SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதல்முறையாக அரசு அதிகாரிகளுடன் தமிழக கவர்னர் ஆலோசனை

2017-11-15@ 00:55:33

* நிர்வாகத்தில் தலையிடுவதா-எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
* ஆரோக்கியமானது தான்-அமைச்சர்கள் விளக்கம்

கோவை: தமிழகத்தில் முதல் முறையாக கோவையில் அரசு அதிகாரிகளுடன் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று ஆலோசனை கூட்டம்  நடத்தினார். இது அரசு நிர்வாகத்தில் கவர்னர் தலையிடுவதாகும் என்று எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால், இது  ஆரோக்கியமானதுதான் என்று அமைச்சர்கள் விளக்கம் அளித்துள்ளனர். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று காலை கோவை வந்தார்.  பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார். மாலையில், ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகையில் மாவட்ட உயர்  அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், கோவை மாவட்ட கலெக்டர் ஹரிகரன், மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், எஸ்.பி. மூர்த்தி,  மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி உள்ளிட்ட பல்வேறு துறை உயரதிகாரிகள்  கலந்துகொண்டனர்.

ஒவ்வொரு துறை அதிகாரிகளுடனும் தனித்தனியாக கவர்னர் ஆலோசனை நடத்தினார். ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி  பணிகள், கிடப்பில் உள்ள திட்டங்கள் பற்றி கேட்டறிந்தார். குறிப்பாக, கோவை மாநகர் மற்றும் மாவட்ட காவல்துறையில் நிலுவையில் உள்ள  வழக்குகள், குற்ற வழக்குகளில் இன்னும் மீட்கப்பட வேண்டிய பொருட்கள், தலைமறைவு குற்றவாளிகளின் எண்ணிக்கை, பிடிவாரன்ட் நிலுவை  உள்ளிட்ட பல்வேறு தகவல்களை கேட்டு பெற்றார். பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் ரேஷன் அரிசி கடத்தல் எந்த அளவு உள்ளது. இவ்வழக்கில்  பிடிபட்டுள்ள குற்றவாளிகள் எத்தனை பேர், குண்டர் சட்டத்தில் கைதான நபர்கள் எத்தனை பேர், பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி எவ்வளவு  என்றும் பல்வேறு தகவல்களை மாவட்ட கலெக்டர் ஹரிகரனிடம் கேட்டுப்பெற்றார். இதுபோல் அனைத்து துறை அதிகாரிகளிடமும் தனித்தனியாக  புள்ளிவிவரங்களை ேகட்டு பெற்றார்.

கவர்னரின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் பல அதிகாரிகள் திணறினர். மாலை 3.30 மணிக்கு துவங்கிய இக்கூட்டம் மாலை 6.30 மணி  வரை நடந்தது. இதன்பிறகு, அரசியல்கட்சி பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகளுடன் கவர்னர் தனியாக ஆலோசனை நடத்தினார்.  இதில், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்.பி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், தமிழக பா.ஜ பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன்  உள்ளிட்டோர் பங்கேற்றனர். எதிர்க்கட்சியினர் யாரும் பங்கேற்கவில்லை. கவர்னரின் முதன்மை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, துணை செயலாளர்  மோகன் ஆகியோரும் பங்கேற்றனர். இரவில், கவர்னர், ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

வழக்கமாக, இதுபோன்ற ஆய்வு கூட்டங்களை (ரிவியூ மீட்டிங்) அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள், ஆண்டுக்கு ஒருமுறை நடத்துவது  வழக்கம். இதில், கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று, பதில் அளிப்பார்கள். ஆனால், தமிழக அரசியல் வரலாற்றில்  முதல்முறையாக, கவர்னர் தன்னிச்சையாக அனைத்து துறை அதிகாரிகளை அழைத்து, ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். கவர்னர் ஆட்சி  இல்லாதபோது முதல்முறையாக கவர்னர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்திருப்பது எங்களுக்கு வியப்பாக  உள்ளது என அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். புதுச்சேரிபோல் தமிழகத்திலும், ஆட்சி நிர்வாகத்தில்,  கவர்னர் தலையீடு துவங்கிவிட்டது என சமூக ஆர்வலர்கள் பலர் கருத்து தெரிவித்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர், அரசு நிர்வாகத்தில் கவர்னர்  தலையீடு ேமாசமான முன்னுதாரணமாகிவிடும். கவர்னரின் இந்த செயல் அவர் வகிக்கும் பதவிக்கு உகந்தது அல்ல, வரம்பு மீறிய செயல். பாஜகவின்  கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட கைப்பாவையாகத்தான் மாநில அரசு செயல்படுகிறது என்பதை மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுவதாக இந்த செயல்  அமைந்திருக்கிறது என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில், கவர்னர் நடத்திய இந்த ஆய்வு கூட்டம் ஆரோக்கியமானதே. என்னை கூட்டத்தில் புறக்கணித்ததாக  கூறுவது தவறு. நான் காலையிலேயே கவர்னரை சந்தித்து பேசினேன். தற்போதும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளேன்’’என்றார். உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறுகையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கோவையில் நிர்வாகம் தொடர்பாக நடத்தும் ஆய்வு, மாநில  சுயாட்சியை பாதிக்கின்ற வகையில் இருக்காது. ஆளுநர் தனது முடிவின்படி கோவையில் ஆய்வு செய்கிறார். ஆளுநரின் ஆய்வு, முதலமைச்சருடன்  இணைந்து, மாநிலத்தை வளர்ச்சிக்கு கொண்டு செல்லும். மத்திய அரசுடன், மாநில அரசு இணைந்து செயல்பட்டால்தான், மாநில தேவைகளை பூர்த்தி  செய்ய முடியும் என்று தெரிவித்தார்.

அதிமுக எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் கூறுகையில், வடகிழக்கு மாநிலத்தில் கவர்னராக இருந்த போது பன்வாரிலால், பல்வேறு துறை அரசு  அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தியுள்ளார். அதுபோலவே தமிழகத்திலும், குறிப்பாக கோவையில் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். இது,  வரவேற்கத்தக்கது’என்றார்.   பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கூறும்போது, அரசு  திட்டங்கள் பற்றி அரசு அதிகாரிகளிடம்  கவர்னர் கேட்டறிவது வரவேற்கத்தக்கது.  இதில் எந்த தவறும் இல்லை’’ என்று  கூறினார்.

கருப்புக்கொடியுடன் 6 பேர் கைது: கவர்னர் ஆலோசனை கூட்டம் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர்  கு.ராமகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியினர், நேற்று மாலை கவர்னருக்கு கருப்புக்கொடி காட்ட முயன்றனர். ஆனால், போலீசார் தடுத்து நிறுத்தி,  கு.ராமகிருஷ்ணன் உள்பட 6 பேரை கைது செய்தனர். கவர்னரின் இன்றைய நிகழ்ச்சி: இன்று காலை 7 மணிக்கு கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில்,  தூய்மை இந்தியா திட்டப்பணியில் பங்கேற்கிறார். பின்னர், காலை 9 மணிக்கு கோவையில் உள்ள ஒரு ஓட்டலில் குறு, சிறு தொழில்  முனைவோருடன் ஆலோசனை நடத்துகிறார். இதன்பிறகு, காலை 10.30 மணிக்கு திருப்பூர் செல்கிறார். அங்கு, விவசாய அமைப்பு சார்பில் நடைபெறும்  மரம் நடும் விழாவில் பங்கேற்கிறார். மதியம் 1 மணிக்கு கோவை திரும்புகிறார். பிற்பகல் 3.45 மணிக்கு கோவையில் இருந்து விமானம் மூலம்  மீண்டும் சென்னை திரும்புகிறார்.

ஆளும்கட்சி எம்.எல்.ஏக்கள் புறக்கணிப்பு

தமிழக  கவர்னர் பன்வாரிலால் புரோகித், கோவை ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர்  மாளிகையில், அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து,  அரசியல் கட்சி  பிரமுகர்களுடன் நேற்று மாலை தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில், அதிமுக, பாஜக, மதிமுக, இந்திய தொழில்  வர்த்தக சபை நிர்வாகிகள் உள்ளிட்டோர்  பங்கேற்றனர். ஆனால், கோவை மாவட்டத்தில் உள்ள 9 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் அமைச்சர் வேலுமணி  தவிர, மீதமுள்ள 8 பேரும் பங்கேற்கவில்லை. கூண்டோடு புறக்கணித்து விட்டனர். அவர்களுக்கு தகவல்  கொடுக்கப்பட்டு, நேரமும்  ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள்  பங்கேற்கவில்லை.

பலத்த பாதுகாப்பு


இந்த இரு ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு, கவர்னர்,  இரவு 7 மணிக்கு பீளமேடு சுகுணா திருமண மண்டபம் அருகேயுள்ள ஆஞ்சநேயர்  கோயிலுக்கு  சென்றார். சுமார் 15 நிமிடம் சாமி தரிசனம் செய்தார். பின்னர்,  மீண்டும் ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகைக்கு திரும்பினார். இரவில்,  அங்கு  ஓய்வு எடுத்தார். இதையொட்டி, விருந்தினர் மாளிகையில் பலத்த போலீஸ்  பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-10-2018

  21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • dussehraa_11

  நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

 • 20-10-2018

  20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • tirupathivavacha

  திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

 • kulasaidasaraeight

  வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்