SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அடுத்த பீதி

2020-05-25@ 02:01:40

தமிழகத்தில் இரு மாதங்களாக ஊரடங்கு தொடர்ந்தாலும் கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. மாநிலம் முழுவதும் கொரோனாவுக்கு சுமார் 16 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், பலி எண்ணிக்கை 100ஐ தாண்டிவிட்டது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டுமே கொரோனாவுக்கு 13 பேர் பலியாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 3ல் இரு பங்கு சென்னையை மையமாக கொண்டு காணப்படுகிறது. இந்நிலையில் அடுத்த மாதம் முதல் பொதுபோக்குவரத்தும் தொடங்க உள்ளது. சென்னையை தவிர்த்து தமிழகத்தில் 4 ரயில்களை இயக்கிட ரயில்வே துறை ஏற்கனவே அனுமதி பெற்றுவிட்டது.

விமான போக்குவரத்துக்கு தேவையான ஏற்பாடுகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. கொரோனா பாதிப்பு குறைவான மாவட்டங்களில் பயணிகள் செல்லும் வகையில் பஸ் போக்குவரத்தும் தொடங்கப்பட உள்ளது. இத்தகைய சூழலில் கொரோனா பரவலை தமிழகம் எச்சரிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்ததில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களின் பங்கே அதிகம். விமானங்களில் வந்து இறங்கியவர்களை முறைப்படி கண்காணித்து, மருத்துவ பரிசோதனை நடத்தியிருந்தால் கொரோனாவின் தாக்கம் இந்தளவுக்கு இருந்திருக்காது.

அதேபோல் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் வந்தவர்களையும் மாநில எல்கையிலே கண்டறிந்து, தனிமைப்படுத்தியிருந்தால் பாதிப்புகள் குறைந்திருக்கும். மார்ச் மாத தொடக்கத்தில் அரசு காட்டிய அலட்சியம், இன்று பெரும் பாதிப்பை உருவாக்கிவிட்டது. தற்போது அடுத்தகட்டமாக மீண்டும் பொது போக்குவரத்து தொடங்கும் நிலையில், தமிழக அரசு மிகஎச்சரிக்கையாக இருக்கவேண்டும். வெளிமாநிலங்களில் இருந்து வரும் விமானங்கள், திருவனந்தபுரம் உள்ளிட்ட வெளியிடங்களில் இருந்து வரும் ரயில்களையும், அதில் வரும் பயணிகளையும் முறையாக அணுக வேண்டும். அவர்களுக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள், நோய் தொற்று அறிகுறிகள் தென்பட்டால் தனிமைப்படுத்துதல் ஆகியன அவசியம்.

தென்மாவட்டங்களில் மே மாதம் முதல் வாரத்தில் 10க்கும் குறைவானவர்களே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் நூற்றுக்கணக்கில் கொரோனா நோயாளிகள் தென்படுவதற்கு, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வருகையே காரணம். எனவே அரசு ரயில், விமான பொது போக்குவரத்தை அலட்சியமாக அணுக கூடாது. பயணம் செல்லும் பயணிகள் மத்தியில் சமூக இடைவெளியை பேண அறிவுறுத்த வேண்டும். வெளியிடங்களில் இருந்து வருவோரின் முழு பயண விபரங்களையும் சேகரித்து, மருத்துவ சோதனைக்கு உட்படுத்த வேண்டும். கொரோனா பரவலின் முதற்கட்டமே பயணங்கள்தான். அதை அறிந்து பயணிகளை கண்காணிப்பது அரசின் கடமை. கொரோனா பரவலின் அடுத்த கட்டம் அரசின் தீவிர நடவடிக்கைகளை பொறுத்தே அமையும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • vettukili15

    மத்திய பிரதேசத்தில் ஆயிரக்கணக்கில் புற்றீசல் போல படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்: ஆபத்தை அறியாமல் பலர் செல்போனில் படம்பிடிக்கும் கொடுமை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்