SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் இடைத்தேர்தலுக்காக கைரேகை பதிவு செய்யும்போது ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்தாரா?

2017-12-08@ 00:04:07

சென்னை: மூன்று தொகுதி இடைத்தேர்தலுக்காக கைரேகை பதிவு செய்யும் போது ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்தாரா என அரசு டாக்டரிடம் விசாரணை ஆணைய நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினார். இதை தொடர்ந்து அரசு டாக்டர் பாலாஜியை மீண்டும் 27ம் தேதி ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் தனது விசாரணையை தொடங்கினார். இந்த கமிஷனில் திமுக மருத்துவர் சரவணன், ஜெ.தீபா, அவரது கணவர் மாதவன், முன்னாள் எம்எல்ஏ ஆனூர் ஜெகதீசன் உள்ளிட்ட பலர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். மேலும், 60க்கும் மேற்பட்டோர் புகார் மனுவும் ஆணையத்திற்கு அளித்துள்ளனர்.

இதை தொடர்ந்து திமுக மருத்துவர் அணியை சேர்ந்த சரவணனிடம் நவம்பர் 22, 23ம் தேதி நீதிபதி விசாரணை நடத்தினார். அப்போது, ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சைக்கும், மருத்துவமனை அளித்துள்ள அறிக்கைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளதாக ஆதாரத்துடன் கூறியிருந்தார். தொடர்ந்து ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது தமிழக அரசு சார்பில் டாக்டர் குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்த டாக்டர்கள் குழுவிடம் விசாரணை நடத்த கமிஷன் முடிவு செய்தது.

டாக்டர்கள் குழுவில் இடம்பெற்றிருந்த சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் நாராயண பாபு, முன்னாள் மருத்துவக்கல்வி இயக்குநர் டாக்டர் விமலா ஆகியோரிடம் கடந்த நவம்பர் 23ம் தேதி நீதிபதி விசாரணை நடத்தினார். இந்நிலையில், டிசம்பர் 5ம் தேதி சென்னை மருத்துவ கல்லூரி மயக்கவியல் துறை பேராசிரியர் கலா, உட்கொள்ளும் மருந்தியலுக்கான பிரிவு உதவிப் பேராசிரியர் முத்துச்செல்வன் ஆகியோரிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தினார். தொடர்ந்து நேற்று முன்தினம் அரசு டாக்டர் டிட்டோ, தீபா கணவர் மாதவனிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். இதில், தீபா கணவர் மாதவனை வரும் 15ம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே, அரசு டாக்டரும், உடல் உறுப்பு தானம் உறுப்பினர் செயலாளருமான பாலாஜி, நீரிழிவு நோய் நிபுணர் தர்மராஜன் ஆகியோர் விசாரணை கமிஷன் முன்பு நேற்று காலை 10.30 மணியளவில் ஆஜராகினர். இரண்டு டாக்டர்களையும் தனித்தனியாக அழைத்து நீதிபதி விசாரணை நடத்தினார்.

முதலில், நீரிழிவு நோய் நிபுணர் தர்மராஜனிடம், ‘‘ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் என்னென்ன சிகிச்சை வழங்கப்பட்டது, ஜெயலலிதாவுக்கு எந்தெந்த டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். எந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், சிகிச்சையின்போது அவருக்கு என்ன மாதிரியான மருந்துகள் அளிக்கப்பட்டது, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சர்க்கரை அளவு என்ன? என்ன சாப்பாடு உட்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டதா’’ என பல்வேறு கேள்விகளை நீதிபதி எழுப்பினார். இதற்கு டாக்டர் தர்மராஜன் விளக்கமளித்தார்.  

ெதாடர்ந்து டாக்டர் பாலாஜியிடம், ‘‘திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ெதாகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதற்காக, ஜெயலலிதா கைரேகை பதிவு செய்யும் போது அவர் சுயநினைவுடன் இருந்தாரா, கைரேகை பெற்ற போது நீங்கள் நேரில் பார்த்து தான் சான்றிதழ் கொடுத்தீர்களா, எத்தனை மணிக்கு மருத்துவமனைக்கு சென்றீர்கள், கைரேகை பெறும் போது உங்களுடன் யார் இருந்தார்கள்?’’ என்பது உட்பட பல்வேறு கேள்விகளை நீதிபதி சரமாரியாக எழுப்பினார். அதற்கு டாக்டர் பாலாஜி உரிய விளக்கம் அளித்தார். இருவரும் அளித்த வாக்குமூலத்தை நீதிபதி பதிவு செய்து கொண்டார். விசாரணை முடிந்து தர்மராஜன் பிற்பகல் 12 மணிக்கு புறப்பட்டு சென்றார். அதை தொடர்ந்து பிற்பகல் 12 மணி முதல் 1.45 மணி வரை டாக்டர் பாலாஜியிடம் விசாரணை நடந்தது. அவர் விசாரணை முடிந்து பிற்பகல் 1.50 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

விசாரணை கமிஷனை 6 மாதம் நீட்டித்து கேட்க முடிவு
ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக நடந்து வரும் விசாரணை ஆணையத்தின் காலக்கெடு வரும் டிசம்பர் 25ம் தேதியுடன் முடிவடைகிறது. இதன் காரணமாக 6 மாதம் வரை விசாரணை ஆணையத்தின் காலக்கெடுவை நீட்டிக்க கோரி தமிழக அரசுக்கு கடிதம் எழுத முடிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை ஆணையத்திற்கு கூடுதல் அதிகாரம் கேட்டு கடந்த அக்டோபர் முதல்வாரத்தில் தமிழக அரசுக்கு விசாரணை ஆணையம் கடிதம் எழுதியது. ஆனால், ஆணையத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால், பலரை விசாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆணையத்திற்கு கூடுதல் அதிகாரம் கொடுத்தால் மட்டும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உட்பட பலரை விசாரிக்க முடியும். இதனால், அரசின் பதிலுக்காக ஆணையம் காத்திருக்கிறது.

ராமமோகன ராவ், ஜெயலலிதா ஆலோசகருக்கு சம்மன்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக நடந்து வரும் விசாரணை கமிஷன் முன்பு 12ம் தேதி அக்குபஞ்சர் டாக்டர் சங்கர், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவிடம் வரும் 13ம் தேதியும், தீபக் 14ம் தேதியும், தீபா கணவர் மாதவன் 15ம் தேதியும், அரசு டாக்டர் மகேந்திரன் 19ம் தேதியும், ஜெயலலிதா ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், அரசு டாக்டர் ஜோசப், 21ம் தேதி ராம  மோகன ராவ் ஆகியோர் ஆஜராக நீதிபதி சம்மன் அனுப்பியுள்ளார். 

27ல் ஆஜராக உத்தரவு
டாக்டர் பாலாஜி கூறும் போது, ‘ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை பற்றி என்னென்ன கேள்விகள் கேட்டார்களோ அதற்கு பதில் அளித்தேன். ஜெயலலிதா சிகிச்சையின் போது என்னென்ன உணவு உட்கொண்டார், ஜெயலலிதாவின் கைரேகை பதிவு செய்யப்பட்ட கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளேன். மீண்டும் 27ம் தேதி விசாரணையில் ஆஜராக இருக்கிறேன்’ என்றார்.

27 பேர் பிரமாண பத்திரம் தாக்கல்
ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆணையத்தில் இதுவரை 27 பேர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். 120க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-07-2018

    22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்