SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செத்துப்போன வழக்கிற்கு உயிர் கொடுத்து ஒரே வாரத்தில் அரை கோடீஸ்வரனாக மாறிய காக்கி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-05-28@ 00:02:48

‘‘அமைச்சர் மாதிரியே அதிகாரிகளும் சோப்பு நுரை கதை விட்டதா சொல்றாங்களே.. அது என்ன மேட்டர்..’’ என்று ஆர்வத்துடன் கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ஈரோட்டில் உள்ள சோப்பு நுரை துறை அதிகாரிகள் கொரோனாவுக்கு முன் இருந்ததைவிட இப்ப செமையா கல்லா கட்றாங்களாம்... ஊரடங்கு தளர்வுக்கு பின் சாயப்பட்டறைங்க எல்லாம் செயல்பட தொடங்கி இருக்கு... இதனால கடந்த சில நாட்களா ஈரோட்டில் உள்ள ஓடைகளில் சாய தண்ணீர் மீண்டும் தினம் ஒரு கலர்ல போய்கிட்டு இருக்கு... இதுபத்தின செய்தி வந்ததுமே ஆய்வுங்கிற பேர்ல அதிகாரிங்க ஒரு நாடகத்தை நடத்துனாங்க... ஓடையில ஓடுவது தொழிற்சாலை கழிவுநீர் இல்ல, லாக்டவுன் காரணமாக மக்கள் வீட்டுலேயே இருக்கறதால வெயிலுக்கு அதிகமாக குளிக்கிறாங்க,  அதனால சோப்பு தண்ணீர்தான் நுரையோடு ஓடுது, அதைப்போய் கழிவு நீருன்னு தப்பா நினைச்சு செய்தி போட்டுட்டாங்க.... என அரசுக்கு அறிக்கை அளித்துள்ளனர். துறையோட அமைச்சரே கழிவுநீரை சோப்பு நுரைன்னு முன்பு ஒருமுறை சொன்னதுபோல, இப்போ  அதிகாரிங்களும் அதையே பாலோ செய்யறாங்களாம். இதுல என்ன விஷேசம்னா அரசுக்கு சோப்பு நுரைன்னு அறிக்கை கொடுத்த அதிகாரிங்க, சில சாயப்பட்டறை உரிமையாளர்களிடம், உங்க ஆலையில் இருந்துதான் கழிவுநீர் வந்துச்சுன்னு சில லகரங்களை ஆட்டையப் போட்டுட்டாங்களாம். உதயமான அதிகாரியும், இதுக்கு துணையா இருக்கிற அதிகாரியும்தான் நல்லா கல்லா கட்றதுல டாப்ல இருக்காங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஊத்தி மூடின கேஸை எல்லாம் எடுத்து காசு பாத்தாராமே போலீஸ் அதிகாரி..’’ என சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.  
‘‘எப்படியாவது பணத்தை பார்க்கவேண்டும் என்று நினைத்த ஒரு போலீஸ் அதிகாரி கையில் எடுத்த வழக்கு தான் கிருஷ்ணகிரியில் கிணறு வெட்ட பூதம்  கிளம்பிய கதையா மாறியிருக்காம், ஊதும் பொருளின் பெயர் கொண்ட டிஎஸ்பி ஓசூருக்கு பொறுப்பேற்று வந்தாராம். வந்தவுடன் ஹட்கோ ஸ்டேஷனில் குளோஸ் செய்யப்பட்ட மின்விபத்து பலி வழக்கு பைலை  தூசு தட்டினாராம். அதில் மின்ஊழியர் ஒருவருக்கு தொடர்பிருப்பதாக கூறி, சகாக்களை அவரிடம் அனுப்பி  ₹5லட்சம் பேரம் பேசினாராம். கடைசியில் ₹1 லட்சத்திற்கும் இறங்கி வந்தாராம். ஆனால் மின்வாரிய ஊழியரோ, விவகாரத்தை எஸ்பியின் கவனத்திற்கு கொண்டு சென்றாராம். டிஎஸ்பியை அழைத்த எஸ்பி, குளோஸ் செய்யப்பட்ட கேசில் தலையிட்டு நேரத்தை வீணாக்காதீங்க என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தாராம். ஆனால் டிஎஸ்பியோ, தனது செல்வாக்கை லோக்கல் இன்ஸ்பெக்டரிடம் காட்டி, மின்வாரிய ஊழியர் மீது எப்ஐஆர் போட வைத்தாராம். இதை கேள்விப்பட்டு ஷாக்கான எஸ்பி, சம்பந்தப்பட்ட  இன்ஸ்பெக்டரை ஆயுதப்படைக்கு தூக்கி அடிச்சாராம். அப்புறம் டிஎஸ்பியை பற்றி விசாரித்ததில், ஒரே வாரத்தில் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் டீலிங் பேசி, கல்லா கட்டியது அம்பலம் ஆச்சாம். அதிர்ந்து போன எஸ்பி, முதற்கட்டமாக அவரோட ஜீப்பை பறிமுதல் செய்தாராம். இது தொடர்பான என்கொயரிக்கு வந்த டிஎஸ்பியோ, லீவு லெட்டரை  குடுத்துட்டு அப்படியே எஸ்கேப் ஆகிட்டாராம். இப்போ, துறை ரீதியான ஆக்‌ஷனுக்கு எல்லாம் ரெடியாகி கிட்டு இருக்காம்.
 ‘‘வேற ஏதாவது காவல்துறை சேதி  இருக்கா..’’
 ‘‘உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி இந்த வார இறுதியில் ஓய்வு பெறுகிறார். இவருக்கு பணி நீட்டிப்பு வருமா, வராதா என்று காவல்துறையில் பெரிய பட்டிமன்றமே நடந்தது. கண்டிப்பாக ஓய்வு பெறுவார் என்று சிலர் அடித்து கூறுகின்றனர். காரணம், அவருக்கு வலது, இடது கரமாக இருந்த 2 டிஎஸ்பிக்களை அழைத்து நீங்கள் எந்தப் பிரிவுக்கு செல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டு, அவர்கள் கேட்ட பிரிவுக்கு மாறுதல் வாங்கிக் கொடுத்து விட்டாராம். இருவரும் வளம் கொழிக்கும் பகுதிக்கு சென்று விட்டார்களாம். இதனால்தான் கண்டிப்பாக அவர் ஓய்வு பெற்று விடுவார் என்று அடித்துச் சொல்கிறார்களாம் அதிகாரிகள்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வெயில் மாவட்டத்துல லட்சங்கள் லஞ்சமாக பறக்குதாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வேலூர் மாநகராட்சியின் 4 மண்டலங்களில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர், தச்சர், புள்ளி விவர குறிப்பாளர், குடிநீர் பணியாளர், தூய்மை பணியாளர் உட்பட 1400க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனிடையே, மாநகராட்சி கமிஷனர்கள் இடமாறுதல் போன்ற காரணங்களால் காலிப்பணியிடங்கள் நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து காலிப் பணியிடங்களுக்கு தற்காலிகமாக பணியாளர்கள் கல்வித்தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் மண்டல அலுவலகங்களில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் பணியாளர்களிடம் ₹3 லட்சம் வரை பேரம் பேசி வருகிறார்களாம். ‘அட்வான்ஸ் பாதி, வேலை கிடைச்சதும் மீதி’ என்று ஆசை வார்த்தை கூறி வசூல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
அதேபோல், உயர் அதிகாரிகளும் ஊழியர்களுக்கு போட்டியாக களத்தில் குதித்துள்ளனர். தங்களிடம் பணியாற்றும் ஊழியர்களிடம், ‘என்னய்யா, யாராவது தெரிஞ்ச பசங்க இருந்தா சொல்லு. போட்டு கொடுத்துடலாம். கொஞ்ச நாள் வேலை செய்யட்டும், அப்புறம் பார்த்துக்கலாம்’, என்று வலை விரித்து காத்திருக்கின்றனர்.
ஏற்கனவே, வேலூர் மாநகராட்சியில் லஞ்சம் வாங்கிய வழக்கு தொடர்பாக விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் அடுத்தக்கட்ட ஊழல் விவகாரம் பூதாகரமாய் வெடிப்பதற்கு தயாராக உள்ளது. தலைக்கு மேல் தொங்கும் கத்தி எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்று விவரம் அறிந்த அதிகாரிகள் வசூல் வேட்டையில் கலக்கும் அதிகாரிகளுக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • petroLLL

  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

 • pakisthN_11

  கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

 • mask_glovbeess1

  கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

 • 26-06-2020

  26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • vettukili15

  மத்திய பிரதேசத்தில் ஆயிரக்கணக்கில் புற்றீசல் போல படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்: ஆபத்தை அறியாமல் பலர் செல்போனில் படம்பிடிக்கும் கொடுமை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்