SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐம்பது நாளில் அரை கோடீஸ்வரனாக மாறிய மஞ்சள் மாவட்ட இலை பிரமுகர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-05-25@ 02:48:46

‘‘இன்னும் டாஸ்மாக் பஞ்சாயத்து முடியலையா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘அரசுக்கு முக்கிய வருவாய்னு சொல்லும்போது... அதில் நடக்கும் தனி நபர்களுக்கு கிடைக்கும் வருவாய் பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ எலைட் என்ற உயர்ரக மதுபானங்களை விற்பனை செய்ய கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்றுமுன்தினம் ஈரோடு ரயில்நிலையம் எதிரே உள்ள எலைட் கடையை திறந்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த உயர்ரக மதுபாட்டில்கள் பெட்டி, பெட்டியாக குறைந்திருந்தநிலையில் இருந்ததாம். கடந்த 50 நாட்களாக கடை மூடப்பட்டிருந்த நிலையில் சரக்குகளை பாதுகாக்க முன்புற ஷட்டரில் வெல்டிங் வைத்திருந்தனர். ஆனால் கடையின் பின்புறம் உள்ள கதவு வழியாக பெட்டி, பெட்டியாக மதுபானங்கள் மாயமாகி போனதாம். உயர்ரக மதுபானம் என்பதால் கோடீஸ்வரன் முதல் சாதாரண நபர்கள் வரை பல ஆயிரம் கூடுதலாக பணத்தை கொடுத்துள்ளனர்.

உயர்ரக மதுவுக்கு எப்போதும் கிராக்கி என்பதால் இலைக் கட்சி நபர் சாதாரண டாஸ்மாக் கடைகளை விட்டுவிட்டு எலைட் கடையை அதற்கு தான் தேர்வு செய்தாராம். அந்த வலையில்தான் எலைட் கடையின் முக்கிய நபர் சிக்கினார். இரண்டு பேரும் சேர்ந்து எலைட் கடையில் சாதாரணமாக, 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்கும் உயர்ரக மதுபானங்களை 12 ஆயிரம், 15 ஆயிரம் என விற்றுள்ளனர். இதில் கடந்த 50 நாட்களில் மட்டும் லட்சங்களில்   குவிந்துவிட்டதாம். வந்த லாபத்துல கடையின் விற்பனையாளர், இலை பிரமுகர் என பங்கு போட்டு தொகையை பிரிச்சுகிட்டாங்களாம். சரக்கு இருப்பு குறைஞ்ச எலைட் கடையில டாஸ்மாக் அதிகாரிகள் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதே கடையில் உள்ள வேறு பணியாளர்கள் கொதித்து போய் இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மாங்கனி மாவட்டத்துல இப்போதெல்லாம் லாட்ஜ் எல்லாத்துக்கும் பயன்படுதுபோல...’’ என கேட்டு சிலாகித்தார் பீட்டர் மாமா.‘‘மாங்கனி மாவட்டத்தில் கைலாசநாதர் கோயில் உள்ள நகரின் இன்ஸ்பெக்டர், எல்லா டீலிங்கையும் லாட்ஜில் தான் நடத்துறாராம். இவருக்குனு தனி அறை இருக்காம். ஆனால் தூங்க, தங்க இந்த ரூம் இல்லையாம். இவர் ஸ்டேஷனில் இருக்கும் நேரம் மிகவும் குறைச்சலாம். எப்போதும் லாட்ஜில் இருந்து கொண்டு பஞ்சாயத்தை எல்லாம் அங்கேயே முடித்து அனுப்பி விடுகிறாராம். இதுபோக தனக்கு கார் டிரைவர்களாக டிபார்ட்மென்டை சேர்ந்த 3 பேரையும், பிரண்ட்ஸ் ஆப் போலீசை சேர்ந்த 3 பேரையும் என 6 பேரை பயன்படுத்திக் கொள்கிறாராம்.

வேறு எந்த அதிகாரியும் இப்படி 6 டிரைவர்களை வைத்துக் கொள்வதில்லையாம். தனது டீலிங் எல்லாம் மற்ற காக்கிகளுக்கு தெரியக்கூடாது என்பதற்காக, இப்படியொரு டெக்னிக்கை யூஸ் பண்றதா பேசிக்கிறாங்க. ஆனா, இவரது செயலை ஸ்டேஷன் மெயின் எஸ்ஐயும், தனிப்பிரிவு காக்கியும் தெரிஞ்சிகிட்டு, அவருக்கு ஏற்றாற்போல் நடந்துகொண்டு, கை நிறைய கரன்சியை பார்க்கிறது கொசுரு தகவலுனு நேர்மையான காக்கிகள் புகாரை மேலிடத்திற்கு தட்டி விட்டுருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘ரவுடிகள் கடத்தல்காரர்களாக மாறியதுல ஏதாவது விசேஷம் இருக்கா...’’ ஆச்சர்யத்துடன் கேட்டார் பீட்டர் மாமா.

‘‘வேலூர்ல ரவுடிகளை ஒடுக்க  நடந்த அதிரடியால் பல ரவுடிகள் தலைமறைவாகினர். சிலர் தொழிலையே மாற்றிவிட்டனர். ரவுடி தொழிலில் ரிஸ்க் அதிகம்... வருவாய் குறைவு... மணிக்கு மணி போலீஸ் தொல்லை இருந்தது... இதனால் லாபம் அதிகம் ரிஸ்க் குறைவாக இருக்கும் செம்மரம் கடத்தல் தொழிலை ரவுடிகள் கையில் எடுத்துள்ளனர். ஆந்திர மாநில பார்டர் என்பதால் செம்மரக்கடத்தலில் எளிதாக சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டாங்க... தொழிலை கைவிட்டு, ஓடி ஒளிந்த ரவுடிகள் போலீசாருக்கு மாமூல் கொடுப்பதை கைவிடவில்லையாம். இன்னும் சொல்லப்போனால் முன்பைவிட அதிகப்படியான மாமூல் போலீசாருக்கு கிடைத்துள்ளது.

இதனால் ரவுடிகள் வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுவதை கணித்த உளவுத்துறை உயர் அதிகாரிகளுக்கு ரவுடிகள் தொழில் மாறிய விஷயத்தை போட்டு கொடுத்துள்ளது. இந்நிலையில் தான் வேலூரில் சிக்கிய ரவுடி ஒருவர், காட்பாடியில் உள்ள குடோனில் பதுக்கி வைத்திருந்த ஒரு டன் செம்மரக்கட்டைகளை கைப்பற்றியதாம். உளவுத்துறை அறிக்கையால்  செம்மரக்கட்டை கடத்தல்காரர்களிடம் மாமூல் வாங்கிய போலீசார் தாங்கள் எங்கே மாட்டிக் கொள்வோமா? என்ற அச்சத்தில் இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தூங்கா நகர் மாவட்டத்துல பைல்கள் தூங்குதாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மதுரை மாவட்டத்தில் குடியிருப்புகள் விரிவாக்கம் அதிகரித்து வருது. குடியிருப்பு வீட்டுமனைக்காக நகர் ஊரமைப்புத்துறையின் கீழ் உள்ள மாவட்ட உள்ளூர் திட்ட குழுமத்தின் அனுமதி பெறவேண்டும். கடந்த ஒரு வருடத்தில் வீட்டுமனை அனுமதிக்காக ஆயிரக்கணக்கான கோப்புகள் தேங்கியுள்ளன. மதுரை உள்ளூர் திட்ட குழுமத்தின் உறுப்பினர் செயலர் பதவி 8 மாதமாக காலியாக உள்ளது. இதனால், மதுரை மண்டல நகர் ஊரமைப்புத்துறையின் துணை இயக்குநர், இந்த பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார். இவர், ஏற்கனவே நான்கு மாவட்டத்தின் துணை இயக்குநராக இருப்பதால், பணிச்சுமை அதிகம். மதுரை உள்ளூர் திட்ட குழுமத்தின் உறுப்பினர் செயலராக இருப்பதால், தேங்கி கிடக்கும். கோப்புகளை சரிசெய்து, உள்ளூர் திட்ட குழுமத்தின் தலைவரான கலெக்டரிடம் கையொப்பம் பெற்று கொடுக்க வேண்டும். அதை அவரால் செய்ய முடியவில்லையாம். அதனால பைல்கள் தூங்குதாம்.

இதனால், தினமும் நூற்றுக்கணக்கான விண்ணப்பதாரர்கள் இந்த அலுவலகத்திற்கு படையெடுக்கின்றனர். பொறுப்பு அலுவலராக இருப்பதால், கோப்புகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கமுடியவில்லை. மேலும், கோப்புகளில் உள்ள தவறுகளை விண்ணப்பதாரர்கள் சரி செய்து கொடுத்தும், அதில் உறுப்பினர் செயலர், கலெக்டர் ஆகியோர் கையெழுத்து போடாமல் தேங்கி இருப்பதாகவும் மதுரை உள்ளூர் திட்ட குழுமத்திற்கு என காலியாக உள்ள உறுப்பினர் செயலர் பதவிக்கு ஒருவரை நியமிக்கும் வரை, அலுவலகத்தில் கோப்புகள் தேங்கித்தான் இருக்கும் என அலுவலக ஊழியர்கள் கூறுகின்றனர். இதனால் வழக்கம்போல பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 03-07-2020

  03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • petroLLL

  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

 • pakisthN_11

  கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

 • mask_glovbeess1

  கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

 • 26-06-2020

  26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்