SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அலட்சியம் வேண்டாம்

2020-05-31@ 02:58:35

2020 ம் ஆண்டு துவக்கத்தில் இருந்து உலகம் அடுத்தடுத்து புதுப்புது சவால்களை  எதிர்கொண்டு வருகிறது. ஆண்டின் தொடக்கத்தில் மனித குலம் அண்மை காலங்களில் சந்தித்திராத புது அரக்கனை சந்தித்தது. அதுதான் கோவிட் 19 கொரோனா வைரஸ். இதில் இருந்து மீள வழி தெரியாமல் இந்தியா தத்தளித்து கொண்டிருக்கும் வேளையில், வான் வழியே அடுத்த தாக்குதல் துவங்கிவிட்டது. முதலாவது கண்ணுக்கு தெரியாத எதிரி; இப்போது வந்ததோ பெரும் படையாக வானில் பறந்து வரும் பாலைவன வெட்டுக்கிளிகள். ஆப்ரிக்காவின் சோமாலியா, எத்தியோப்பியா நாடுகளில் இருந்து சவூதி அரேபியா, பாகிஸ்தான் வழியாக ராஜஸ்தான், குஜராத்துக்குள் இந்த வகை வெட்டுக்கிளிகள் நுழைந்து பயிர்கள், மரங்கள் என்று அனைத்தையும் பதம் பார்ப்பது கடந்த சில ஆண்டுகளாக வாடிக்கையாக நடக்கும் ஒன்றுதான்.

 வழக்கமாக ஜூலையில் துவங்கும் இந்த வெட்டுக்கிளி படையெடுப்பு சில மாதங்கள் நீடிக்கும். இந்த ஆண்டு ஏப்ரல் மாதமே துவங்கியது விவசாயிகளை கலங்கச் செய்தது. விவசாயிகளின் கூக்குரல் கொரோனா பீதி உச்சத்தில் இருந்ததால் ஆட்சியாளர்களின்  காதுகளை எட்டவில்லை. விளைவு, இன்றைக்கு ராஜஸ்தான், குஜராத்தை தாண்டிவிட்டது வெட்டுக்கிளி படையெடுப்பு. ஆப்ரிக்காவில் இருந்து புலம் பெயர்ந்த இந்த வெட்டுக்கிளிகள் ஒன்றிரண்டாகவோ, நூற்றுக்கணக்கிலோ வராது. கோடிக்கணக்கில் படையெடுப்பதுதான் இந்த ரக வெட்டுக்கிளிகளின் வாடிக்கை. ஒரு பெரும் படையில் 1000 கோடி வெட்டுக்கிளிகள் வரை கூட இருக்கலாம். ஒருநாளைக்கு 150 முதல் 200 கிமீ வரை பறந்து செல்லும் திறன் இவற்றுக்கு உண்டு.

காற்று வீசும் திசையில் ஒரு நாளைக்கு 200 கி.மீ. வரை பறந்து சென்றுவிடும். ஒரு வளர்ந்த பாலைவன வெட்டுக்கிளி ஒருநாளைக்கு  தனது எடைக்கு நிகரான உணவை உட்கொள்ளும். அதாவது 2 கிராம் உணவு உட்கொள்ளும். ஒரு சதுர கிலோமீட்டரில் 7 முதல் 8 கோடி வெட்டுக்கிளிகள் வரை இருக்கும். இவை ஒருநாளைக்கு சராசரியாக 35 ஆயிரம் மனிதர்கள் உண்ணும் உணவை நாசம் செய்துவிடும். முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவு வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் வடமாநில விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாலைவன வெட்டுக்கிளிகள் படை தமிழகத்தை நெருங்காது என்று அதிகாரிகள் சொல்லி வருகிறார்கள். ஆனால், நீலகிரியில், கிருஷ்ணகிரியில் சிறுசிறு கூட்டமாக வெட்டுக்கிளிகள் தென்பட்டுள்ளன. இவை உள்ளூர் வெட்டுக்கிளிகள்தான் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதோடு, ஒரு வேளை பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுத்து வந்தாலும் அவற்றை அழிக்க அனைத்து ஏற்பாடுகளையும் முன்கூட்டியே செய்து  தமிழக அரசு தயாராக இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் கொரோனா போல் அலட்சியம் காட்டாமல்  தடுப்பு நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், நம் அனைவரின் தட்டுக்கு உணவு வராமல் போகலாம். மிகப்பெரிய பஞ்சம் கூட உருவாகலாம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • petroLLL

  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

 • pakisthN_11

  கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

 • mask_glovbeess1

  கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

 • 26-06-2020

  26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • vettukili15

  மத்திய பிரதேசத்தில் ஆயிரக்கணக்கில் புற்றீசல் போல படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்: ஆபத்தை அறியாமல் பலர் செல்போனில் படம்பிடிக்கும் கொடுமை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்