SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா வைரஸ் பாதிப்பின் நிலைமையை அறிந்து தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு: முதல்வர் எடப்பாடி பேட்டி

2020-04-10@ 00:04:33

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயின் நிலைமையை அறிந்துதான், ஊரடங்கு நீடிக்கப்படுமா,  முடித்துக்கொள்ளப்படுமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கூறினார்.தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள 12 ஒருங்கிணைப்பு குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில், ஆலோசனை நடத்தினார். இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம், தமிழக டிஜிபி திரிபாதி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் சிறப்பான முறையில் நடந்து வருகிறது. கொரோனா வைரஸ் நோயின் நிலைமையை அறிந்துதான், ஊரடங்கு நீடிக்கப்படுமா, முடித்துக்கொள்ளப்படுமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். இது ஒரு தொற்றுநோய். நாளுக்கு நாள் தொற்று நோய் பரவல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த வாரம் 150 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு இருந்தனர். இன்று 738 ஆக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, 19 பேர் கொண்ட மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களிடமும், அரசு சார்பில் அமைக்கப்பட்ட 12 பேர் குழுக்களிடமும் ஆலோசனை பெற்று வருகிறோம்.

இதையெல்லாம் ஆராய்ந்துதான் அரசு முடிவு செய்யும். தமிழகத்தில் கொரோனா தொற்று 2வது கட்டத்தில்தான் தற்போது வரை இருக்கிறது. 2வது நிலையிலேயே கட்டுப்படுத்துவதற்குதான் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

10ம் வகுப்பு தேர்வு முக்கியம்:
தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு குறித்து இதுவரை எந்த முடிவும்  எடுக்கவில்லை. 10ம் வகுப்பை பொறுத்தவரை தேர்வு எழுதினால்தான் யார் சிறப்பாக  படிக்கிறார்கள் என்பது தெரியும். 9ம் வகுப்பு வரை என்றால் அனைவரும்  தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால் 10ம் வகுப்பு என்பது  அடுத்தக்கட்டத்துக்கு நகர்வது. இது ஒரு முக்கியமான தேர்வு. இதுகுறித்து  அரசு பரிசீலித்துக் கொண்டு இருக்கிறது என்று முதல்வர் கூறினார்.

₹100 கூட நிதியாக தரலாம்:
முதலமைச்சர் நிவாரண உதவித்தொகையாக இதுவரை 101 கோடி வந்துள்ளது. இது கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக செலவு செய்யப்படும். நாட்டு மக்கள் தாராளமாக கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு அரசுக்கு நிதி வழங்க வேண்டும். பெரிய தொகையாக வழங்க வேண்டும் என்பதல்ல, ஒரு 100 ரூபாய் இருந்தால்கூட தங்களால் இயன்ற நிதியை அனுப்பலாம் என்றார்.

போக்குவரத்து காவலர் குடும்பத்துக்கு 10 லட்சம்:
சென்னை, மயிலாப்பூரில் இரவு பகல் பாராமல் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி  வந்த போக்குவரத்து காவலர் அருண்காந்தி (33) நேற்று முன்தினம்  பட்டினப்பாக்கம் சந்திப்பில், கொரோனா தொற்று ஊரடங்கு பணியில் இருந்தபோது  நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்து விட்டார். அவரது குடும்பத்திற்கு சிறப்பு  நிவாரணமாக முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து 10 லட்சம்  வழங்கப்படும். ஊரடங்கின்போது  எதிர்பாராதவிதமாக பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் இறக்க நேரிட்டால் அவர்கள் குடும்பத்திற்கும் 10 லட்சம்  மற்றும் தகுதியின் அடிப்படையில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் கூறினார்.

நிதியை பொறுத்து  பொதுமக்களுக்கு உதவி:
தூய்மை பணியாளர்கள், கதர் கிராம தொழிலாளர்கள், மீனவர், மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர், சிறு வியாபாரிகள், பூசாரிகள், உலாமாக்கள், நாட்டுப்புற கலைஞர்கள், சீர்மரபினர், நரிக்குறவர், திரைத்துறை ஆகிய நல வாரியத்தில் உள்ள 7 லட்சம் பேருக்கும் தலா 1000 வழங்கப்படும். தமிழகம் முழுவதும் 1,300 பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் 1,20,200 தொழிலாளர்களுக்கும் தலா 1000 அரசு வழங்கும்.  அரசிடம் இருக்கும் நிதியை பொறுத்து பொதுமக்களுக்கு உதவிகள் வழங்கப்படும். மற்ற மாநிலங்களில் கூட அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டது. ஆனால் தமிழக அரசு ஊழியர்கள் இந்த நேரத்தில் அரசுக்கு ஆதரவாக இருந்ததால் எந்தவித பிடித்தமும் செய்யப்படவில்லை என்று முதல்வர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-06-2020

    03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • schoolopen3

    சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

  • assam3

    தெற்கு அசாமில் தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு: மண்ணில் புதைந்து 20 பேர் பரிதாப பலி!!!

  • 02-06-2020

    02-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 01-06-2020

    01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்