SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழகம் கேட்ட நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

2020-05-24@ 01:06:41

சேலம்: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, தமிழகம் கேட்ட நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, அனைத்துத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு கூட்டம் நடத்தினார். பின்னர், அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் கொரோனா நோயை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அனைத்துத்துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால், கொரோனா கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள், அரசின் வழிகாட்டுதல் படி, கட்டுப்பாட்டுடன் இருந்தால் தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி கைது சம்பவத்தில் அரசுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது ஒரு சட்ட நடவடிக்கை. பட்டியல் இனத்தவரை அவதூறாக பேசியதால், வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளார்கள்.  

கொரோனாவை தடுக்க தவறி விட்டோம் என கூறுகிறார்கள். இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், 67 பரிசோதனை நிலையங்கள் தமிழகத்தில் தான் இருக்கிறது.  சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் அதிகமாக இருக்கிறார்கள். ஆனால், இது சமூக பரவலாக மாறவில்லை. நெருக்கமான வீடுகளும், ஒரு வீட்டில் 7, 8 பேரும் வசிப்பதால் பாதிப்பு அதிகரித்திருக்கிறது. மக்கள் அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றினால் தான், மேலும் பரவாமல் தடுக்க முடியும். வரும் 31ம் தேதிக்கு பின் பொது போக்குவரத்து தொடங்குவது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மத்திய அரசின் அறிவுறுத்தலை பார்த்து செயல்படுவோம். விரைவில் மருத்துவ நிபுணர் குழுவினருடன் சந்திப்பு உள்ளது.

கொரோனா நோய் தடுப்பிற்காக, மத்திய அரசிடம் இருந்து படிப்படியாக நிதி வருகிறது. ஆனாலும், தமிழகம் கேட்ட அளவுக்கு நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை.  தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி தொகையை, மத்திய அரசு நிலுவை வைத்துள்ளது. அதனை தற்போது கொடுத்து வருகிறார்கள். கொரோனாவால் தமிழகம் ஸ்தம்பித்துள்ளது உண்மை தான். ₹35 ஆயிரம் கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை நிதித்துறை தெரிவித்துள்ளது. இந்த நிதி இழப்பை சரி செய்ய, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர்கள் மூலம், 719 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இன்னும் வெளி மாநிலங்களில், வெளி நாட்டில் இருப்போர் வர இருக்கின்றனர். அவர்களையும் பரிசோதிக்கும் போது அதிகரிக்கத்தான் செய்யும். இருப்பினும் கட்டுக்குள் வைத்திருப்போம்.  இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இலவச மின்சாரம் தொடரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், மத்திய அரசின் மின்சாரம் தொடர்பான சட்ட திருத்தத்தால், தமிழகத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை  நிறுத்தப்போவதில்லை. தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்குவோம் என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • siva5

  1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

 • death5

  கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

 • coronaa5

  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

 • locust4

  ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

 • ingland4

  இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்