மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், போராட்டத்தை கைவிடமாட்டோம் எனக்கூறி அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. மீனவர்களின் இந்த போராட்டம் காரணமாக நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது.  குழித்துறை ரயில் நிலையத்தை சுற்றி இருந்த கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

பெண்கள் மயக்கம்
ரயில் மறியல் போராட்டத்தில் கைக்குழந்தைகளுடன் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். சுமார் 15 கி.மீ. தூரம் நடந்து வந்ததால் பெண்கள் பலர் ரயில் நிலையத்தில் மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

6 மாவட்ட போலீஸ் குவிப்பு
நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்தும் போலீசார்  பாதுகாப்புக்காக வந்து இருந்தனர்.

கொட்டும் மழையிலும் கலையாத கூட்டம்
மார்த்தாண்டம், குழித்துறை பகுதிகளில் நேற்று மதியம் மழை பெய்தது. ஆனால் மழையை பொருட்படுத்தாமல் போராட்டக்காரர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து இருந்தனர். நள்ளிரவு வரை போராட்டம் நீடித்ததால் குழித்துறையில் பதற்றம் நிலவுகிறது.

200 மீனவர்கள் பலியானதாக அச்சம்

தூத்தூர் வட்டார முதன்மை பங்கு பணியாளர் ஆண்ட்ரூஸ் கூறுகையில், மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் 1000க்கும் மேற்பட்டோர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. 650க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் மாயமாகி உள்ளன. 200 மீனவர்கள் இறந்திருப்பார்கள் என அஞ்சுகிறோம். மாயமான மீனவர்களையும் இறந்த மீனவர்களாக அறிவித்து கேரள அரசு அறிவித்துள்ளது போல் ஒவ்வொரு மீனவருக்கும் ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-10-2018

  24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்

 • FoamFightScotland

  முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

 • SALTMarchRashtrapti

  ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

 • NagoroJapanVillage

  ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

 • FallFoilageWorld

  உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்