SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆர்.கே.நகர் தொகுதியில் இறுதிப் பட்டியல் வெளியீடு 59 வேட்பாளர்கள் போட்டி

2017-12-08@ 00:04:11

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதிஇறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், 59 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. டிடிவி.தினகரனுக்கு இந்த முறை தொப்பி சின்னம் மறுக்கப்பட்டுள்ளது.  ஆர்.கே. நகர் தொகுதியில் வருகிற 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.  கடந்த மாதம் 27ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி கடந்த 4ம் தேதியுடன் முடிவடைந்தது. இதில் மொத்தம் 131 பேர், 145 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனுக்கள் மீது 5ம் தேதி பரிசீலனை நடந்தது. இதில் 72 பேர் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, நடிகர் விஷால், எம்ஜிஆர் அண்ணன் மகன் சந்திரன் உள்ளிட்ட 73 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்பு மனு திரும்ப பெற நேற்று கடைசி நாள். மொத்தம் 72 பேரில் 13 பேர் வேட்பு மனுவை திரும்ப பெற்றனர். மீதமுள்ள 59 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து அவர்களுக்கு சின்னம் வழங்கும் பணி நேற்று மாலை 4 மணியளவில் தொடங்கியது. அப்போது, ‘‘அதிமுக வேட்பாளர் மதுசூதனன் தாக்கல் செய்த பி படிவத்தில் அதிமுக பொதுச்செயலாளர் கையொப்பம் இல்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் கையெழுத்து மட்டுமே உள்ளது. எனவே, அவருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது’’ என்று டிடிவி தினகரன் தரப்பில் தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் அதிகாரி ஒதுக்கினார். தொப்பி சின்னத்தை பெறுவதற்காக தினகரன், அவரது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, வெற்றிவேல் ஆகியோர் தேர்தல் அலுவலகத்தில் காத்திருந்தனர். தொப்பி சின்னத்தை கேட்டு சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன் உள்பட 29 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். அதே போல் அங்கீகரிக்கப்படாத கட்சியைச் சேர்ந்த 3 வேட்பாளர்கள் தொப்பி சின்னத்தை கேட்டுள்ளனர். எனவே குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், கொங்கு நாடு மக்கள் கட்சியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டது.

தொப்பியை தவிர தினகரன் கேட்ட விசில், கிரிக்கெட் மட்டை உள்ளிட்ட சின்னங்கள் கூட வேறு வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டது. கேசவலு என்ற சுயேச்சைக்கு விசில் சின்னம் வழங்கப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல், ‘‘ வேண்டுமென்றே நாங்கள் கேட்ட சின்னத்தை ஒதுக்க மறுக்கிறீர்கள். நீங்கள் ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறீர்கள்’’ என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, தேர்தல் அலுவலர் வேலுச்சாமி, ‘‘சுயேச்சை வேட்பாளர்கள் கேட்ட சின்னத்தை முன்னுரிமை அடிப்படையில்தான் வழங்குகிறோம். இதில், நாங்கள் எந்த பாரபட்சமும் காட்டவில்லை’’ என்றார். ஆனால் டிடிவி ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதை தொடர்ந்து போலீசார் கூடியிருந்தவர்களை அப்புறப்படுத்தினர். அதன்பிறகு அப்பகுதியில் சிறிது நேரம் நிலவி வந்த பரபரப்பு அடங்கியது. இந்நிலையில், டிடிவி.தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் அதிகாரி அறிவித்தார். இதே போன்று அங்கீகரிக்கப்படாத கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கும் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நேற்று இரவு 7.30 மணி வரை சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி நடந்ததால், சுயேச்சை வேட்பாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தேர்தல் அலுவலகம் முன்பு காத்திருந்தனர். அங்கு தொடர்ந்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பிறகு தேர்தல் அலுவலகத்திற்கு வெளியே வந்த டிடிவி.தினகரன் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஏற்கனவே, எந்த சின்னம் கொடுத்தாலும் போட்டியிடுவேன் என்று சொல்லியிருந்தேன். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். எனது எதிரிகள், துரோகிகள், பிளட் பிரசரை ஏற்றியதால், நான் பிரஷர் குக்கரில் போட்டியிடுகிறேன். இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன்’ என்றார். ஆர்.கே. நகர் தொகுதி இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. நேற்று காலை அதிமுக தேர்தல் பணிமனையை தொடங்கி வைத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். அதேபோன்று, திமுக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற 11ம் தேதி முதல் பிரசாரத்தை தொடங்குகிறார். ஆர்.கே.நகர் தேர்தல் பாதுகாப்புக்காக வருகிற 10ம் தேதி துணை ராணுவ வீரர்கள் வருகிறார்கள்.

சுயேச்சை வேட்பாளர் மதுசூதனனுக்கு மின்கம்பம்
கடந்த முறை அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் இரட்டை மின்கம்பத்தில் போட்டியிட்டார். இந்த முறை அவரது பெயரில் சுயேச்சை வேட்பாளர் மதுசூதனன் என்பவருக்கு இரட்டை மின்கம்பம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்கே நகர் தொகுதிக்கு முதலில் ஏப்ரல் 12ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
* 89 கோடி பணப்பட்டுவாடா ஆவணங்கள் சிக்கியதால் ஏப்ரல் 9 நள்ளிரவு தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
* தற்போது மீண்டும் டிசம்பர் 21ல் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 131 வேட்பாளர்கள் சார்பில் 145 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
* இறுதியாக 59 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நடிகர் விஷால், தீபா உள்ளிட்ட 73 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • sabarimala11

  சபரிமலை ஐயப்பன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

 • pothumakkal_siramam1

  வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு : பொதுமக்கள் கடும் சிரமம்

 • dubai_hospitalll11

  துபாயில் ஒட்டகத்திற்கு மட்டும் சிகிச்சை அளிக்கும் வினோத மருத்துவமனை

 • Astronauts

  சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள்

 • 15-12-2017

  15-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்