SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு செவி சாய்க்குமா?

2020-05-24@ 00:28:35

இது கொரோனா  காலம். வைரசின் பிடியில் இருந்து எப்போது முழுமையாக மீளுவோம் என்ற கேள்விக்கு யாருக்குமே விடைதெரியவில்லை. எப்படியாவது மீண்டுவிட வேண்டும் என்பதுதான் எல்லாருடைய ஆசை. 135 கோடி இந்தியர்களின் வாழ்க்கையையும் கொரோனா தடம் மாற்றிவிட்டுள்ளது. ஏழை, பணக்காரன், மாத சம்பளக்காரன், நடுத்தர வர்க்கம், தொழிலாளி என்ற எந்த பாகுபாடுமின்றி பெரும்பாலானவர்களை வாழ்க்கையின் ஓரத்துக்கே தள்ளிவிட்டுள்ளது. இவர்கள் அனைவரும் எதிர்பார்த்திருப்பது அரசின் உதவிக்கரத்தைதான். பிரதமர் 20 லட்சம் கோடி சலுகை என்று அறிவித்ததும், நமக்கும் எப்படியும் விடிவு காலம் பிறந்துவிடும் என்று மக்கள் நம்பத் துவங்கினர். ஆனால், பின்னர் 5 கட்டங்களாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தவற்றை பார்த்து வெம்ப துவங்கினர்.

அந்த அறிவிப்புகளில் இருந்தது சலுகைகள் அல்ல கடன்தான். ஏற்கனவே, உள்ள கடனால், தற்போதைய ஊரடங்கால் இடுப்பு வேட்டியையும் இழந்தவனுக்கு உடையை தர வேண்டும். ஆனால், மேலும் கடன் வாங்கிக்கொள் என்று மத்திய அரசு கூறிவிட்டது. இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஒத்த கருத்துடைய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் காணொலி மூலம் நடந்துள்ளது. இதில் 22 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில், கொரோனா ஊரடங்கால் முடங்கி கிடக்கும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த ஆலோசனைகளை தலைவர்கள் முன்வைத்துள்ளனர்.

கூட்டத்தின் இறுதியாக 11 யோசனைகளை மத்திய அரசுக்கு முன்வைத்துள்ளனர். அதில், முக்கியமானது, சலுகைகள் என்ற பெயரில் அரசு அறிவித்த கடன் மேளாவுக்கு பதிலாக உண்மையிலேயே சலுகைகளை, தொழில் ஊக்குவிப்புகளை அறிவியுங்கள் என்பது. அப்போதுதான் பொருளாதாரம் புத்துயிர் பெறும். அதே நேரத்தில், வருமான வரி செலுத்தாத குடும்பங்கள் அனைத்துக்குமே அடுத்த 6 மாதத்துக்கு ₹7,500 வீதம் உதவித்தொகை வழங்க கோரிக்கை. அதே போல் 6 மாதத்துக்கு 10 கிலோ உணவு தானியம் இலவசம். விவசாயிகளுக்கு போதுமான விதை, உரம், கொரோனா தடுப்பு பணிகளுக்காக மாநிலங்களுக்கு தாராள நிதி ஒதுக்கீடு.

ஊரடங்கு இத்தோடு முடியுமா? முடிந்தபிறகு என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை  மக்களுக்கு விளக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இதை எதிர்க்கட்சிகளின் கோரிக்கையாக மட்டும் பார்க்காமல், அதில் உள்ள நல்ல அம்சங்களை ஆராய்ந்து ,அதை அப்படியே அல்லது சில மாற்றங்கள் செய்து அமல்படுத்துவது நல்லது. இந்த விவகாரத்தில் ஈகோ பார்க்காமல் நாட்டின் நலனை மட்டுமே மனதில் கொண்டு எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு  மத்திய அரசு செவிசாய்க்குமா?


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • petroLLL

  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

 • pakisthN_11

  கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

 • mask_glovbeess1

  கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

 • 26-06-2020

  26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • vettukili15

  மத்திய பிரதேசத்தில் ஆயிரக்கணக்கில் புற்றீசல் போல படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்: ஆபத்தை அறியாமல் பலர் செல்போனில் படம்பிடிக்கும் கொடுமை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்