SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோழி முட்டையை உடைத்த அதிகாரிக்கு உயர் பதவி கிடைத்த கதையை சொல்கிறார்: wiki யானந்தா

2020-06-03@ 00:32:20

‘‘புதுச்சேரி அரசியல் களம் சூடு பறக்குது போல...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரியில் தானாக தாமரை மலராது. அதை செயற்கையாகதான் மலர வைக்க முடியும்னு புதுச்சேரி தாமரைகாரங்க ஒரு முடிவுக்கு வந்துட்டாங்களாம். வேறு ஒருவருக்கு முட்டு கொடுத்து கைகட்டி நிற்க தாமரை தரப்புக்கு விருப்பமில்லையாம். இதனால 12 மக்கள் பிரதிநிதிகளை தூக்க முடிவு செய்திருக்காங்க. ஒரே கட்சியில் இருந்து இழுத்தால் பெயர் கெட்டுப்போய் விடும் என்பதால் கலவை சாதம் போல பல்வேறு கட்சியில் 12 பேருக்கு வலை வீசி  இருக்காங்களாம்... புது அரசு கலவையான கட்சிகளின் கூட்டு என்பதால் தாமரைக்கு பிரச்னை வராது என்று கணக்கு போட்டு மேலிடத்துக்கு தகவலையும் அனுப்பி இருக்காங்களாம்.

இதனை உளவுத்துறை மூலம் தெரிந்து கொண்ட முன்னவர் தன்னோட எம்எல்ஏக்களை ரகசியமாக கண்காணிக்க உத்தரவு போட்டிருக்கிறாராம். எப்போது எது வேண்டுமானால் நடக்கலாம் என்பதால் கடந்த சில நாட்களாக இதே பேச்சுதான் புதுச்சேரியில் பரவிகிடக்கிறதாம். எதிர்காலத்தில் தமிழகத்தில் களம் அமைக்க புதுச்சேரியின் ஆட்டத்தை துவங்க தேசிய தலைமையும் பச்சைக்கொடி காட்டிவிட்டதாம். புதுச்சேரி தாமரை குளத்தில் குதிக்கப்போகும் மக்கள் பிரதிநிதி யார் என்பது விரைவில் தெரியும் என்கிறார்கள் குஷாலாக தாமரை தரப்பினர்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘நெல் பிடுங்கிற துறையில உள்ள பிஏவின் அட்டகாசம் தாங்க முடியலையாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘விவசாய துறையை கவனிக்கும் அமைச்சரின் நிழலின் ஆட்டம் எல்லை மீறி போகுதாம். அதிலும் டெண்டர், டிரான்ஸ்பர் உள்ளிட்டவற்றில் நிழலின் அனுமதியின்றி அதிகாரிகள் எதுவும் செய்ய மவுனம் காக்கிறாங்களாம். நெல்லை, தூத்துக்குடி, குமரி, விருதுநகர், தென்காசி ஆகிய 5 மாவட்டங்களுக்கான வேளாண் விற்பனைத்துறை ‘உதவி பொறியாளர்’ பணியிட அலுவலகம் விருதுநகரில் இருக்காம். இந்த 5 மாவட்டங்களிலும் பல்வேறு கட்டுமான பணிகள் தற்போது நடக்கவுள்ள நிலையில், இந்த உதவி பொறியாளர் பணியிடத்திற்கு மாறுதல் வாங்கி வர பலத்த போட்டி காணப்படுகிறதாம். நிழலின் ஆசிபெற்ற ‘பவர்’ மிக்க ஒரு பொறியாளர், நெல்லை உதவி பொறியாளர் பணியிடத்தை பெறுவதற்கு ஒற்றைக்காலில் தவம் இருக்கிறார். அவர் மீது ஏற்கனவே செக் மோசடி உள்ளிட்ட வழக்குகள் மதுரை மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. பினாமி பெயரில் பல கட்டுமான நிறுவனங்களை வைத்து டெண்டரையும் அவரே எடுப்பதால் துறையினர் கலக்கத்தில் உள்ளனர். இப்போது நிழலின் உத்தரவு காரணத்தால், அந்த ‘பவர்’ அதிகாரி டிரான்ஸ்பர் ஆகி கல்லா கட்ட தயாராக உள்ளாராம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘முட்டையில் கோட்டை விட்டு பல கோடி நஷ்டம் ஏற்படுத்தியவருக்கு பதவி உயர்வாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காட்டுப்பாக்கத்தில் அரசு கோழிப்பண்ணை இருக்கு. இங்கிருந்து ஒவ்வொரு மாசமும் 2 கோடி முட்டைகள் வரை பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் ஒரு அதிகாரி பொறுப்பேற்றதும் தனியாருக்கு சாதகமாக இருக்கும் வகையில் சில ஆண்டுகளாக உற்பத்தியானாலும் அது விற்க முடியாத அளவுக்கு உடைந்துபோனதாம். இதனால அரசுக்கு பல கோடி நஷ்டமாம். அதற்கு அங்கு பணியாற்றிய மருத்துவர் யாருடன் ‘டைஅப்’ வைத்திருந்தாருன்னு ரகசியமாக விசாரணை நடக்குதாம்.

அரசு விதிப்படி நஷ்டத்துக்கு காரணமான அந்த மருத்துவர் மீது அபராதம், துறை ரீதியான நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். முட்டையில் காசு பார்த்த அதிகாரி அதை கரன்சியாக மாற்றி தன் சொந்தக்காரரான ஆளுங்கட்சி பிரமுகருக்கு கொடுத்து நஷ்டம் குறித்த விசாரணையை முடக்கிட்டாராம். அதற்கு கைமாறாக தான் நஷ்டம் ஏற்படுத்திய மருத்துவருக்கு பதவி உயர்வு கொடுத்து இருக்காங்க. இது சக கால்நடை மருத்துவர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பறந்த புகார்களை துறையின் முக்கிய அதிகாரி தூசு தட்டி பைலை எடுத்துட்டு வர்றாராம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஆடுன காலும்... பணம் பார்த்த கையும் சும்மா இருக்குமா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கொரோனாவால தலைமைச் செயலகமே குறைவான பணியாளர்கள் வருகையால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும் ஓய்வு பெற்ற ஒருவர் மட்டும் சத்தமில்லாம தினமும் வந்துட்டு காரியத்தை கச்சிதமாக முடிச்சுட்டு போகிறாராம். பொதுப்பணித்துறையில் கூடுதல் செயலாளராக ஓய்வு பெற்றவர் ஞானத்தின் பெயரை கொண்ட அவர் வேளாண்மைத் துறையில் இருந்தவராம். கோப்புகளை நினைத்தபடி கையாள்வதற்கு ‘காசு’ பார்த்த இவர் ஊர்ஊராக சுற்றுப்பயணம் செல்வார். அந்த ஊர்களில் இருக்கும் வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் கையில் பணத்தோடு புதிதாக காஸ்ட்லி பேண்ட் சர்ட் எடுத்து தரக்கோரி, கல்லா கட்டி வருவார்.

தொடர் புகார்கள் வந்ததால் மேலிடத்தில் கையில் காலில் விழுந்து  பொதுப்பணித்துறையில் பதவி பெற்று 2 ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றார். தற்போது, தன்னுடன் பணியாற்றிய பிரிவு அலுவலர்,  இணைச் செயலாளர் ஆகியோரை சந்தித்து வேளாண்மை துறையில் புகார்களுக்கு ஆளாகிய அதிகாரிகள் பைல்களை அவர்களுக்கு சாதகமாக முடிக்கும் தரகு வேலையில் ஈடுபட்டு வருகிறார். காலையில், ஆதம்பாக்கத்தில் இருந்து வரும் இவர், முதல் பஸ்சில் இடம் பிடித்து  கோட்டைக்கு வந்துவிடுகிறார். பகல் முழுவதும் வேளாண்மைத் துறையில் இந்த நெருக்கடி காலத்தை பயன்படுத்தி நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கை கோப்புகளை பணம் வாங்கிக்கொண்டு நகர்த்தி வருகிறாராம்... இந்த ஊரடங்கு காலத்தில் மட்டும் பல லட்சத்தை லஞ்சமாக குவித்துவிட்டாராம்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்