SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குடி, குடிமராமத்து கமிஷனை ைவத்து குடிசைகள் கோபுரங்களாக மாறுவதை சொல்கிறார்: wiki யானந்தா

2020-05-27@ 00:39:36

‘‘குடி, குடிமராமத்து ஆகிய இரண்டே விஷயங்களில் கிடைக்கும் கலெக்‌ஷன், கமிஷனை வைத்து இலை கட்சியினர், அதிகாரிகள் பலரின் குடிசைகள் கோபுரங்களாகவும் கோபுரங்கள் அரண்மனைகளாகவும் அலங்கரிக்கப்படுதாமே, உண்மையா...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘சிவகங்கை மாவட்டத்துல 12.79 கோடியில் 4 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் உள்ள ஆயக்கட்டு பகுதிகள் பயன்பெறும் வகையில், கண்மாய்கள் குடிமராமத்து பணிகள் துவங்கின. விதிமுறைகளின்படி பாசன கண்மாய்களுக்கு உட்பட்ட பகுதியில் விவசாயிகள் சங்கம் அமைத்து, அதன் மூலம் குடிமராமத்து செய்யணும். ஆனால் இலை தரப்போ, திட்டம் வேண்டும் என்றால் எங்க சங்கத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நிதி, குடிமராமத்து என்று கண்டிஷனாக சொல்லிட்டாங்களாம். இணைத்தும் விட்டாங்களாம். குடிமராத்து நிதியில் 40 பர்சென்ட் கமிஷனை இலை தரப்புக்கும் 10 பர்சென்ட் விவசாய சங்கத்துக்கும் தந்தே ஆகணும்னு கண்டிஷன் போட்டாங்க. இதை கேட்ட கான்ட்ராக்டர்கள் எங்க லாபத்தையும் கூட்டி கழிச்சு பார்த்தால் கண்மாய் ஓரம் உள்ள புல்லை கூட பிடுங்க முடியாது... அரசுக்கு யார் பதில் சொல்வது என்று அதிர்ச்சியில் இருக்காங்க... அவர்களிடம் வந்த இலை தரப்போ, 12 கோடி ஒதுக்கியாச்சு... 6 கோடியை கொடுத்துட்டு உன் வேலையை நீ பாரு... எங்க வேலையை நாங்க பார்த்துக்கிறோம்... உங்க வேலை முடியற வரைக்கும் நாங்க பாதுகாப்பாக இருப்போம். கவலைப்படாதீங்கனு ஆறுதல் சொன்னாங்களாம். ஏற்கனவே டாஸ்மாக்ல அரசு சொன்ன விலையை விட கூடுதலாக 30 முதல் 50 வரை வைத்து இலை தரப்பு குடியில் பணம் பார்த்து குடிசைகளை கோபுரங்களாக மாற்றிட்டாங்க... இப்போது குடிமராமத்தில் கோடிகளை குவித்து அரண்மனைகளாக கட்டப்போறாங்க. வேறு என்ன நடக்கப்போகுது...’’ என்று புலம்பியபடியே தலையில் கைவைத்து கான்ட்ராக்டர்கள் உட்கார்ந்துள்ளனர்....’’ என்றார் விக்கியானந்தா.
‘‘உயர் பதவியை பிடிக்க முட்டி மோதுவதில் கோவையை மிஞ்ச முடியாது போல...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கோவை மாவட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகள் வேறு மாவட்டத்திற்கு மாறுதல் கிடைத்தால் செல்ல மறுப்பது தொடர்கதையாகி விட்டது. கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேர்முக உதவியாளர், ஆர்.டி.ஓ. பதவி வகித்த இளம்பெண் அதிகாரிக்கு சென்னைக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது. ஆனால் அவர், சென்னை செல்ல மறுத்துவிட்டார். சில மாதம் ஓய்வில் இருந்த அவர் மீண்டும் கோவை மாவட்டத்தில் மதுபான ஆலையின் கலால் துறை அதிகாரியாக பணியிடம் வாங்கி வந்துவிட்டார். இவர் மீண்டும் கோவையில் முக்கிய பதவியை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறார். குறிப்பாக, மாநில அளவில் பல்வேறு மாநகராட்சி அதிகாரிகளின் பணியிட மாறுதல் பட்டியல் தயாராகி வருகிறது. இதில், கோவை மாநகராட்சி துணை கமிஷனர் பதவியை கைப்பற்ற பெண் அதிகாரி தீவிரம் காட்டி வருவதாக தெரியவந்துள்ளது. கோவையை விட்டு செல்ல மறுக்கும் இந்த பெண் அதிகாரி கோவையில் படித்து வளர்ந்தவர். என்ன தடை வந்தாலும் அப்பதவியை அடைந்தே தீருவேன் என சபதம் ஏற்றுள்ளார். கடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் இந்த அதிகாரி மீது பல்வேறு குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. ஆனால், அரசியல் சாமர்த்தியத்தால் அதை உடைத்தெறிந்து விட்டார். தற்போது அந்த பதவியை பெண் அதிகாரி பிடித்து விட்டால், இவரது ஆட்டம் தாறுமாறாக இருக்கும் பாருங்க என்கின்றனர் வருவாய்த்துறையினர்...’’ என சிரித்தபடி சொன்னார் விக்கியானந்தா.
‘‘பத்து ரூபாய்க்கு ஆசைப்பட்டு 100 ரூபாயை விட்டுட்டோம்னு புதுச்சேரி மதுபான உரிமையாளர்கள் ஏன் பேசிக்கிறாங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ஊரடங்கு நேரத்தில் கள்ள மது மற்றும் விதிகளை பின்பற்றாத 89 மதுபானக்கடைகள் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நீதிமன்றமும் கலால்துறை விசாரணை முடியும் வரை பார்களை திறக்க கூடாது என தெரிவித்துவிட்டதால், தினமும் சட்டசபையை கோயிலை சுற்றி வருவது போல சுற்றி வருகிறார்களாம். சீக்கிரமா விசாரணையை முடித்து கடையை திறந்து விடுங்கள் என கலால் அமைச்சரையும், முதல்வரையும் கெஞ்சுகிறார்களாம். பவர்புல் பெண்மணி தலையீட்டினால் சிக்கல் இருக்கிறது. பொறுமையாக இருக்குமாறு கூறுவதால் அதிருப்தி அடைந்திருக்கிறார்களாம். இப்போது இந்த விஷயத்தை ஆரம்பத்தில் இருந்தே முதல்வர்தான் சிக்கலாக்கி விட்டதாக வெளியில் இருப்பவர்களிடம் குறைகூறி வருகிறார்களாம். முன்கூட்டியே நாம் சொல்லியதை கேட்கவில்லை என அலுத்துக்கொண்டார்களாம். இந்த விஷயம் முன்னவரின் கவனத்துக்கு போய்விட்டதாம், இதனால் மேலும் காத்திருக்கும் நிலைக்கு மதுபான உரிமையாளர்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர். ஒன்று அரசியல் காரணம், இன்னொன்று ஊரடங்கின்போது 10 ரூபாய் லாபத்துக்கு ஆசைப்பட்டோம். இப்போது 100 சதவீதம் விலையை ஏற்றி நம்மை அரசு வெறுப்பேற்றி விட்டதுன்னு வேதனைப்படுகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சில இடங்களில் பெண்கள் அதிகாரிகளாக வந்துட்டால் கீழ் உள்ளவர்களின் நிலை அவ்வளவுதான் போலிருக்கிறதே...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் படவேட்டு அம்மன் பெயரை கொண்டவர் பணியாற்றி வந்தார். அவர் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றிய காலக்கட்டத்தில் முத்திரைக்கட்டணம் பிரிவில் வசூல் வேட்டை நடத்தி கலக்கிட்டாராம். இவர் தப்பித்துக் கொள்ள கடைசியில்  துணை ஆட்சியர் விஜிலென்ஸ் போலீசில் சிக்கினார். துணை தாசில்தாரின் வசூல் வேட்டை மற்றும் தில்லாலங்கடி வேலைகள் குறித்த புகார்கள் ராணிப்பேட்டை கலெக்டருக்கு சென்றது. இதையடுத்து அவரை சிப்காட் தொழிற்பேட்டைக்கு இடமாற்றம் செய்தார். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவால் மீண்டும் கலெக்டர் அலுவலகத்தில் பழைய இடத்திலேயே பணி செய்து வருகிறாராம். அனைத்து வேலைகளையும் தன்னைதான் கலெக்டர் செய்ய சொல்கிறார் என்று கூறி தன்னை ஒரு நேர்மையான அதிகாரி போல காட்டி வருகிறார். கலெக்டர் அலுவலகத்தில் இந்த பெண் அதிகாரியின் செயலை கண்டு சக அதிகாரிகளே மிரண்டு போய் உள்ளனர். இவரிடம் நாம் தொடர்பு வைத்துக்கொண்டால் நாமும் அவ்வளவுதான் என அவரிடமிருந்து விலகி ஓட்டம் பிடித்து வருகிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 03-07-2020

  03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • petroLLL

  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

 • pakisthN_11

  கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

 • mask_glovbeess1

  கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

 • 26-06-2020

  26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்