SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முடியவில்லை கடமை

2020-06-02@ 07:55:53

டிஜிட்டல் உலகத்திற்கு கொரோனா வைரஸ் சிம்ம சொப்பனமாக விளங்குகிறது. ஆராய்ச்சியாளர்களின் கணிப்புகளை தாண்டி கொரோனாவின் கொடிய ஆட்டம் அரங்கேறி வருகிறது. இந்தியாவில் ஊரடங்கால் ஆரம்பத்தில் கொரோனா கட்டுக்குள் இருந்தது. தற்போது ஊரடங்கு தளர்வால் மின்னல் வேகத்தில் கொரோனா பரவி வருகிறது. நாட்டில் உள்ள அனைவருக்கும் தரமான மருத்துவ வசதி கிடைப்பது பெரும் கேள்விக்குறியாக உள்ள நிலையில், கொரோனாவுடன் வாழப் பழகி கொள்ளுங்கள் என்று கூறுவது எந்தளவுக்கு சாத்தியம் என்பது புரியவில்லை. கொரோனா கற்றுத் தரும் பாடத்தை உணர்ந்து சாலையோர பகுதிகளில் மாஸ்க் விற்பதை தடை செய்ய வேண்டும். தரமான முகக்கவசம் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். என்னதான் அவசரம் என்றாலும், இன்னும் 2, 3 மாதங்களாவது, சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். காய்கறி, பழ மார்க்கெட் மற்றும் பொதுப்போக்குவரத்து பயணம் ஆகியவற்றின் மூலமாகத்தான் கொரோனா பரவல் மெல்ல மெல்ல அதிகரிக்க துவங்கியது. ஆரம்பத்திலேயே தமிழக அரசு சுதாரித்து இருந்தால் சென்னையில் இந்தளவுக்கு பாதிப்பு வந்திருக்காது. தற்போது நகரங்களை குறி வைத்தே கொரோனா பரிசோதனை அதிகளவில் நடந்து வருகிறது.

ஊரடங்கு தளர்வு, பொது போக்குவரத்துக்கு அனுமதி, பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் உள்ளவர்கள் சொந்த ஊருக்கு திரும்புதல் உள்ளிட்ட காரணங்களால் கிராமப்புற பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் தலைதூக்க அதிக வாய்ப்பு உள்ளது. கிராமங்களில் போதிய அளவு மருத்துவ வசதி இல்லாத நிலையில், கொரோனா தாக்கம் அதிகரித்தால் கட்டுப்படுத்துவது கடினம். கிராமங்களில் மக்கள் தொகை குறைவு என்றாலும், அடிக்கடி மக்கள் கூடிப்பேசுவது வழக்கமானது.
எவ்வித அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்படுகிறது. ஆகையால், கிராமத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டாலும், அவர் மூலம் கிராமம் முழுவதும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு மருத்துவக்குழு ஒன்றை அமைக்க வேண்டும். அக்குழு ஊராட்சி அமைப்புகள் மூலம் கிராமங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டியது கட்டாயம். ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, பலியானோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. முக்கியமாக, இறப்பு விகிதம் அதிகரிப்பதால் மக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.

ஊரடங்கை தவிர்த்து, கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர எவ்வித புதிய திட்டமும் மத்திய, மாநில அரசுகளிடம் இல்லாதது தான் வேதனையின் உச்சகட்டம். ஊரடங்கு நல்ல விஷயம் என்றாலும், அது நிரந்தர தீர்வாக இருக்காது. கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில், மெத்தனமாக செயல்பட்டால் குறுகிய காலத்தில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். ஊரடங்கு காரணமாக மக்களின் கையில் பணப்புழக்கம் இல்லை. இதனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட கஷ்டப்பட்டு வருகின்றனர். ஊரடங்கு தளர்வு அறிவித்து விட்டதோடு நமது கடமை முடிந்து விட்டதாக அரசு எண்ண வேண்டாம். மக்களின் துயரத்தை போக்கி, வாழ்வாதாரத்தை உயர்த்த புதிய வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • petroLLL

  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

 • pakisthN_11

  கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

 • mask_glovbeess1

  கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

 • 26-06-2020

  26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • vettukili15

  மத்திய பிரதேசத்தில் ஆயிரக்கணக்கில் புற்றீசல் போல படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்: ஆபத்தை அறியாமல் பலர் செல்போனில் படம்பிடிக்கும் கொடுமை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்