SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா வசூல் வேட்டை நடத்தும் அதிகாரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-05-26@ 01:23:06

‘‘அரசு அலுவலகங்கள் எல்லாம் எப்படி செயல்படுது..’’ என்று கேட்டபடியே வந்தார் பீட்டர் மாமா.
 ‘‘கொரோனா ஊடரங்கு காரணமாக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கடந்த 18ம் தேதி முதல் 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வர வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தது. திங்கள், செவ்வாய் ஆகிய கிழமைகளில் 50 சதவீத ஊழியர்களும், அடுத்த 50 சதவீத ஊழியர்கள் அடுத்த இரண்டு நாள் என சுழற்றி முயற்சியில் பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரிகள் மட்டும் தினசரி பணிக்கு வர வேண்டும். ஆனால், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள வனத்துறை தலைமை அலுவலகத்தில் 300 பேர் வரை பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் அனைவரையும் தினசரி பணிக்கு வர வேண்டும் என்று உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனராம். அப்படி பணிக்கு வராவிட்டால், சம்பளம் பிடித்தம் செய்யப்படும் அல்லது மெமோ கொடுக்கப்படும் என்றும் மிரட்டப்படுகிறதாம். கொரோனா தொற்று காரணமாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டிய இந்த நேரத்தில் அரசின் உத்தரவை காற்றில் பறக்கவிட்டு விட்டு, ஊழியர்கள் அனைவரையும் பணிக்கு வர சொல்வது எந்த வகையில் நியாயம் என்று  கேள்வி எழுப்பி உள்ளனர். குறிப்பாக சென்னையில் அதிகளவில் கொரோனா பரவும் இந்த நேரத்தில், அரசின் உத்தரவை அனைத்து அலுவலக உயர் அதிகாரிகளும் பின்பற்ற வேண்டும் என்றும் வனத்துறை ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனராம்’’ என்றார் விக்கியானந்தா.
 ‘‘கொரோனா வசூல் வேட்டை தீவிரமா நடக்குதாமே...’’
 ‘‘வேலூர் மாவட்டம் திருவலத்தில் திருப்பதி கடவுள் பெயரைகொண்ட செயல் அலுவலர் பணிபுரிந்து வருகிறார். அவர் திருவலம் பேரூராட்சியில் வீட்டுமனை அங்கீகாரம், குடிநீர் இணைப்பு போன்றவற்றிற்கு கொரோனாவுக்கு முன்னதாகவே விண்ணப்பித்திருந்தவர்களிடம், தற்போது ஏழை மக்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கூறி வசூல் வேட்டை நடத்தி வருகிறாராம். சிலரை அலுவலகத்துக்கே வரவழைத்தும், சிலரை நேரில் சந்தித்தும் தனித்தொகை பெற்றுக்கொள்கிறாராம். அதோடு இல்லாமல் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்று கூறி, சாப்பாடு செய்வது போல் புகைப்படம் எடுத்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து அதிலும் லாபம் பார்த்துவிடுகிறாராம். கொரோனா பரவலை தடுக்க கிருமி நாசினி சரிவர தெளிக்காமலேயே தெளித்ததாக கணக்கு காட்டுகிறாராம்.
 தூய்மை பணியாளர்களுக்கு உணவுக்காக ஒதுக்கும் நிதியை முழுவதுமாக செலவு செய்யாமல் போலி பில் போட்டு அதனையும் அபேஸ் செய்துவிடுகிறாராம். இப்படி அனைத்திலும் சம்திங் அடிக்கிறாரே என்று தூய்மை பணியாளர்களே புலம்பி வர்றாங்களாம். சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் இணைப்புக்கு ரசீது இல்லாமலும் தன்னிச்சையாக பல இணைப்புகள் வழங்கி வசூல் வேட்டையில் ஈடுபட்டது ைஹலைட்’’ என்றார் விக்கியானந்தா.
 ‘‘விவசாயிகள் பேரில் ஆளுங்கட்சி ஆட்கள் குவிந்தார்களாமே.. அது என்ன சர்ச்சை’’ என ஆர்வத்தோடு கேட்டார் பீட்டர் மாமா.
 ‘‘தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பு நடவடிக்கைகளில் அந்தந்த மாவட்ட நிர்வாகம், கடந்த மூன்று மாதமாக மூழ்கி கிடந்தது. இந்நிலையில் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்வதற்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 15ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு திடுதிப்புனு அறிவித்து விட்டது. காவிரி டெல்டா பகுதிக்கு 4 நாட்களுக்கு முன்பு தான் ரூ. 67 கோடியே 24 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால் கடலூர் மாவட்டத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கவில்லை.
இதனால் மாவட்ட நிர்வாகம் குடிமராமத்து நிதியில் இருந்து தான் வாய்கால்கள், குளங்கள் மற்றும் ஷட்டர் சரி செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக அவசரம் அவசரமாக விவசாயிகள் சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கலெக்டர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் 2 பேர் மட்டுமே விவசாயி. அதுவும் தகவல் கேள்விப்பட்டு வந்தவர்கள். மற்றபடி விவசாயி சங்கத்துக்கு அழைப்பு கொடுக்கவில்லையாம். தகவலறிந்த அதிமுகவினர், பச்சை துண்டுபோட்டுக்கொண்டு திமுதிமுவென வந்துவிட்டனர் என விவசாயிகள் குமுறுகின்றனர். இருக்கிற குளங்களில் வண்டல் மண்ணை காசாக்கி விட்டு, குடிமராமத்து பணிகளை மேற்கொண்டதாக பில் பாஸ் செய்து துட்டு பார்த்துவிடலாம் என அதிமுகவினர் வேகம் காட்டுவதாக கதறுகின்றனர். மாவட்ட நிர்வாகம், அதிமுகவினருக்கே திட்டத்தை ஒதுக்கி விடுவதாக விவசாயிகள் மத்தியில் ஆவேச குரல் எழுந்துள்ளது’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பொள்ளாச்சி மாதிரி பலான கேஸ் ஒன்னு இருக்கிறதா சொன்னியே...’’
  ‘‘கோவை சரவணம்பட்டியில் ஒரு லாட்ஜில் இரண்டு வாலிபர்கள் இரு கல்லூரி மாணவிகளை அழைத்து சென்று தங்கியிருக்காங்க. இவர்களை பின் தொடர்ந்து சென்ற ஒரு கும்பல் காதல்ேஜாடிகளை தாக்கியுள்ளது. புகார் போலீசுக்கு போச்சு. இதுல, திடீர் திருப்பமா மாணவிகள் தங்களது காதலர்கள் மீதே புகார் கொடுத்திருக்காங்களாம். காதலர்கள் அழைத்த இடத்துக்கு சென்ற பின்னர் தான், எங்களை போல, சில பெண்களை காதலிப்பதாக ஏமாற்றி அங்கு அழைத்து சென்று ஜாலியாக இருந்திருக்காங்கன்னு தெரிஞ்சதுன்னு போலீசில சொல்லியிருக்காங்களாம்... அடிக்கடி வர்ற வாலிபர்களை கண்காணிச்ச கும்பல் தான் திடீர்னு வந்து தாக்குதல் நடத்திருக்கு. ஆன்லைனில் அறையை புக் செஞ்சு பெண்களை அழைச்சிட்டு வர்றது தெரிஞ்சும் போலீசார் கண்டுக்காம இருக்க லாட்ஜ் நிர்வாகம் அவங்களை முறையா கவனிச்சுக்குதாம்... இது இப்படியே தொடர்ந்தா... இங்க இன்னொரு பொள்ளாச்சி ஆயிடும்...இதை இப்படியே விட்டுடக்கூடாதுன்னு அந்த பகுதி மக்கள் கடுங்கோபத்துல இருக்காங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 03-07-2020

  03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • petroLLL

  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

 • pakisthN_11

  கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

 • mask_glovbeess1

  கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

 • 26-06-2020

  26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்